Header Ads



அதிகாரத்திற்காக உயிர்களைத் தாரை வார்க்க வேண்டாம் - ஐக்கிய மக்கள் சக்தி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ  விடுத்த அறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று -19- பதிலளித்தது.

நாட்டு மக்கள் பாரதூரமான நெருக்கடியை சந்தித்துள்ள இந்த தருணத்தில் அதிகாரத்தை பெறுவதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் முயற்சி இறுதியில் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் உயிர்களை ஆபத்திற்குள் தள்ளிவிடும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதிகாரத்திற்காக உயிர்களைத் தாரை வார்க்க வேண்டாம் என தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி விடுத்துள்ள அறிக்கையில், நாட்டின் கடன் சுமை தொடர்பாக பிரதமர் நகைப்புக்குரிய கருத்துக்களை வௌியிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பாரிய கடன் சுமையை ராஜபக்ஸ அரசாங்கமே சுமத்தியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இதனை மறந்தவராக வழமையான அவதூறு மற்றும் பொய்களைக் கொண்டு உண்மையை மறைக்கும் முயற்சியே பிரதமரின் கூற்றில் காணப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரம்பம் முதலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை கனவில் உள்ள அரசாங்கத்திடம் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான திட்டமோ நோக்கமோ இருக்கவில்லை எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்படுகின்ற அரசாங்கம் தமது தேவைக்கேற்ப வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாகவே நல்லாட்சி அரசாங்கம் ஏப்ரல் மாதம் வரையான நடவடிக்கைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக இடைக்கால கணக்கறிக்கையொன்றை நிறைவேற்றியிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டமொன்றை சமர்ப்பிப்பதற்கு போதுமான கால அவகாசம் பாராளுமன்றம் கலைப்பதற்கு முன்னதாக ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இருந்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

எனினும், அதற்கான எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளாத பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நிதி அமைச்சர் என்ற வகையில் வழமை போன்று குறை கூறுவதை தொடர்ந்தும் மேற்கொண்டதாகவும் அந்தக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் மஹிந்த ரஜபக்ஸ சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கையில் கடன் எல்லையை அதிகரிக்கும் பிரேரணை தவிர்ந்த ஏனைய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் அறிவித்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் தொடர்பாக ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் பாராளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இரண்டு தடவைகள் உரையாற்றியதாகவும் அந்தக் கட்சியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 21 மில்லியனாக உள்ள இலங்கை சனத்தொகையில் 6000 பேர் மாத்திரமே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார தரப்பினரை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்தகைய நிலைமையின் கீழ், பிரதமர் முன்வைத்துள்ள விடயங்களின் உள்நோக்கம் என்னவென ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

எவ்வாறான நிலைமையிலும் உடனடியாக தேர்தலை நடத்துவதற்கே அவர் முயற்சிப்பதாகவும் அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஒன்றை நடத்த முடியாத தருணத்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பான கருத்துக்களை முன்னிலைப்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து நிவாரணங்களையும் அரசியல்மயமாக்கி, நிவாரண செயற்பாட்டினை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரிடம் கையளித்து தமது அரசியல் வழித்தோன்றல்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ள பிரதமர், இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் மறைமுகமாக அழுத்தம் பிரயோகிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தலுக்கு தயாராவதற்கு தேவையான சூழலை தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கான இலக்கங்களைக் கூட வழங்க முடியாத நிலையில், அரசாங்கம் ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்ற நிலையில், தமக்கு சாதகமானது என கருதும் மைதானத்தில் விளையாடுவதற்கு பிரதமர் முயற்சிப்பதாகவும் அந்தக் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களை ஆபத்திற்குள்ளாக்கும் இந்த முயற்சியால் எவருக்கேனும் உயிர் ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தனது அறிக்கையின் குறிப்பிட்டுள்ளது.

1 comment:

  1. SAJITH SHONNA MARUNDAI KUDITHUVITTU
    ORUVAN SHETHUPONAAN.
    ATHARKU PORUPPU KOORUVATHU YAAR.
    SHINNA MOOLAYAA.?

    ReplyDelete

Powered by Blogger.