Header Ads



ஹிஜாஸை நீதிமன்றத்தில் ஆஜர் செய்க - 2 மனுக்கள் தாக்கல்

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தக்குதல்கள் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள  சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை,  உடனடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்த,  உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி இரு ஆட்கொணர்வு மனுக்கள் மேன் முறையீட்டு நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சட்டத்தரணி சனத் விஜேவர்தன மற்றும்  சிரேஸ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன,  சி.ஐ.டி. பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் இவ்வழக்குகளில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாச் ஹிஸ்புல்லாஹ்வை கைதுசெய்தமை சட்டத்துக்கு முரணானது எனவும்,  அவரை உடனடியாக கைதிலிருந்து  நீதிமன்றில் ஆஜர் செய்ய உத்தர்விடுமாரும் அந்த   மனுவில் கோரப்பட்டுள்ளது.

குறித்த மனுக்களில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

'தற்போது கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி 'சேவ் த பேர்ள்' எனும் அறக் கட்டளையின் பொறுப்பாளராவார்.  அந்த அறக் கட்டளை ஊடாக அநாதை சிறுவர்களுக்கு அவர் ஆதரவளித்து வருகின்றார்.  இது தொடர்பில் இதற்கு முன்னர் சி.ஐ.டி. அவரிடம் விசாரித்து வாக்கு மூலமும் பெற்றுள்ளது.

இதனைவிட, உயிர்த்த ஞாயிறு தக்குதல் சந்தேக நபரான இப்ராஹீமின் வழக்கு விடயங்கள்  தொடர்பில் ஆஜரானமை குறித்தும் சி.ஐ.டி.யால் விசாரித்து வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது.

 இந் நிலையில் கடந்த 14 ஆம் திகதி,  சட்டத்தரணி அவரது வீட்டில் இருந்த போது  வீட்டுக்கு வந்துள்ள சி.ஐ.டி. அவரிடம் சில தொலைபேசி இலக்கங்களை மையப்படுத்தி விசாரித்துள்ளனர்.  அத்துடன் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் உள்ள இப்ராஹீமின் வழக்கு ஆவணங்கள் குறித்தும் விசாரித்துள்ளனர்.

அதன்பின்னர் 15 ஆம் திகதி சி.ஐ.டி.க்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அங்கு சென்ற பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி  அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பில் போராடிய ஒரு நபராவார். குறிப்பாக சிறுபான்மை இனத்தவர்களான முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பியவராவார். 

அத்துடன் அன்மையில் கொரோனா நிலையில் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்ய அதிகாரிகள் எடுத்த தீர்மானத்தையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.  இது கூட அவரது  அநியாயமான கைதுக்கு காரணமாக இருக்கும் என சந்தேகம் உள்ளது.  இவ்வாறு கைது செய்வது சட்டத்துக்கு முரணானது.

 எனவே உடனடியாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணியை உடனடியாக மன்றில் ஆஜர் படுத்த ஆட்கொனர்வு உத்தர்வொன்றினை பிரதிவாதிகளுக்கு பிறப்பிப்பதும்,  சட்டத்தரணியை கைதிலிருந்து  விடுவித்தும் உத்தரவு பிறப்பிக்கவும் என அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.