Header Ads



2ம் உலகப் போருக்குப் பின், கொரோனா மிகப் பெரிய சோதனை

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலானது இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகிற்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் உலகத்திற்கே ஓர் பெரும் தலையிடியாக உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் சமூக பொருளாதார தாக்கம் குறித்து ஐ.நா அறிக்கையை வெளியிட்ட போது குட்டெரஸ் பேசினார்.

உலகெங்கிலும் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புக்களின் எண்ணிக்கை இப்போது 860,000 ஐ நெருங்குகிறது, 42,000 இற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

அமெரிக்காவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 3800இற்கும் அதிகமாக உள்ளது. கடந்தாண்டு பிற்பகுதியில் தொடங்கிய சீனாவில் இருந்ததை விட இது அதிகம்.

ஜோன்ஸ் கொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தொகுத்த தரவுகளின்படி, அமெரிக்காவில் 181,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை அதிகமான அமெரிக்க மாநிலங்கள் கடுமையாக்கியுள்ளதால், நான்கு அமெரிக்கர்களில் மூன்று பேர் இப்போது தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர்.

நிவ்யோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் பொதுச் செயலாளர் உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"புதிய கொடிய கொரோனா வைரஸ் நோய் சமூகங்களை அவற்றின் மையத்தில் தாக்கி, உயிர்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அதிகளவில் பாதிக்கின்றது.

"ஐக்கிய நாடுகள் சபை உருவானதிலிருந்து நாங்கள் ஒன்றாக எதிர்கொண்ட மிகப்பெரிய சோதனை கொவிட்- 19 ஆகும்."

இக் கொரோனா வைரஸ் பரவலை அடக்குவதற்கும் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் உடனடி ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கை எடுத்தல் அவசியம். அபிவிருத்தி அடைந்த நாடுகள் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் உதவ வேண்டும் அல்லது "காட்டுத்தீ போல் பரவும் நோயின் கனவை எதிர்கொள்ள" வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இக் கொரோனா தாக்கத்தின் விளைவாக உலகம் முழுவதும் 25 மில்லியன் பேர் வேலைகளை இழப்பர் என்று ஐ.நா அறிக்கை மதிப்பிடுகிறது.

இது உலகளாவிய அந்நிய நேரடி முதலீட்டு பாய்ச்சல்களில் 40% வரை சரிவைச் சந்திக்கும் எனவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.