Header Ads



கரு தலைமையில், அவசரமாக கூடவுள்ள அரசியலமைப்புப் பேரவை - மஹிந்தவுக்கும், சஜித்திற்கும் அழைப்பு

(ஆர்.யசி)

பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து தொடர்ச்சியாக இழுத்தடிப்பு நிலைமைகள் காணப்படுவதை அடுத்து இணக்கப்பாடு ஒன்றினை எட்டும் விதத்தில்  அரசியலமைப்புப் பேரவை முன்னாள்  சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை வியாழக்கிழமை  (23.04.2020) கூடுகின்றது.

நாட்டில் நிலவும் கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அடுத்து பொதுத் தேர்தல் நடத்தப்படுவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

பழைய பாராளுமன்றம் கூட்டப்பட்டு நிதி அதிகாரம் மீண்டும் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர்கட்சிகள் கூறி வருகின்ற நிலையில் பழைய பாராளுமன்றத்தை கூட்டப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளார்.

இந்நிலையில் இது குறித்து தீர்மானம் ஒன்றினை எடுக்கும் விதத்தில்  நாளைய தினம்  எட்டாம் பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் அரசியல் அமைப்பு பேரவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கூடவுள்ளது.

இக் கூட்டத்திற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும்  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவையும், சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சபாநாயகர் கரு ஜெயசூரிய சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தேர்தலை உரிய முறையில் நடத்தக்கூடிய சூழல் உள்ளதா என்ற விடயங்களை ஆராய சபாநாயகர் சந்திப்புகளை ஏற்படுத்தக்கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.