Header Ads



மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாமல், அரசாங்கம் தேர்தலை பிற்போடவேண்டும் : சஜித்

(எம்.ஆர்.எம்.வஸீம்)

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கையில் திருப்தியில்லை. மக்களின் வாழ்க்கையுடன் விளையாடாமல் அரசாங்கம் தற்காலிகமாகவேனும் தேர்தலை பிற்போடவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தாக்கம் வியாபித்துவருவதால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றன. அதனால் அந்த நாடுகள் தங்கள் மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றன. ஆனால் எமது நாட்டில்  இந்த வைரஸை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களைவிட பொதுத் தேர்தலை நடத்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ளும் முயற்சியே இருந்து வருகின்றது.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கம் நாட்டுக்குள் தொடர்ந்து தீவிரமாகிக்கொண்டிருப்பதாகவே தெரியவருகின்றது. அதனால்தான் அரசியல் பேதமின்றி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படுவதற்கு தேர்தலை பிற்படுத்துமாறு அனைத்து கட்சிகளும் தெரிவித்திருக்கின்றன.

அதேபோன்று பாராளுமன்றத்தை கூட்டி பொதுவான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்தும் அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்கம் தீவிரமாகும் நிலை இருப்பதை உணர்ந்தவுடன் அந்நாட்டு ஜனாதிபதி டொனல்ட் ரம்ப் 8.3 பில்லியனை ஒதுக்கி இருக்கின்றார். அதேபோன்று பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்க தலைவர்கள் அவர்கள் மேற்கொண்டுவரும் வேலைத்திட்டம் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆனால் எமது நாட்டில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 3மாதமாகியும் வரவு செலவு திட்டம் ஒன்றைக்கூட தயாரிக்க முடியாமல் இருக்கின்றது. ஏற்பட்டிருக்கும் ஆபத்தில் இருந்து மீள்வதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக, நாட்டு தலைவர்  மக்களுக்கு தெளிவுபடுத்தாமல் இருக்கின்றார்.

அத்துடன் அரச துறையினருக்கு மாத்திரம் விடுமுறை அளித்து இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது. முழு நாட்டையும் முடக்கி வைரஸ் தொற்று நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். ஆனால் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தில் திருப்தியடைய முடியாமல் இருக்கின்றது.

அதனால் அரசாங்கம் நாட்டு மக்களின் உயிருடன் விளையாடாமல் தேர்தலை பிற்படுத்தி கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழுமூச்சாக செயற்படவேண்டும். அதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்றார்.

1 comment:

  1. Well said Mr. Sajith.
    Where are those Terror Monks? Why no sound at this time to Save Sinhalese people...

    ReplyDelete

Powered by Blogger.