Header Ads



தம்மை நாட்டுக்கு திருப்பி அனுப்புமாறு, குவைத்தில் உள்ள இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்

விசா இன்றி சட்டவிரோதமாக குவைத்தில் தங்கிருக்கும் 400 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள், இலங்கை திரும்ப ஆவணம் ஒன்றை வழங்குமாறு கோரி, அங்குள்ள இலங்கை தூதரகத்திற்கு எதிரில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் முற்பகல் இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொரோனா தொற்று காரணமாக குவைத் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள கடும் சட்டத்திட்டங்களை பொருட்படுத்தாது இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தம்மை இலங்கைக்கு திரும்பி அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தாம் கோரி வருவதாகவும், இலங்கை தூதரகத்தில் உள்ள அதிகாரிகள் தூதரகத்தை மூடி விட்டு பதில் எதனையும் வழங்காது இருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

20 நாட்களுக்கு மேலாக குவைத் முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், தாம் தொழில்களை இழந்து உணவுக்கே வழியில்லாமல் இருப்பதாகவும் இதனை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அதேவேளை விசா இன்றி குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேற குவைத் அரசு பொது மன்னிப்பு காலத்தை வழங்கியுள்ளது.

இலங்கை செல்ல இலவசமாக பயணச் சீட்டு வழங்கப்படும் என்பதை உறுதிப்படுத்தி இலங்கை தூதரகத்திடம் இருந்து கடிதம் ஒன்றை பெற்று வருமாறு குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த கடிதத்தை பெற்றுக் கொள்ள தூதரகத்திற்கு பல முறை வந்ததாகவும் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி முதல் தூதரகத்திற்கு எதிரில் காத்திருந்த போதிலும் அதிகாரிகள் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விசா இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இந்த மாதத்திற்குள் குவைத்தில் இருந்து வெளியேற வேண்டும்.

எனினும் தமக்கு தேவையான கடிதத்தை வழங்காது தூதரக அதிகாரிகள் அலுவலகத்தை மூடியிருப்பதாகவும் ஆர்ப்பாட்டகார்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.