April 07, 2020

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் தலைகாட்டும் இனவெறி - ஆபிரிக்கா பரிசோதனைக் களமா..?

கொரோனா வைரஸுக்கு ஒரு தடுப்பூசி ஆபிரிக்காவில் பரிசோதிக்கப்படலாம் என்று பரிந்துரைத்த இரண்டு பிரெஞ்சு மருத்துவர்களின் கருத்துக்கள் "இனவெறி" என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

"எந்தவொரு தடுப்பூசிக்கும் ஆப்பிரிக்கா ஒரு சோதனைக் களமாக இருக்க முடியாது, இருக்கவும் கூடாது" என்று உலக சுகாதார அமைப்பு இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

கடந்த சில நாள்களுக்கு முன் ஒரு பிரெஞ்சு தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பேசிய அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், கொரோனா தடுப்பு மருந்து சோதனையை ஆப்பிரிக்காவில் நடத்த வேண்டும் என மிக மோசமான கருத்து ஒன்றைத் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் ஒரு மருத்துவர் தன் கருத்துக்குப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

மருத்துவர்களின் கருத்துக்கள் சீற்றத்தைத் தூண்டின, மேலும் ஆபிரிக்கர்களை "மனித கினிப் பன்றிகள்" போல நடத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் மாநாட்டின் போது மருத்துவர்களின் ஆலோசனையைப் பற்றி கேட்டபோது, டாக்டர் டெட்ரோஸ் கோபமடைந்தார்.

"இது ஒரு அவமானம், திகிலூட்டும் கருத்தாகவே உள்ளது. இந்த 21ம் நூற்றாண்டில் இதுபோன்ற கருத்துக்களை விஞ்ஞானிகளிடமிருந்து எதிர்பார்க்கவே இல்லை. இதை நாங்கள் மிகவும் வலுவான வகையில் கண்டிக்கிறோம்.

இப்படி ஒரு விஷயம் நிச்சயம் நடக்கவே நடக்காது என நாங்கள் உறுதியளிக்கிறோம். எந்த ஒரு தடுப்பூசிக்கும் சோதனை நடத்த ஆப்பிரிக்கா ஒன்றும் சோதனைக் களம் கிடையாது. அங்கு இதுபோன்ற சோதனைகளைச் செய்ய முடியாது. செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம்.

முதலில் அறிவியலாளர்கள் இதுபோன்ற தங்கள் அதிகார மனப்போக்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு தடுப்பூசியைச் சோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கக் கூறியுள்ளதோ அதை மட்டுமே உலக சமூகம் செய்ய வேண்டும். அது ஆபிரிக்காவாக இருந்தாலும் சரி ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, விதிமுறை என்பது அனைவருக்கும் ஒன்றுதான்.

ஆபிரிக்க மக்கள் மீது தடுப்பூசி பரிசோதிக்கும் ஆலோசனைகள், இனவெறி பிடித்த வார்த்தைகள். இதை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம். இதுபோன்ற பரிசோதனைகள் ஆபிரிக்காவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலும் நடத்த அனுமதிக்க மாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்துங்கள்” என மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.

2 கருத்துரைகள்:

Can't they recognize their uncultured moves towards humanities? can't they realize the true causes of this tragedy? still they are adamant on their suppression against those vulnerable people? what a cheapest personality they have?

முன்னர் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த மிக அநேகமான ஆபிரிக்க நாடுகள் இன்னும் அந்த ஆதிக்க வெறிபிடித்த பிரெஞ்சு (பிரான்ஸ்) நாட்டின் நேரடி, மற்றும் மறைமுக ஆதிக்கத்தின் கீழேயே இருக்கின்றன என்பதை இந்த மருத்துவ விஞ்ஞானிகளின் கூற்று மிகத்தெளிவாக வெளிப்படுத்துகின்றது, என்பதோடு அந்த நாடுகள் இன்னும் அடிமைகள் போலவே பிரெஞ்சு காரர்களுக்கு அஞ்சுகிறார்கள் என்பதையும் இன்னும் பிரெஞ்சுக்காரர்களின் பொம்மைகளாலேயே ஆளப்படுகிறார்கள் என்பதையும் , அங்கு இதுவரை எந்த அபிவிருத்தியுமில்லை, மற்றும் விபச்சாரத்தை மாத்திரமே பிரதான வருமானமாக நம்பியிருக்கின்ற எத்தனையோ ஏழைக்குடும்பங்கள் உள்ளன என்பதையும் சில ஆபிரிக்க நாடுகளுக்கு சென்று வந்த ஒருவரின் மூலமாகவும் அறிய முடிந்தது. அவரது கணிப்பின்படி ஆங்கிலேயரின் காலனித்துவதில் உள்ள நாடுகள் எவ்வளவோ பரவாயில்லை என்பதாகும்.

Post a Comment