Header Ads



கொரோனாவின் பின்னால், உள்ள அரசியல்

- Mano Ganesan -

கொரோனா தொற்று சந்தேக நபர்களை பரிசோதித்து கண்டறியும், 40,000 (Detection Kits for #Covid-19 (PCR-Fluorescence Probing including Reagents+Swabs+tubes) கருவிகள் சீனாவிலிருந்து நன்கொடையாக வருகின்றன. முதல் 20,000 இன்று வருகிறது. மேலும், பெருந்தொகை முக கவசங்களையும் தருகிறோம் என சீனா சொல்கிறது.

கொரோனாவின் வீரிய வளர்ச்சியை கண்டறிய இலங்கையில் தேவையான அளவில், “பீசீஆர்” (Polymerase Chain Reaction) பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை. கொரோனா தொற்று சந்தேக நபர்கள் 45,000 பேர்வரை உள்ளார்கள் என இராணுவ-பொலிஸ் புலனாய்வுதுறை சொல்கிறது. இன்னமும் கண்டறியப்படலாம்.

ஆனால், ஒருநாளைக்கு 350 பேர்தான் பரிசோதிக்கப்படுகிறார்கள். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2,000 பரிசோதனைகளாவது நடத்தப்பட வேண்டும். பரிசோதனை முடிந்து “நெகடிவ் ஓகே சான்றிதல்” பெற்று முடிந்து வீட்டுக்கு போன நபரும், “மீண்டும் கொரோனா பொசிடிவ்” என்று மருத்துவமனைக்கு திரும்பியுள்ளார். ஆகவே ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று முறை சோதனை செய்வதுதான் சரி. இதுதான் நிலைமை

இந்நாட்டில் இன்று உண்மையான கொரோனா தொற்றாளர்கள் எத்தனை பேர் என எவருக்கும் தெரியாது. அரசுக்கு இந்த உண்மை வெளிப்படுவதில் விருப்பமில்லை. அரசாங்கத்துக்கு “நாங்கள் சிங்கப்பூரை விட, கியூபாவைவிட கெட்டிக்காரர்கள்” எனக்காட்ட வேண்டியுள்ளது. தேர்தல்வரை, கொரோனாவின் வீரிய வளர்ச்சியை, மறைத்து காட்ட வேண்டிய அரசியல் தேவை இந்த அரசுக்கு இருக்கிறது. ஆகவேதான் இதை இழுத்துக்கொண்டே அரசு இருந்தது.

இதனாலேயே, ஜீஎம்ஒஏ (GMOA) என்ற வழமையான அரசு சார்பு மருத்துவர் அமைப்பே, இன்று அரசின் மீது சீறிப்பாய்ந்து, பரிசோதனைகள் நடத்துங்கள் என கூறுகிறது. எதிர்கட்சிகளாகிய நாமும் இதை வலியுறுத்தி கூறுகிறோம்.

இந்த அழுத்தங்கள் காரணமாகவே இன்று இந்த சோதனை கருவிகள் சீனாவில் இருந்து வருகின்றன. இவற்றை பயன்படுத்தி, உடனடியாக அரசாங்கம், பரிசோதனைகளின் தொகையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறேன்.

1 comment:

  1. இது எல்லாம் தெரியாமல் அவர்களிருக்காக மத போதகர்களின் பிரார்த்தனை வேறு!

    ReplyDelete

Powered by Blogger.