Header Ads



வைத்தியரை தாக்கியவர் விடுதலை, போராட்டத்தில் குதிப்போம் என அரச வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கம்பஹா மாவட்ட பெரிய வைத்தியசாலை வைத்தியர் மீது தாக்குதல் மேற்கொண்டவருக்கு பிணை வழங்கியிருப்பதால் வைத்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனால் சந்தேக நபரை மீண்டும் கைது செய்யவேண்டும். இல்லாவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கம்பஹா வைத்திய கிளை தலைவர் வைத்தியர் அருண முனசிங்க தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் கம்பஹா வைத்தியசாலை வளாகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கம்பஹா பொது வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் உயிரிழந்தமையை அடிப்படையாகக்கொண்டு அவரின் புதல்வர் ஒருவர் ஆத்திரமடைந்து கடமையில் இருந்த வைத்தியர் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொண்டுள்ளார். பொலிஸார் விரைந்து வந்து பாதுகாக்காவிட்டால் வைத்தியரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்திருக்கும்.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்து கம்ஹா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து நீதிமன்றம் சந்தேக நபரை பிணையில் விடுவித்திருக்கின்றது.

தாக்குதலுக்கு ஆளான வைத்தியர் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

அதனால் வைத்தியரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சந்தேக நபரை மீண்டும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.

அத்துடன் தாக்குதலை மேற்கொண்ட நபர் வைத்தியரை கொலை செய்வதாகவே அச்சுறுத்தியுள்ளார். அவ்வாறான நபருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிமை தொடர்பில் எமக்கு கேள்வி எழுப்பமுடியாது.

அதனால் வைத்தியரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சந்தேக நபரை கைது செய்து முறையான தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால் இதனை அடிப்படையாகக்கொண்டு நாங்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றுக்கு செல்லவேண்டிவரும். அவ்வாறு இடம்பெற்றால் முழு நாடும் செயலிழந்துவிடும்.  இதற்கு முன்னரும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றபோதும் நாங்கள் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

எனவே சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டத்துக்கு செல்வோம். இதுதொடர்பாக  எமது தாய் சங்கமான அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துக்கும் அறிவித்திருக்கின்றோம் என்றார்.

1 comment:

  1. GMOA a racist body. They were completely silent regarding dr shafi's matter.

    ReplyDelete

Powered by Blogger.