Header Ads



கொரோனாவால் இலங்கை உட்பட உலக நாடுகளில் 13 இலங்கையர்கள் இதுவரை பலி - இன்றைய நிலவரம் இதோ !

(எம்.எப்.எம்.பஸீர்)

கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 6 ஆவது மரணமும் இன்று இலங்கையில் பதிவானது. தெஹிவளை - நெதிமாலை, அருணாலோக்க மாவத்தையைச் சேர்ந்த 80 வயதான தொற்றாளர் ஒருவர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையிலேயே கொரோனா உயிரிழப்புகள் இலங்கையில் 6 ஆக அதிகரித்தது.

கடந்த மார்ச் 27 ஆம் திகதி அடையாளம் காணப்பட்ட இந்த 80 வயதுடைய தொற்றாளருக்கு அவரது மருமகனிடம்  இருந்து தொற்று பரவியுள்ளதாகவும், குறித்த மருமகன் சுற்றுலா வழி கட்டியாக செயற்படும் நிலையில்,  கடந்த மார்ச் ஆரம்ப காலப்பகுதியில் அவர்  வெளிநாட்டிலிருந்து வந்த குழுவொன்றுக்கு இறுதியாக வழிகாட்டியாக செயற்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது அவரும்,  6 ஆவது நபராக உயிரிழந்த நபரின் மனைவியும் , அவரது பேரனும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. அத்துடன் இதுவரை உயிரிழந்த ஆறு பேரும் ஆண்கள் எனவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியது.

இந்நிலையில் இலங்கையில்  இன்று ( 7.4.2020) இரவு 7.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 7 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.  

இதில் 6 மரணங்களுக்கு மேலதிகமாக 42 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

 மேலும், இன்றைய தினம் உயிரிழந்த 6 ஆவது நபரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை கொட்டிகாவத்த பொது மயானத்தில் இடம்பெற்றது. இதன்போது உயிரிழந்த நபரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு மட்டும்  இறுதிக் கிரியைகளில் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டதுடன் பூத உடல் தகனம் செய்யப்பட்டது.

இதேவேளை கொரோனாவால், இதுவரை மொத்தமாக 13 இலங்கையர்கள் , இலங்கை உள்ளிட்ட உலகின் பல நாடுகளிலும் உயிரிழந்துள்ளனர்.

 சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் தரவுகள் பிரகாரம் தற்போதும் இலங்கையில் உள்ள 30 வைத்தியசாலைகளில்  255 பேர் கொரோனா சந்தேகத்தில்  சிகிச்சைகளைப் பெற்றுவருகின்றனர். இதில் இரு வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றனர்.

 இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை, கொரோனா தொற்றாளர் ஒருவர் மரணித்தால் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை பின்பற்றி  இன்று தகனம் செய்ய அம்பாந்தோட்டை பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பெண்ணின் மகனுக்கும் கொரோனா அறிகுறிகள் காட்டியுள்ள நிலையில் அவரை அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் பரிசோதனைகளுக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. 

அத்தோடு, தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியின் நாவுல பகுதியில் சுவாசப் பிரச்சினை காரணமாக திடீர் என பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அது கொரோனா மரணம் என சந்தேகிக்கப்பட்டு, உடல் பாகங்கள் வைத்திய பரிசோதனைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது. எனினும் குறித்த மரணம் கொரோனாவால் ஏற்படவில்லை என்பதும், அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்பதும் அந்த பரிசோதனைகளில் தெரியவந்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.