Header Ads



19 மாவட்டங்களில் செவ்வாய்கிழமை ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்படும், 6 மாவட்டங்களுக்கு மறு அறிவித்தல்வரை தொடரும்

(எம்.மனோசித்ரா)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பில் இடர் வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை,  புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 14 ஆம் திகதி செவ்வாய்கிழமை காலை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்படவுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 04.00 மணிக்கு அமுல்படுத்தப்படுத்தப்பட்டது.  இம்மாவட்டங்களில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 14 செவ்வாய்கிழமை காலை 06.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் மாலை 04.00 மணி முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பதனால் ஏற்படும் கஷ்டங்களை தெளிவுடனும் பொறுப்புடனும் பொறுத்துக்கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் வேறு பொருட்களை வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் தொடர்ச்சியாக வழங்களை மேற்கொள்ள அரசாங்கம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

எந்த மாவட்டத்திலாயினும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் சிறு தேயிலை தோட்டங்கள், ஏற்றுமதி பயிர்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே கருதப்படும். எவரும் இந்த கிராமங்களுக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறு அறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. in most cases, home delivery isn't responded by the suppliers. even they don't respond calls or Whats App messages...

    ReplyDelete

Powered by Blogger.