Header Ads



எனதன்பின் முஸ்லிம் சொந்தங்களே - இது கட்டளையல்ல, ஓர் அன்பான வேண்டுகோள்

நான் உங்களது அரசியல் தலைமையோ அல்லது மார்க்கத் தலைமையோ அல்ல. எனவே நீங்கள் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. ஆனாலும் ஒரு சகோதர பாசமும், வேதனையின் வலிகளும் இதனை சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் ஆழமாக விதைத்திருக்கின்றன. ஒருபுறம் பலியாடுகளாக ஆக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற அதே வேளை மறுபக்கம் நமது அறிவீனமான செயற்பாடுகளால் நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்கின்ற துர்ப்பாக்கியமான ஒரு சூழலுக்குள் நாம் இருக்கிறோம். 

இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களும் இந்த நாட்டுக்கு ஓர் அருட்கொடையாக அமைவதும், ஒரு சாபக்கேடாக அமைவதும் எமது கரங்களிலேதான் தங்கியிருக்கிறது. 

கடந்த வருடம் இதே மாதத்தில், எம்மில் மிக மிகக் குறைந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் ‘தாமும் அழிந்து பிறரையும் அழிப்பதுதான் வாழ்க்கை’ என நினைத்ததன் விளைவாக ஒரு பெரும் அனர்த்தத்துக்குள் இந்த நாட்டையும் அதன் மக்களையும் தள்ளி விட்டுச் சென்றனர்.

எம்மில் இன்னுமொரு சாரார், ‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தாம் வாழ வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கும் இறங்கத் தயார்’ என்ற இன்னுமொரு தீவிரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனர்.

எம்மில் இன்னுமொரு தரப்பினர் தற்போது பரவும் நோயின் தீவிரத்தையும், கொடூரத்தையும் சட்டை செய்யாது சட்டங்களையும் ஒழுங்குகளையும் மீறினர்/மீறுகின்றனர். 

எம்மில் பெரும்பாலானவர்கள் எல்லாவற்றிலும் கருத்துச் சொல்லப் போய், தாமும் உணர்ச்சி வசப்பட்டு, அடுத்தவர்களையும் உணர்ச்சியூட்டி நிலைமையின் பாரதூரத்தை இன்னுமின்னும் அதிகரித்து விடுகின்றனர்.

எம்மில் பலர், மார்க்கம் பற்றிய புரிதலில் உள்ள போதாமையின் காரணமாக, அமைதியாக கடந்து போக வேண்டிய பல அம்சங்களில் போர் முரசு கொட்டி விடுகின்றனர்.

எம்மில் இன்னுமொரு சாரார் பிரச்சினையின் பாரதூரம் புரியாமல் சகோதர சமூகத்தவர்களோடு வாதாட்டங்களுக்கும், விவாதங்களுக்கும் போய்க் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையான இஸ்லாமோ...

ஓர் ஒழுங்கின் கீழ், கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் வாழுமாறு எம்மைப் பணிக்கின்றது. அடுத்தவர்களை வாழ வைப்பதற்காக வாழ்ந்து மரணிக்குமாறு எம்மை ஏவுகிறது. தனது மறுமை நலனையும் அடுத்தவர்களது இம்மை நலனையும் முற்படுத்துமாறு வழிகாட்டுகிறது. அதற்கு நிலையான சுவர்க்கம் இருப்பதாக வாக்களிக்கிறது. 

இந்த சந்தர்ப்பத்தில் நாமனைவரும் தீர்க்கமான முடிவொன்றுக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 

எமக்கு முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.

தீவிரவாத இயக்கங்களும், மற்றும் இஸ்லாமிய வெறுப்பாளர்களும் சொல்லுகின்ற மரபணு மாற்றம் செய்யப்பட்ட, பிழையான ‘இஸ்லாத்தின்’ பக்கம் செல்வதா?

அல்லது

யாருடைய காலில் விழுந்தாவது ‘நல்ல முஸ்லிம்’ என்ற பெயருடன் சுயநல வாழ்க்கை ஒன்றை வாழ்வதா?

அல்லது

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த பிரகாரம் எல்லா மனிதர்களுக்கும், ஏனைய ஜீவராசிகளுக்கும் பிரயோசனமுள்ளவர்களாக வாழ்ந்து மரணிப்பதா?

ஓர் உண்மையான முஸ்லிமுக்கு மூன்றாவதைத் தவிர வேறு தெரிவுகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

எனதன்பின் முஸ்லிம் சகோதரனே/சகோதரியே!

சுருக்கமாக மூன்று அம்சங்களை உங்களது கவனத்துக்காக முன்வைக்கிறேன்.

1. சோதனைகளின் போது, தள்ளி விட்டவன் யாரென்று பார்ப்பதை ஒரு புறம் வைத்து விட்டு, ‘நான் ஏன் விழுந்தேன்?’ என்று சிந்திப்பதுதான் ஒரு முஸ்லிமின் முதல் பண்பு. எம் பக்கத் தவறு என்ன? நாம் எங்கு சறுக்கினோம்? இந்த நிலைக்கு நாம் ஆளாகுவதற்கான காரணம் என்ன? என்ற ரீதியில் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

2. அநீதிகள் அதிகமாக அரங்கேறும் போது, உங்களுடன் குரோதம் பாராட்டுபவனுக்கு நீங்களும் பரஸ்பரம் குரோதம் பாராட்டாமல், அவனோடு இங்கிதமாக நடந்து கொள்வதும், அவனுக்கு முடியுமான நன்மைகளை செய்வதும் பகைமையை மறக்கடிக்கச் செய்யும். விரோதிகளை இல்லாமல் செய்வதற்கான மிகச் சிறந்த வழி அவர்களை நண்பர்களாக மாற்றுவதே! என அல்குர்ஆன் சொல்லித் தருகிறது.

3. ஒவ்வொரு நிகழ்வு தொடர்பாகவும் அனைவரும் கருத்துச் சொல்லத் தேவையில்லை. அப்படியான நிலை தோன்றுவது பெரும் குழப்பத்தின் அடையாளம் என இஸ்லாம் வழிகாட்டுகிறது. 

இந்த மூன்று அம்சங்களையும் ஒரு சமூகமாக நாமனைவரும் பின்பற்ற முடியுமானால் அதன் விளைவு எத்தகையதாக அமையும் என்று கற்பனை செய்து பாருங்கள். நிச்சயமாக நாம் ஒரு நாகரிகமடைந்த நிலையை நோக்கி நகர ஆரம்பிப்போம். ஆனால் ‘இதை நீங்களனைவரும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்’ என்று கட்டளையிடுவதற்கு நான் உங்களது தலைவனல்ல. உங்களில் எவரின் மீதும் எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாரண இலங்கைக் குடிமகன்தான். ஆனால் நான் கற்ற இஸ்லாத்திலிருந்து என்னைச் சூழ நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது இப்படியொரு பார்வையைத் தவிர வேறொன்று எனக்குத் தோன்றவில்லை. அதை என்னையொத்த ஏனையவர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு அதிகாரங்கள் எதுவும் தேவையில்லை என்ற வகையில் கனத்த இதயத்தோடு இவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

ஒரு முஸ்லிமின் கவலைகளுக்கான நிவாரணம் பிறர் வாழ்வதற்காக வாழ்வதுதான். அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் இந்த நாட்டு மக்கள் உணர வேண்டுமாயின் அது இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களின் வாழ்க்கை முறைக்கூடாகத்தான் சாத்தியம். எனவே தீர்வு நம் கையில்தான் இருக்கிறது. கொடுக்கத் தயாரானவர்கள் யாருமிருப்பின் இன்றே இப்போதே ஆரம்பியுங்கள். 

இது கட்டளையல்ல! 
ஓர் அன்பான வேண்டுகோள் மட்டுமே!

Affan Abdul Haleem
2020.04.03

5 comments:

  1. மார்க்கத்தை முன்னிறுத்தி கருத்து கூறும்போது அதட்க்கு ஆதாரமான குரான் கதீசை இணைத்தல் அவசியம் !

    ReplyDelete
  2. மிகச் சரியான பதிவு! சகலரும் புரிந்து நடக்க அல்லாஹ் அருள்புரியட்டும்!
    உங்கள் அறிவிலும் ஆரோக்கியத்திலும் அல்லாஹ் பரகத் செய்யட்டும்.!

    ReplyDelete
  3. Mr. PL, அதுக்குள்ள அவசரப்படுகின்றிர்களே.

    ReplyDelete
  4. ஐயோ, முஸ்லிம் முஸ்லிமைக் குறை கூறக் கூடாது. உங்களுக்குத் தெரியாதா?

    ReplyDelete
  5. உள்ளத்தை உருக்கும் அருமையான பதிவு

    ReplyDelete

Powered by Blogger.