Header Ads



கொரோனா வைரஸ்,, பட்டினியுடன் போராடும் ரோஹிஞ்சா அகதிகள்

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

அகதிகளாக உள்ள ரோஹிஞ்சாக்கள் சட்டப்படி வேலை பார்க்க அனுமதியில்லை. எனவே இவர்களில் பலர் குப்பைகள் சேகரிப்பது, சிறு வணிகர்களுக்கு உதவிகரமாக இருப்பது, உணவகங்களில் பணியாற்றுவது என சிறிய அளவில் வருமானம் ஈட்டி வருகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு 10 முதல் 25 மலேசிய ரிங்கிட் மட்டுமே (இந்திய மதிப்பில் சுமார் ரூ.430) இவர்களுக்கு அதிகபட்சமாக கிடைக்கும். அகதிகள் என்பதால் அரசாங்கம் குடிமக்களுக்கு வழங்கும் இலவசப் பொருட்கள், உதவித்தொகை உள்ளிட்ட எந்த சலுகையும் கிடைக்காது.

வேலைக்கும் செல்ல முடியாமல், வீட்டை விட்டு வெளியேறவும் இயலாமல் ஆயிரக்கணக்கான அகதிகள் அவதிப்படுவதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

ரோஹிஞ்சா அகதிகள் பெரும்பாலும் தினக்கூலிகளாக உள்ளனர். அதனால் அரசாங்கம் மேற்கொண்டுள்ள திடீர் நடவடிக்கைகளால் நிலைகுலைந்து போயிருப்பதாகத் தெரிகிறது.

முந்தைய ஆட்சியாளர்கள் அகதிகள் மலேசியாவில் சட்டப்படி வேலை பார்க்க விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்படும் என அறிவித்திருந்தனர். இதனால் அகதிகள் மத்தியில் நம்பிக்கை நிலவியது. ஆனால் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் முன்பே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

இது தொடர்பாக புதிய அரசாங்கம் எத்தகைய முடிவை எடுக்கும் என்பது தெரியாத நிலையில், கொரோனா வைரஸ் தொற்றும், மலேசியாவில் உள்ள ரோஹிஞ்சா உள்ளிட்ட பிற அகதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது. இவர்களில் பலர் வேறு வழியின்றி பிச்சை எடுப்பதிலும், பொது மக்களின் கருணையால் கிடைக்கும் பொருட்களைப் பெறுவதிலும் முனைப்பு காட்டுகின்றனர்.

சிலர் சமூக அமைப்புகளும் தன்னார்வலர்களும் வழங்கி வரும் அரிசி மட்டுமே இவர்களின் பசியைப் போக்க கைகொடுக்கிறது. அதனால் காய்கறிகள் இல்லாத வெறும் சோற்றை மட்டுமே, அதிலும் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு தங்களுக்கும் நாளைய பொழுது நல்லபடியாக விடியும் என்ற நம்பிக்கையில் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

தற்போது கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் மலேசியா போரிட்டு வருகிறது எனில், ரோஹிஞ்சாக்கள் பட்டினியுடன் போராடி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.