Header Ads



இலங்கை சுற்றுலாத்துறை வீழ்ச்சி - 5 இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிப்பு : 319 மில்லியன் டொலர் நஷ்டம்

(ஆர்.யசி)

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தேசிய ரீதியில் ஐந்து இலட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளது. 

அத்துடன் நாட்டின் சுற்றுலாத்துறையின் முழுமையான முடக்கத்தினால்  முதல் காலாண்டில் மாத்திரம் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இல்லாது போயுள்ளதாக  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கூறுகின்றது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக சர்வதேச பொருளாதாரம் பாரிய சரிவினை கண்டுள்ள நிலையில் அதன் தாக்கம் இலங்கையை மிகவும் மோசமாக  பாதித்துள்ள இந்த நிலையில் இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியின் விளைவுகள் மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரி பேராசிரியர் சந்தன அமரதாச கூறுகையில்,

இந்த ஆண்டின் முதல் காலாண்டு இலங்கையின் சுற்றுலாத்துறையை  முற்றுமுழுதாக பாதித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் முடக்கம் காரணமாக நாட்டிற்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாது சுற்றுலாத்துறையின் பாதிப்பினால் தேசிய ரீதியில் நேரடியாகும், மறைமுகமாகவும் ஐந்து இலட்சம் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இவ்வாறான பேரழிவு ஒன்றினை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட சுற்றுலா விடுதிகள், போக்குவரத்து, சுற்றுலா வழிகாட்டிகளின் தொழில் மற்றும் ஏனைய துறைகளும் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர வாடி வீடுகள், ஹோட்டல்கள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

"கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய்  தாக்கத்தினால் நிலைமைகள் வெகு சீக்கிரம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்க முடியாது. இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வழமைக்கு கொண்டுவர குறைந்தது இரண்டு அல்லது இரண்டரை ஆண்டுகள் தேவைப்படும்.

ஆகவே இதனால் ஏற்படும் பொருளாதார தாக்கங்களுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். ஆகவே அரசாங்கம் இதனை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது சவாலான விடயமாக அமைந்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இலங்கையின் சுற்றுலாத்துறையை  மீட்டெடுக்க வேண்டும் என்றால் அரச மற்றும் தனியார் துறையினர் ஒன்றாக இணைந்து பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்தால் மட்டுமே அது சாத்தியமாகும் என்றார்.

இந்நிலையில் சுற்றுலா அபிவிருத்தி அதிரசபையின் கடந்த வார தரவுகளுக்கு அமைய தற்போது இலங்கையின் சுற்றுலாதுறையின் முழுமையான முடக்கம் காரணமாக முதல் காலாண்டில் 319 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் போது ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்ய பல சலுகைகளை வழங்கி சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்த போதிலும் இப்போதுள்ள "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் மற்றும் சர்வதேச சுற்றுலாத்துறை கண்டுள்ள வீழ்ச்சி காரணமாக எந்தவித மாற்று நடவடிக்கைகளையும் இதுவரை சிந்திக்க முடியாதுள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

No comments

Powered by Blogger.