March 23, 2020

அரச செயற்பாடுகள் சுமுகமாக இடம்பெறுவதை உறுதிசெய்வதற்கு, நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தல்

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்துவதுடன், அரச பொறிமுறையினை தடையின்றி பேணுவதற்காக பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்கள் அரசாங்க நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி ஜயசுந்தர அவர்களினால் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபை தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள், பொது முகாமையாளர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தின் ஊடாக அறிவுவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் மார்ச் மாதம் 19ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப மார்ச் மாதம் 23 முதல் 27 வரை அரச ஊழியர்கள் தமது வீடுகளில் இருந்து தொலை சேவை வழங்கும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டது. திணைக்களங்கள் மற்றும் துறைத் தலைவர்கள் தொலைபேசி, குறுஞ்செய்தி ஊடாக செய்ய வேண்டிய பணிகளுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவர். இக்காலப்பகுதி அரசாங்க விடுமுறையாக கொள்ளப்பட மாட்டாது என்பதுடன், வீட்டிலிருந்து கடமைகளுக்காக தொலைபேசியில் தொடர்புகொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

வீட்டிலிருந்து பணிகளை மேற்கொண்டு சுயமாக நோய்த்தடுப்புக் காப்பை மேற்கொள்வதுடன் புகையிரதம், பஸ் தரிப்பிடங்களில் தேவையற்ற வகையில் ஒன்றுகூடுவதும் தவிர்க்கப்படுகிறது. அது அனைவரினதும் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உதவும். அத்தியாவசிய சேவைகளும், மின்சாரம், தொலைபேசி, எரிபொருள், வங்கி நடவடிக்கைகள், பொருட்களை கொண்டுசெல்தல், விநியோகித்தல் ஆகிய நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் முறையாகவும் மேற்கொள்வதற்கு இது உதவும். கொரோனா வைரஸ் ஒழிப்பு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதார சேவை பணிக்குழாமினருக்கும், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு சேவைகளுக்கும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள பணிக்குழாமினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் அவர்களது பணிகளை மேற்கொள்வதற்கும் அதன் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் நிலையங்கள், மதுபான சாலைகள், கடைகள், ஹோட்டல்களில் ஒன்று கூடுவதையும் சுற்றுப் பயணங்களில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டில் தேவையானளவு உணவு, நீர், எரிபொருள் உள்ளதுடன், அவற்றை பகிர்ந்தளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகம் பொருட்களை சேர்ப்பதை தவிர்ப்பது அனைவருடையவும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் அனைத்து அதிகாரிகளினதும் மாதாந்த சம்பளம் மார்ச் மாதம் 23ஆம் திகதி வழங்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வீட்டிலிருக்கும் காலப்பகுதியில் வீடு மற்றும் சுற்றுப் புரங்களை சுத்தமாக்குவதற்கும் அத்தியாவசிய பயிர்களை பயிரிடுவதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொள்ளுமாறும், பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் பற்றி விசேடமாக கவனிக்குமாறும் தேவையான பொருட்களை வாங்குவதற்காக தனியாக கடைகளுக்கு செல்லுமாறும் மருத்துவ அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொலைக்காட்சி, வானொலி சேவைகளில் ஒலிபரப்பப்படும் சமய, கல்வி நிகழ்ச்சிகள், நாடகங்கள், செய்திகள் மற்றும் வேறு நிகழ்ச்சிகளை வீட்டிலிருந்து பார்ப்பதற்கு இக்காலப்பகுதியை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அரசாங்கம் அனைத்து அதிகாரிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.23     

1 கருத்துரைகள்:

சனாதிபதியின் அறிவுறுத்தல்களை மொஹான் சமரநாயக்கா அழகாகப் பதிவு செய்து வௌியிடுகின்றார். அறிவுறுத்தல்களில் பொருட்களின் விலை குறைக்கப்படுகின்றன. கடைக்குப் போய் சாமான் வாங்கப் போனால் நெருப்பு விலை. சனாதிபதியின் கட்டளையின் பின் விற்கப்படும் அனைவருக்கும் அவசியமான உணவான வௌ்ளைப்பூடு ஒரு கிலோவின் விலை 600 ரூபா. மற்ற பொருட்களின் விலை பற்றி பேசுவதற்கு அவசியமில்லை. அரசாங்கம் இல்லாத ஆட்சியில் பொதுமக்கள் விற்பனையாளர்களினால் நசுக்கப்படுகின்றார்கள். கேட்கப் பார்க்க யாருமில்லை. கொரோனாவுக்கு கீழ் மக்கள் நசுக்கி அடக்கி ஒடுக்கப்படுகின்றார்கள். அன்று பிரேமதாஸ சனாதிபதி கட்டளையி்ட்டால் தொழிலாளி நாட்டின் ஒரு மூளையில் நடுங்குகின்றான். ஒரு கட்டளையுடன் லஞ்சம் ஒழிக்கப்படுகிறது. ஆனால் இன்று அந்த கட்டளை பற்றி பொறுப்புள்ள யாரும் அலட்டிக் கொள்வதில்லை. காரணம் என்ன என்பது பொதுமக்களுக்குத் தெரியாது.

Post a comment