Header Ads



கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி - இது மிகவும் கவலைமிக்க தருணம் என்கிறார் பிரதமர்

கொரோனா வைரஸால் கனடா மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் உள்ள நகர் ஒன்றில், போலீஸ் உடையணிந்த துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் போலீஸ் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர். 

போலீஸ் விசாரணையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் 51 வயதான கேப்ரியல் வோர்ட்மேன் என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

என்ன நடந்தது?

போர்டபிக் என்னும் நகரில் உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை தொடங்கிய இந்த தாக்குதல் ஏறத்தாழ 12 மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்திருக்கிறது.

துப்பாக்கிதாரி போலீஸ் கார் ஒன்றை ஓட்டிவந்ததாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் பல இடங்களில் மக்களை நோக்கி அந்த துப்பாக்கிதாரி சுட்டார். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கொல்லப்பட்டவர்களில், கனடா நாட்டு காவல் துறையில் 23 ஆண்டுகள் பணி செய்த பெண் காவலர் ஹெய்டி ஸ்டீவன்சனும் ஒருவர். 

துப்பாக்கிதாரியிடமிருந்து மக்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு ஹெய்டி தன் உயிரை இழந்ததாக கனடா நாட்டு போலீஸின் நோவா ஸ்காட்டியா பிராந்திய உதவி ஆணையர் லீ பெர்ஜெர்மன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுவது என்ன?

கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இது மிகவும் கவலைமிக்க தருணம் எனக்கூறியுள்ளார். 

இது நோவா ஸ்காட்டியா வரலாற்றிலேயே நடந்த மிகக்கொடுமையான வன்முறை செயல் என அம்மாகணத்தின் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

போலீஸ் கூறுவது என்ன?

நோவா ஸ்காட்டியா காவல்துறை பகிர்ந்துள்ள ட்வீட்டில் தாக்குதல் நடத்தியவர் 51 வயதான கேப்ரில் வோர்ட்மேன் எனக் கூறப்படுகிறது. இவர் காவல்துறையில் பணியாற்றவில்லை. ஆனால், காவல் துறையின் சீருடை அணிந்திருந்தார் என போலீசார் கூறுகின்றனர்.

அவர் வைத்திருந்த காருக்கும் போலீஸாரின் வாகனத்துக்குமான வித்தியாசம் வாகனத்துக்கான பதிவு எண் மட்டுமே. அவரின் கார் பதிவு எண் 28B11. இந்த கார் எண்ணைக் கண்டால் உடனடியாக அவசர எண்ணுக்கு அழைக்கவும் என ஞாயின்று ட்விட்டரில் பதிவிடப்பட்டிருந்தது.

ஆனால், அதன்பின் அந்த துப்பாக்கி ஏந்திய நபர் சிறிய வெள்ளி நிற செவர்லட் காருக்கு மாறிவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

அந்த நபர் எவ்வாறு இறந்தார் என்பதைப் பற்றி போலீஸார் எந்த தகவலும் கொடுக்கவில்லை.

கனடாவில் இவ்வாறான துப்பாக்கிச்சூடுகள் அரிதிலும் அரிதானது. அமெரிக்கா போல அல்லாமல், கனடாவில் துப்பாக்கி வாங்க ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

1 comment:

  1. Nova Scotia is one of the Eastern provinces of Canada not Northern province as stated above in the post.
    Suspect's name sound like a Jewish but the media never mentioned his ethnicity. Things would have been different had he been a Muslim.

    ReplyDelete

Powered by Blogger.