Header Ads



அமெரிக்கா பணக்காரர்களின் நாடல்ல, கொரோனா உடைத்திருக்கும் மாய பிம்பம்

கொரோனா அப்டேட்டைப் போலவே தினந்தினம் புதிய அதிர்ச்சிக் கொடுக்கிறார் ட்ரம்ப். அவரின் செயல்பாடுகளும் கருத்துகளும் அமெரிக்கர்கள் அல்லாது மொத்த உலகையும் பயமுறுத்துகிறது.

ஒரேயொரு வைரஸ் உலகின் கடந்த ஒரு நூற்றாண்டு வளர்ச்சியைக் கண்டு எக்களித்துச் சிரிக்கிறது. கற்பனைகள் எல்லாம் நிஜமாகிறது; அசாத்தியம் என நாம் நினைத்ததெல்லாம் சாதாரணமாகிவிட்டது. எது வளர்ச்சி என்பதற்கான வரையறை திருத்தப்பட்டிருக்கிறது. பிரமாண்டமாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள் எல்லாம் சிதைந்துகொண்டிருக்கின்றன. இதுவரை வல்லரசாக, சர்வ வல்லமை படைத்த உலகின் பெரும் சக்தியென நாம் நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்கா, மரண ஓலங்களுக்கிடையில் நொறுங்கிக்கொண்டிருக்கிறது. சமீபத்திய தரவுகளோடு அமெரிக்காவின் யதார்த்தத்தை அலசுகிறது இந்தக் கட்டுரை...

கொரோனா அப்டேட்டைப் போலவே தினந்தினம் புதிய அதிர்ச்சிக் கொடுக்கிறார் ட்ரம்ப். அவரின் செயல்பாடுகளும் கருத்துக்களும் அமெரிக்கர்கள் அல்லாது மொத்த உலகையும் பயமுறுத்துகின்றன. நவம்பரில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்குள் பொருளாதார பாதிப்பை நீக்கி இயல்புநிலையை அடைய வேண்டும் என நினைக்கும் ட்ரம்ப்பின் அவசரத்திற்கு முன் அமெரிக்கா திணறிவருகிறது. இத்தனை ஆபத்தான நிலையிலும் மாகாணங்கள் விதித்த ஊரடங்கை நீக்க முனைப்புக் காட்டி வருகிறார் ட்ரம்ப். கொரோனா நோயைக் குணப்படுத்த மனித உடலில் நேரடியாகச் செயற்கை ஒளியைச் செலுத்துங்கள்; கிருமிநாசினியைப் பயன்படுத்துங்கள் என்று கலவரப்படுத்துகிறார்; நான் எவ்வளவு உழைக்கிறேன் தெரியுமா எனக் கோபமாக ட்வீட் செய்கிறார்; மருந்து வேண்டும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுகிறார்... இப்படி தினம் தினம் புதுப்புது வகையான அதிர்ச்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், தன் கண் முன்னே சிதையும் அமெரிக்கர்களின் வாழ்வைப் பற்றித்தான் மிகக் குறைவாகக் கவலைப்படுகிறார். கொரோனா அச்சுறுத்தல் அமெரிக்காவைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணங்களால் மக்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். அடிப்படை உணவு முதல் வேலைவாய்ப்பு இழப்பு வரை மொத்த வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. உலகளவில் அதிகபட்சமாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு, ஏப்ரல் 28-ம் தேதி நிலவரப்படி சுமார் 57,000 பேரைப் பலிகொடுத்திருக்கிறது அமெரிக்கா.

முறையான கண்காணிப்பு இல்லாதது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது, அலட்சியம் என இதற்குப் பல காரணங்கள் உண்டு. இவற்றோடு, அதிக உயிர்களை அமெரிக்கா பறிகொடுக்கக் காரணம் அதன் மருத்துவ கட்டமைப்பே முக்கியமான காரணம் எனப் பலர் கருதுகிறார்கள். அமெரிக்காவில் பொது மருத்துவம் இல்லை. அதாவது, ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளின் கொள்ளை கட்டணங்களை மருத்துவ காப்பீடுகள் இன்றி மக்களால் சமாளிக்க முடிவதில்லை. அப்படியிருக்க, உணவிற்கே திண்டாடும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு எட்டாக் கனியாக உள்ளது. இந்நிலையில், கொரோனா சிகிச்சை பெற வசதியற்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆகும் செலவைச் சமாளிக்க முடியாத காரணத்தினால்தான், பலரும் சிகிச்சை பெறாமல் மடிகிறார்கள் என்கின்றது ஒரு அமெரிக்கப் பத்திரிகை செய்தி.

மக்கள் மருத்துவ காப்பீட்டையே நம்பி இயங்கும் இந்நிலையில்தான், ஒபாமா அரசு அனைவருக்குமான காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியது. 'ஒபாமா கேர்' என்றழைக்கப்படும் இத்திட்டத்தின்படி, அனைவராலும் செலுத்தக்கூடிய வகையில், வருமானத்தை அடிப்படையாகக்கொண்ட முன்தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதனால், அடித்தள மக்கள் பலர் பலன்பெற்றார்கள். அதேசமயம், காப்பீட்டில் கட்டாயம் இணைய வேண்டும் என்பது போன்ற கொள்கைகள் மக்களின் சுதந்திரத்திற்கு எதிரானது என்று சில விமர்சனங்களும் எழுந்தன. 2010-ம் ஆண்டு அமலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் வழியாகவே பெரும்பாலான அமெரிக்க மக்கள் மருத்துவ காப்பீடு பெற்றனர்.

ட்ரம்ப், ஒபாமா கேரின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தார். இதனை, சட்ட விரோதமானது, மக்களை நிர்ப்பந்திக்கும் திட்டம் என்றுகூறி நீக்க முயன்றவர் அதற்கு மாறாக, 'அனைவருக்குமான மருத்துவத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி, ஒரு காப்பீட்டு நிறுவனம், தான் விரும்பும் முன்தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம், விருப்பமில்லாத மக்கள் காப்பீட்டிலிருந்து விலகிக்கொள்ளலாம். இப்படி நிறுவனங்களுக்கு ஆதரவான அம்சங்களை மட்டுமே கொண்டிருந்ததால் பெரும் மாற்றங்களை நிகழ்த்தாத இந்தத் திட்டம் அமலுக்கு வரவில்லை.

அமெரிக்காவில், அனைவருக்கும் மருத்துவம், மருத்துவக் காப்பீடு, சுகாதார கட்டமைப்பு என்பது இந்தியாவின் நதிநீர் இணைப்பு போன்ற மிக முக்கியமான ஓர் அரசியல். தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகள் கையிலெடுக்கும் முக்கியமான ஆயுதம். அவ்வகையில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து சமீபத்தில் விலகிய பெர்னி சாண்டர்ஸ் 'அனைவருக்கும் மருத்துவம்' (Medicare for All) என்ற கொள்கையினையே முதன்மைத் திட்டமாக வகுத்தார். 'ஜனநாயக சோசலிசத்தில்' ஆர்வமுடைய சாண்டர்ஸ் 'Single Payer Health Care System' என்ற திட்டத்தைக் கையிலெடுத்தார்.

இதன்மூலம், கனடா போன்ற நாடுகளைப் போல் காப்பீட்டுத் தொகையை ஒற்றை அரசே அனைவருக்கும் செலுத்தும். மூன்றாம் நபர் இடையீடு போன்ற குறைகளைக் களைந்து தனியார் ஆதிக்கத்தை ஒழுங்குபடுத்தப்படும் என்று ஒரு கனவை முன்மொழிந்தார். ஆனால், 'பணமே இல்லாமல் மருத்துவம் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், முதலில் இத்திட்டமெல்லாம் சாத்தியமே இல்லை' போன்ற எதிர்ப்புகளால் அந்தக் கனவு தகர்க்கப்பட்டது. விளைவு, பெரும் ராணுவ சக்தியுடைய பலமான அமெரிக்காவின் குடிமக்கள் மிகப் பலவீனமாகச் செத்து மடிகிறார்கள்.

அமெரிக்கா பணக்கார நாடுதான், ஆனால் எல்லா அமெரிக்கர்களும் பணக்காரர்கள் அல்லர். பொருளாதார இடைவெளியில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வைக் கொண்ட நாடு அமெரிக்கா. அனைத்து வளங்களையும் குவித்து வைத்துள்ள பணக்காரர்களும், அடிப்படை சுகாதார, மருத்துவ வசதிகள்கூட இல்லாத ஏழைகளும்தாம் அமெரிக்காவின் நிஜ முகம்.

அங்கிருக்கும் 1% பணக்காரர்கள், 92% அடித்தள மக்களைவிட அதிக வளங்களைக் குவித்து வைத்திருக்கிறார்கள். அமெரிக்க அரசின் பாதி சொத்தைவிட, அங்கிருக்கும் மூன்று குடும்பங்கள் அதிக சொத்தை வைத்துள்ளது என்கிறது ஒரு கணக்கு. சராசரியாக, ஒரு ஏழை அமெரிக்கனைவிட வசதிப்படைத்த அமெரிக்கன் கூடுதலாக 20 ஆண்டுகள் உயிர் வாழ்கிறான். சூடானிய ஆண்களோடு ஒப்பிடுகையில், குறைந்த வருமானமுடைய அமெரிக்க ஆண்களின் இறப்பு விகிதம் அதிகம். முறையான கவனிப்பு இருந்தால் ஆண்டுக்கு 21,000 அமெரிக்கக் குழந்தைகள் காப்பாற்றப்படலாம். அமெரிக்காவில், மருத்துவ வசதியின்றி மணிக்கு 2 குழந்தைகள் பலிகொடுக்கப்படுகிறார்கள். இவையெல்லாம் பலதரப்பட்ட ஆய்வு முடிவுகள்.

இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், அமெரிக்கா எனும் ஏகாதிபத்தியம் தான் செயல்படுவதும், உலக நாடுகளின் மீது அதிகாரம் செலுத்துவதும், அமெரிக்காவின் மக்களுக்காக அல்ல. பெரும் சக்தியென நமக்குக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவின் பிம்பம் வெகு சில பெரும் முதலாளிகளின் பிம்பமே.

இந்நிலையில், தொழிலதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் ஆனதும், பெரு நிறுவனங்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் என நம்பினார். நாட்டின் வளர்ச்சி என்பது மக்கள் சார்ந்ததாக இல்லாமல், அதன் பொருளாதாரம் சார்ந்தது என்ற நம்பிக்கையின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன. இவ்வளவு உயிரிழப்புகள் நேர்ந்தும் இன்றுவரை அமெரிக்காவின் அரசு பொது ஊரடங்கோ, முடக்கநிலையோ அறிவிக்கவில்லை. மக்களின் உயிரைவிடப் பொருளாதாரம் சீர்கெடாமல் இருப்பது, அதனைக் காப்பது அங்கு அதி அவசியம்.

இன்றுவரை அமெரிக்காவில் 50 மாகாணங்களின் செனட்டர்கள் (உதாரணத்திற்கு, இந்தியாவின் மாநில முதல்வர்களைப்போல) தனித்தனியாகக் களத்தில் போராடிக்கொண்டிருக்க, அதிபர் ட்ரம்ப் அதிகம் செயல்படுவது சமூக வலைதளத்தில் மட்டுமே. அதுவும் மேற்சொன்ன வகையில், விவகாரமான கருத்துக்களால் பேரதிர்ச்சிகளை மட்டுமே கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

மார்ச் மாதம் 15-ம் தேதி வரை, கொரோனா என்னும் பெரும் தொற்று நோய் குறித்து எந்தக் கவலையும் கொள்ளவில்லை ட்ரம்ப். அதுமட்டுமல்ல, இது கவலை கொள்ளும் விஷயமல்ல என்று பேட்டியெல்லாம்கூட கொடுத்திருக்கிறார். ட்ரம்ப் ஜனவரி தொடங்கி மார்ச் வரை அப்படிப் பேசிய காட்சிகளின் தொகுப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் சாரா லோங்வ்ல் எனும் அமெரிக்க அரசியல் ஆலோசகர். அவரது ட்வீட்டில் "ட்ரம்ப் இந்தப் பெரும் தொற்றை உருவாக்கவில்லைதான். ஆனால், இந்தப் பிரச்னையை மோசமான நிலைமைக்குத் தள்ளியவர், அது பெருமளவில் பரவுவதற்குக் காரணமானவர் அவர்தான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் இந்தப் போக்கிற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

ஒன்று, இந்த நோய் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் அவருக்கு இருந்த அறியாமை மற்றும் அலட்சியம்.

இரண்டு, நவம்பர் மாத அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றியடைய வேண்டும் என்ற லட்சியம்.

தேர்தலுக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் தொடர்பு உண்டு என்று உறுதியாக நம்புகிறார் ட்ரம்ப். நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதன் மூலமே, தனது வாக்கு வங்கியைப் பலப்படுத்த முடியும் என்பது அவரது நம்பிக்கை. முடக்கம் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தால், பொருளாதாரம் பாதிப்படையக்கூடும், நவம்பர் மாதம் தேர்தல் நேரத்தில் அது ஆபத்தாக மாறும் என்ற பயமே அதிபர் ட்ரம்ப்பின் செயலற்ற போக்கிற்குக் காரணம் என்று அவர் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

நேரடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பது மட்டுமல்ல, நிலைமையின் தீவிரத்தைக்கூட அவர் மக்களிடம் குறைத்தே காட்டியிருக்கிறார் என்பதே வருத்தத்திற்குரிய விஷயம். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், அவரது பேச்சுகள் யாவும் அவர்களுக்குத் தவறான கருத்துகளைப் பரப்புவதாகவேதான் இருந்துள்ளன. கிருமிநாசினியை உடலில் செலுத்தினால் என்ன என்ற அவர் கருத்தைக் கேட்டு கிருமிநாசினி அருந்தியிருக்கிறார்கள் சிலர். சுமார் 20 மாகாணங்களில் முடக்கத்தையும் ஊரடங்கையும் தளர்த்தக் கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர் மக்கள். மக்களின் ஒத்துழைப்பை உறுதிசெய்ய வேண்டிய அதிபர், அதைத் தவிர மற்றதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார். சில மாகாணங்களில் பள்ளிகளைத் திறக்குமாறு மாகாண செனட்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கிறார். ஏப்ரல் 27-ம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிபர் ட்ரம்ப், வைரஸ் நோய் பரிசோதனைகள் அதிகப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் என்பது மட்டுமே இப்போதைய ஒரே ஆறுதல். இன்றைய உயிரிழப்புகளைத் தாண்டி, நாளை என்ன நடக்கும் என்ற சர்வதேச பயம் அமெரிக்காவையும் விட்டுவைக்கவில்லை.

அமெரிக்காவில் கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 26 மில்லியன். அதில் சுமார் நாலரை மில்லியன் மக்கள் முதல் முறையாக வேலையற்றவர்களாக மாறியிருக்கிறார்கள். அன்றாடம் உணவிற்கு வழியின்றி, இலவச உணவிற்காக இவர்களில் பெரும்பாலானோர் கையேந்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிபர் ட்ரம்ப் நினைப்பதுபோல நாளையே மீண்டும் பள்ளிகளும் உணவகங்களும் திறக்கப்படும் என்றாலும், முன்பைவிட பாதி பேருக்கு மட்டுமே வேலை இருக்கும். வேலையற்ற மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் என்பது பெரும் கேள்விக்குறியே. உண்மையில் வளரும் மூன்றாம் உலக நாடான இந்தியாவைவிட, வளர்ந்த முதல் உலக வல்லரசான அமெரிக்காவின் நிலை மோசமாக இருக்கிறது.

அணு ஆயுதங்களோடு மாந்தர்களின் போருக்குத் தயாராக இருந்த அமெரிக்கா, இயற்கை தொடுத்த போருக்குத் தன்னை தயார்ப்படுத்திக் கொள்ளவே இல்லை என்பதுதான் அங்கு மரித்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் உணர்த்தும் உண்மை. நம்மிடம் எஞ்சியிருப்பது வளர்ச்சி என்பது எது என்ற கேள்வி மட்டுமே!

1 comment:

  1. இவர் ஒரு பச்சை லூசன் என்பது யாவரும் அறிந்த விடையம். இப்போ கொரோன அதை நிருபித்து கொண்டிருக்கிறது. அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று நிதானமாக கொல்லும்.

    ReplyDelete

Powered by Blogger.