Header Ads



கொரோனா அலை எந்நேரத்திலும் எழும், சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்

மலேசியாவில் கொரோனா வைரஸின் மூன்றாம் கட்ட அலை எந்த நேரத்திலும் எழும் எனவும், இம்முறை அது சுனாமி போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மூன்றாம் கட்ட சுனாமி போன்ற அலையை எதிர்கொள்ளும் நடவடிக்கையாகவே மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் இஷான் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.

"அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துதான் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது. இப்போது சுனாமி என்று குறிப்பிடக்கூடிய கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாம் கட்ட அலையானது தீவிரமாக இருக்கும் என்று 3 வாரங்களுக்கு முன்பே யூகித்தோம். மார்ச் மாத துவக்கம் வரை விடுமுறை காலத்தில் ஏராளமான மலேசியர்கள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர். எனவேதான் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை அடையாளம் காட்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார்.

இந்தாண்டு விடுமுறைக் காலத்தில் மலேசியர்கள் பலர் ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைப் போல் இவையும் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நாடுகள் என்பது தெரிந்தும் பலர் சென்று வந்ததாக கூறினார்.

மலேசியாவின் குறிப்பிட்ட ஓர் அமைச்சு 8 ஆயிரம் ஊழியர்கள் விடுமுறையின்போது வெளிநாடு சென்றுவர அனுமதி அளித்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

பலி எண்ணிக்கை 26; இதுவரை 2,161 பேருக்குப் பாதிப்பு

இத்தகைய சூழ்நிலையில் மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. இன்று இத்தகவலை வெளியிட்ட சுகாதார அமைச்சு, இதுவரை உயிரிழந்த அனைவருமே வயதானவர்கள் என்றும், நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தவர்கள் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.

இன்று -27- ஒரே நாளில் புதிதாக 130 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,161 ஆக உயர்ந்துள்ளது.

25ஆவது நபராக உயிரிழந்தவர் உள்நாட்டைச் சேர்ந்த 83 வயது ஆடவர் ஆவார். 26ஆவது நபராக பலியானவர் 53 வயதான ஆடவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 35 வயதான இளைஞர் ஒருவரும் கோவிட் 19 நோயால் மரணமடைந்துள்ளார் என்ற தகவல் மலேசியர்களை வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது.

குறிப்பிட்ட நபர் மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தோனீசியா சென்று திரும்பியுள்ளார். இதையடுத்து இம்மாதம் 18ஆம் தேதி கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்றிரவு மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதையடுத்து கடினமான நிலையை எதிர்கொள்ளத் தயாராகி வருவதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே பொதுநடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை ஏப்ரல் 28ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மலேசிய பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது.

No comments

Powered by Blogger.