Header Ads



விளையாட்டு விபரீதமாய் போய்விடுமோ...?

இன்று உலக நாடுகளில் காணப்படும் அத்தனை மனிதனுக்கும் இருக்கும் ஒரே சிந்தனை கொரோனாவும் அதில் இருந்து எப்படி தத்தமது உயிர்களை காப்பாற்றவேண்டும் என்ற சிந்தனையுமே தவிர வேறொன்றும் இல்லை என்றே சொல்லலாம்.  இனம், மதம்,மொழி, கறுப்பன், வெள்ளையன்,ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு எதுவுமின்றி இலட்சக்கணக்கான உயிர்களை காவுகொண்டு இந்தநொடி வரைக்கும் உலகையே புறட்டிப்போட்டுக்கொண்டிருக்கின்றது. 

வல்லரசுகள் ஆகட்டும்,இராணுவ கோட்டைகள் ஆகட்டும்,அணு ஆயுத கண்டங்களாகட்டும், பெற்றோலிய வளைகுடாக்களாகட்டும்,ஆனானப்பட்ட அரச அதிபர்கள் அல்லது மன்னாதி மன்னர்கள் ஆகட்டும் தமது கண்ணில் தெரியாத எதிரியை எதிர்த்து பிரம்மித்துப்போய் நிற்கின்றனர். அதற்கு எமது இலங்கை திருநாடும் அந்நாட்டு மக்களும் விதிவிலக்கானவர்கள் அல்லர்.

வளர்ச்சி அடைந்த சாம்ராச்சியங்கள் கூட சற்று தளர்ந்து போயுள்ள நிலையிலும் சின்னஞ்சிறு தீவான எமது நாடு இந்த கொரோனாவை(covid-19) எதிர்த்து நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாப்பதிலும் மற்றும் நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை கையாளும் முறைகளையும் பார்க்கும் போது பெருமையாகவும், ஆச்சரியமாகவும் காணப்படுகின்றது. அதற்காக நாம் எமது நாட்டு தலைமையையும், நாட்டு மக்களையும் குறிப்பாக பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பாராட்டியே ஆகவேண்டும்.

இவைகளையெல்லாம் தலைகீழாய் கவிழ்த்தது போன்று இன்றைய மக்களின் செயற்பாடு பெரிதும் முட்டால்தனமானதாக காணப்பட்டது. நேற்று 20/4/2020 முழு நாட்டிலும் பிரகடணப்படுத்தியிருந்த ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டது. மக்கள் எதோ கொரோனா முற்றுமுழுதாக அழிந்துவிட்டது என்று நினைத்து ஆட்டு மந்தைகள் போன்று கூட்டமாகவும், ஒருவருக்கொருவர் சமுக இடைவெளியை சற்றும் பின்பற்றாமல் எவ்வளவு முட்டாள் தனமான வேலையை பார்கின்றார்கள் என்று அவர்களுக்கு இன்னும் விளங்கவில்லை. இவர்கள் கொரோனாவை கண்முன்னே பார்க்கவில்லை. கொரோனா நோய் பீடித்தவர்களையும் கண்முன்னே பார்க்கவில்லை. அவ்வாறு பார்த்திருந்தால் இவ்வாறான செயற்பாடுகளை விட்டும் முற்றிலுமாக தவிர்ந்திருப்பர்களோ என்னவோ.

அமேரிக்கா,சீனா,இத்தாலி,ஸ்பெயின்,இரான் போன்ற நாடுகளில் கொரோனா அவர்கள் கட்டுப்பாடின்றி பரவியதற்கு காரணம் நாங்கள் விழிப்புடன் செயற்படவில்லை மற்றும் இதன் ஆபத்து என்னவென்று தெரியாமல் மக்களோடு மக்களாக கலந்து சர்வசாதாரணமாக நினைத்ததே காரணம் என்று சொல்லியது இவர்களின் காதுகளில் கேட்கவில்லையா? அல்லது கண்களினால் பார்த்ததும் இல்லையா? அவ்வாறு இருந்தும் ஏன் இந்த மடமைத்தனம்.

ஆம் நான் கட்டாரில் இருந்தான் இதனை சொல்கின்றேன். ஏனெனில் இந்த சம்பவங்களை பார்க்கும்போது மிகவும் கவலைப்பட்டேன். ஏன் இந்த மக்கள் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றார்கள் என்று நினைத்து. இலங்கையை விட மிகவும் சிறிய நாடுதான் கட்டார். இன்றைய நிலவரப்படி 6000திற்கும் மேற்பட்ட நபர்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். காரணம் வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களை அடையாளம் காண்பதற்கு முன்னர் மக்கள் வழமைபோன்று கூட்டமாகவே செயற்பட்டனர் இதன் மூலம் வேகமாக பரவிவிட்டது. தற்போது இலங்கையிலும் அதே நிலைமை உருவாகியுள்ளதை காணமுடிகின்றது. பேரூந்து வாகனங்களிலும், கடைகளிலும் கூட்டமாக நிற்பதை பார்க்கமுடிந்தது. எந்தவொரு சமுகப்பொறுப்பும் அற்றவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். உதாரணமாக ஒரு பேருந்தில் எத்தனை நபர்கள் சென்றுள்ளீர்கள் அதுவும் பாதுகாப்பு இல்லாத முகக்கவசங்களுடன். ஏன் அரசாங்கத்திற்கு ஒரு பேருந்தில் குறைத்தது இத்தனை நபர்களைத்தான் ஏற்றவேண்டும் என்று தற்காலிக சட்டம் போட முடியாமல் போனது. அதை மீறுவோரின் உரிமங்களை ரத்துசெய்வோம் என்று சொல்ல முடியாமல் போனது. அப்போது இதை எதோ அலட்சியமான செயற்பாடுதான் என்று சொல்ல வேண்டும். வரும் வரைக்கும் தெரியாது வந்தபிறகுதான் அதன் அருமை தெரியும் அதற்காகத்தான் ஊரடங்கும், போலீஸ் அடிதடியும்.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சில தற்போது உங்கள் நாடுகளில் நடைமுறையில் இருக்கின்ற ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதை சற்று நிறுத்திவையுங்கள் என்று பிற நாடுகளுக்கு எச்சரித்துள்ளது. ஆனால் எமது நாடோ அசாதாரணமாக ஊரடங்கை தளர்த்தியுள்ளது. ஏன்?............... காரணம் ஏனைய நாடுகளை போன்று அல்லாது தினமும் ஒன்றோ அல்லது இரண்டு நபர்களுக்கு மட்டும்தான் நோய் தோற்று ஏற்படுகின்றது என்று நினைத்தா? உண்மைதான் ஏனெனில் நாடும்,மக்களும் கட்டுப்பாடுகளிற்குள் உள்ளதனாலும்,சமுக இடைவெளிகளை பெரிதும் பின்பற்றியதனாலும் இதற்கு ஓர் காரணம் என்றே சொல்ல முடியும். அவ்வாறு மக்கள் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள் என்று நினைத்து அரசாங்கம் ஊரடங்கை தளர்த்தியதே பெரிய முட்டல்தனமான செயற்பாடாக பார்க்கப்படுகின்றது. அதற்கு சான்றாக இன்று மக்கள் நிருபித்து காட்டிவிட்டார்கள். இப்போது என்ன செய்யப்போகின்றீர்கள். 

தனக்கு நோய் இல்லை என்று ஒவ்வொருவரும் சுயனலமாக இருகின்றனர் என்று நன்றாகவே தெரிகின்றது. சொந்த நாட்டிற்கும் போக முடியாமல் வெளிநாடுகளிலும் நிர்கதிக்குள்ளாகியிருக்கின்ற நபர்களிடம் கேட்டால் தெரியும் இதன் அருமையை. எனது தாய் நாட்டு உறவுகளே அலட்சியம் செய்யாமல் உங்களின் சமுக தொடர்புகளை குறிப்பிட்ட காலத்திற்கு கட்டுப்படுத்தி குறைத்துக்கொண்டு நடந்துகொள்ளுங்கள். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் தனிமையை தொடர்ந்தும் பேணிக்கொள்ளுங்கள், தேவையின்றி வெளியில் செல்வதை குறைத்துக்கொள்ளுங்கள். தேவையில்லாத போக்குவரத்து பயணங்களை குறைத்துக்கொள்ளுங்கள். சமுகப்பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். 

அதேபோன்று அரசாங்கமும் எப்படி ஊரடங்கு காலங்களில் பாதுகாப்பு படைகளின் கட்டுப்பாட்டு நடவடிக்கை காணப்பட்டதோ அதேபோன்று தொடர்ந்தும் செயற்படுத்த வேண்டும். மற்றும் மக்கள் கூட்டமாக கூடுவதை விட்டும் தவிர்க்க தொடர்ந்தும் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் குறைந்தளவேனும் நோய்தொற்றை கட்டுப்படுத்தி மீண்டெழுந்து வரமுடியும். அதற்கு அனைத்து மக்களும் தங்கள் ஒத்துழைப்பை வழங்கி இந்த கொடிய நோயில் இருந்து எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க பொறுப்புடன் செயற்படவேண்டும்.

சஹீம் ஹுஸைன்

 

No comments

Powered by Blogger.