April 15, 2020

நெருப்பில் எரித்தாலும், நிலத்தில் சுட்டாலும் ஈமானோடு வாழ்ந்தவன் நதிகள் ஓடும் சுவனத்தை காண்பான்

கவலைப்படாதே சகோதரா, அவை சிலந்திக் குஞ்சுகள்

முஹம்மத் பகீஹுத்தீன்

சிலந்தியின் வீட்டை மிகப் பலவீனமான வீட்டுக்கு குறியீடாக அல்குர்ஆன் கூறுகறது. அல்லாஹ்வை விட்டு விட்டு மற்றவர்களை பாதுகாவலராக எடுத்துக் கொண்டோருக்கு உவமை தனக்கென ஒரு வீட்டை அமைத்துக் கொள்ளும் சிந்தியாகும். வீடுகளிலேயே மிகவும் பலவீனமான வீடு சிலந்தி வீடாகும். அவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டாமா? (சூரா அன்கபூத் வசனம்:41) 

இந்த வசனம் தரும் அறிவயில் அற்புதங்கள் ஆச்சரியமானது

ஒன்று: 

மேற்கூறிய வசனத்தில் சிலந்தி என்ற அறபுப் பதம் பெண் பாலாக பாவிக்கப்பட்டுள்ளது. காரணம் பெண் சிலந்தியே வீட்டை நிர்மாணிக்கிறது. நூலாம்படைக் கோட்டையை கட்டுவது பெண் சிலந்திதான் என்பது மிக அண்மையில் கண்டு பிடித்த விஞ்ஞான உண்மையாகும். அல்-குர்ஆன் இறங்கும் போது இந்த உயிரியல் உண்மை அறியப்பாடாத ஒரு விடயமே.

இரண்டு:

அல்குர்ஆன் சிலந்தி வீட்டை பற்றி குறிப்பிடும் போது அதன் வீடுதான் மிகவும் பலவீனமானது என்று கூறியதே தவிர அதன் வலையையோ அல்லது நூலையோ பலவீனம் எனக் குறிப்பிடவில்லை.

இன்றை அறிவியல் உண்மை என்ன வென்றால் உருக்கை விட சிலந்தியின் நூல் மூன்று மடங்கு உறுதியானது. மேலும் பட்டு நூலை விட பலமானதுமும் நெகிழ்வுத் தன்மையும் கொண்டது. எனவே சிலந்தி வலை அதன் தேவைக்கு ஏற்ப பலமான பாதுகாப்பான ஒரு கோட்டையாகும். 

அப்படியென்றால் அல்குர்ஆன் அந்த வீட்டை மிகப் பலவீனமான வீடு என ஏன் கூறியது? அதன் ரகசியம் என்ன?

மூன்று:

ஆம் அதுவும் அண்மையில் அறிவியல் கண்டு பிடித்த ஒரு உண்மைதான். சிலந்தி வீடு என்பது மனிதன் பாராம்பரியாமக 'வீடு' எனும் போது கருத்திற் கொள்ளும் பெறுமானங்கள் அற்ற ஒரு வீடாகும். நாகரிகமடைந்த மனித வீட்டில் அமைதி, பாதுகாப்பு, நிம்மதி குடியிருக்கும். 

ஆனால் சிலந்தி வீட்டில் இந்தப் பெறுமானங்கள் இல்லவே இல்லை. பெண் சிலந்தி புணர்ச்சிக்குப் பிறகு ஆண் பூச்சியை கொன்று சாப்பிடும். எனவே அது எப்போதும் வீட்டுக்கு வெளியே சென்று வாழவே முற்படும். அதற்கு வீட்டில் நிம்மதியில்லை. சிலந்திக் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததும் ஒன்றையொன்று கொன்று சாப்பிட்டுவிடும். அங்கே அன்பு, அமைதி, பாதுகாப்பு, நிம்மதி எதுவுமே இருக்காது. இந்தப் பெறுமானங்கள் அற்ற வீடு பலவீனமானதே. எனவே அல்குர்ஆன் சிலந்தி வீட்டை மிகவும் பலவீனமான வீடு என வர்ணிக்கின்றது.  

பாடங்களும் படிப்பினைகளும் 

1) சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தில் அசத்தியம் பலமான கோட்டைக்குள் வாழ்ந்தாலும் அது சிலந்தி வீடே. தன்னளவில் உயிரோட்டம் இல்லாத வெற்றுக் கண்களால் பார்க்க முடியாத கொரோனே வைரஸ் இன்று, உலகை ஆட்டிப்படைத்த, நினைத்ததெல்லாம் ஜெயித்து வந்த வல்லரசுகளையெல்லாம் உறங்க வைத்துள்ளது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் அத்தனை நாடுகளும் நிம்மதியில்லாத ஒரு சிலந்தி வீடாக மாறியுள்ளது. சத்தியத்தை நேசிப்பவர்கள் அதனோடு வாழ்வதற்கு அஞ்சத் தேவையில்லை. அவர்கள் பார்வைக்கு பலவீனர்களாக இருந்தாலும் பலமான கோட்டையில் இருக்கிறார்கள். 

2) எந்தப் பெயர் கூறி அழைத்தாலும் இன்று உலகில் நடைபெறுவது ஈமானுக்கும் சடவாதத்திற்கும் இடையிலான போராட்டமே. சடவாதம் ஒரு சிலந்தி வீடாகும். பணத்துக்கு ஆசைப்பட்டு ஈமானை விற்று உலகை வாங்கும் மனிதன் இறுதியில் கைசேதப்படுவான். கைக்கு மாறும் பணத்தால் பெருகும் பெருட்கள் அழிந்து போகும் நூளாம்படையாகும். 

3) இந்த நூற்றாண்டின் போரட்டத்தில் பிரதான ஆயுதம் ஊடகமே. ஏதிரிகளின் ஊடகம் அது எவ்வளவு பலம் வாய்ந்ததாக இருந்தாலும் சிலந்தியின் வீடாகும். பொய்களையும் வதந்திகளையும் பரப்பும் ஊடக பலத்தை கண்டு நம்பிக்கை இழக்காதீர்கள். வெறுப்பையும், குரோதத்தையும் கொளுத்திவிடும் இனவாதத் தீச்சுவாளை பற்றியெரிகிறது என்று பயங்கொள்ளாதீர்கள். 

அபூலஹப் சத்தியத்திற்கு எதிரான பிராசார ஊடகத்தின் ஒரு குறியீடாக திகழ்ந்தவன். இறுதியல் செத்து, புழுத்து, நாறிப்போனான். பிணத்தை புதைப்பதற்கு சொந்தங்களே பின்வாங்கியது. சத்தியத்திற்கு எதிராக  கடைபோடும் ஊடகங்கள் அபூலஹபைப் போன்றே நாசமடைவார்கள். காரணம் அவை பார்வைக்கு பலமாக இருந்தாலும் ஒரு சிலந்தி வீடாகும்.

4) நெருப்பில் எரித்தாலும் நிலத்தில் சுட்டாலும் ஈமானோடு வாழ்ந்தவன் நதிகள் ஓடும் சுவனத்தை காண்பான். இது சத்தியம். எனவே சத்தியத்துடன் இருப்பவர்கள் பதர மாட்டார்கள். நிலைகுலைய மாட்டார்கள. 

மன வருத்தம் தரும் நிகழ்வு என்றால் பொறுமை கொள்வார்கள். மன மகிழ்ச்சியென்றால் நன்றியுணர்வோடு வாழ்வார்கள். சத்தியத்தின் சொந்தக்காரன், அல்லாஹ்வுடன் இருப்பதை பலமாகவே காண்பான். அந்த உண்மையான எஜமானுக்கு எதிராக  உலகமே திரண்டு வந்தாலும் அவர்களை பெண் சிலந்தி கட்டிய வீட்டில் வாழும் குஞ்சுகாளவே காண்பான்.

2 கருத்துரைகள்:

Alhamdulillah brother well explain article. Lets all be patience and Stretched our both hands towards Almighty.

said 1000 and 1000 % true

Post a Comment