Header Ads



25, 26 ஆம் திகதிகளில் நாடு முழுதும் ஊரடங்கு - முழு விபரம் இதோ

(எம்.எப்.எம்.பஸீர்)

எதிர்வரும் வார இறுதி நாட்களான 25, 26 ஆம்  திகதிகளில் நாடு முழுதும், முழு நேர ஊரடங்கு நிலைமை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட 21 மாவட்டங்களிலும்,  நாள்தோறும் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை 9 மணி நேர ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றது.

அதன்படி எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அம்மாவட்டங்களில் இரவு  8.00 மணிக்கு பிறப்பிக்கப்படும் ஊரடங்கு  57 மணி நேரம் நீடித்து 27 ஆம் திகதி அதிகாலை வரை  அமுலில் இருக்கும் எனவும் , மேல் மாகாணம், புத்தளம் மாவட்டத்தில் தற்போதும் தொடரும் ஊரடங்கு நிலைமையும்  எதிர்வரும் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை தொடரும் எனவும்  ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

அதன்படி, ஏற்கனவே  மேல் மாகாணத்தில் உள்ள 111 பொலிஸ் பிரிவுகளில், 18 பொலிஸ் பிரிவுகள் தவிர்த்து ஏனைய பகுதிகளில் நாளை  22 ஆம் திகதி அதிகாலை 5.00 மணிக்கு ஊரடங்கு தளர்த்த தீர்மமானிக்கப்பட்டிருந்தது.  கொழும்பில்  11 பொலிஸ் பிரிவுகளையும், கம்பஹாவில் 3 பொலிஸ் பிரிவுகளையும், களுத்துறையில் 4 பொலிஸ் பிரிவுகளையும் தவிர்த்தே இவ்வாறு ஊரடங்கை தளர்த்த தீர்மானிக்கப்பட்டதுடன்,  புத்தளம் மாவட்டத்திலும் 3 பொலிஸ் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கை  தளர்த்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 எனினும் கொரோனா தொற்று பரவலுக்கான  தேசிய நடவடிக்கை மையம் நேற்று கொழும்பில் பதிவான  தொற்றாளர்களை கவனத்தில் கொண்டு உடனடியாக இரவோடிரவாக கூடி விஷேட தீர்மானங்களை நிறைவேற்றியது. இதனையடுத்து நாளை  மறுதினம் 22 ஆம் திகதி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களுக்கான  ஊரடங்கை நீக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அந்த நான்கு மாவட்டங்களினதும் அனைத்து பகுதிகளுக்குமான  ஊரடங்கு நிலை எதிர்வரும் திங்கள் 27 ஆம் திகதி அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும் ஏனைய 21 மாவட்டங்களில் (அலவத்துவல, வறக்காபொல, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுகள் தவிர) ஊரடங்கு பகல் வேளையில்  இந்நாட்களில் தளர்த்தப்பட்டுள்ளன. அம்மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி முதல் 9 மணி நேர  ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏனைய மாவட்டங்களில் இருந்து, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வெளியேறவும் அனைவருக்கும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுக்கவும் விவசாயத்தில் ஈடுபடவும் ஏ ற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் ஆலோசனைகள் திருத்தமின்றி அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

No comments

Powered by Blogger.