Header Ads



இந்தியாவில் கொரோனா பாதிப்பை, பேரிடராக அறிவித்தது அரசு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தை பேரிடராக கருதி நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நபர்களின் மருத்துவ செலவுகள் குறித்து மாநில அரசே நிர்ணயிக்கும் என்று மத்திய அரசின் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிராவின் நாக்பூர் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்று சந்தேகிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஐந்து நபர்கள் மருத்துவமனையில் இருந்து தப்பியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 கொரோனா

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஓட்டுநர் மயானாவார் மற்றும் நடத்துனர் நடாஃப் இருவரும் சேர்ந்தது பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு இலவசமாக மாஸ்க்களை வழங்கினர். இது குறித்து பேசிய நடத்துனர் நடாஃப் ''கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு அஞ்சுகின்றனர், எனவேதான் இலவச முக உறைகளை வழங்குகிறோம். எனவே அரசாங்கம் அனைவருக்கும் இலவச முக உரைகளை வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மகாராஷ்டிராவில் அனைத்து திரை அரங்குகள், உடற்பயிற்சி மையங்கள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மார்ச் 30 வரை செயல்படாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.
கோவாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கசினோக்கள், குரூஸ் கப்பல் கொண்டாட்டங்கள், டிஸ்கோ கிளப்புகள் அனைத்தும் மார்ச் 31 வரை செயல்படாது என கோவா முதல்வர் பிரமோத் சாவத் அறிவித்துள்ளார். இருப்பினும் உயிர்நிலைபள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் மட்டும் குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
முக கவசம் மற்றும் கைகளை சுத்தப்படுத்த உதவும் சேனிடைஸர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என டெல்லியின் சுகாதாரத் துறை அமைச்சர் சாத்யேந்தர் ஜெயின் அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான், மேற்கு வங்கம் மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் அனைத்து கல்விக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவை மார்ச் 30ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.