March 18, 2020

சிகிச்சைக்கு முன் தற்காத்துக்கொள்வோம்...

தாரிக் பின் அஷ்யம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் இறைவனிடம் பிரார்த்திக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்மஃக்ஃபிர்லீ வர்ஹம்னீ வ ஆஃபினீ வர்ஸுக்னீ" (இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக! எனக்கு வாழ்வாதாரத்தை அளிப்பாயாக!) என்று சொல்வீராக" என்றார்கள்.
இதைக் கூறியபோது, தமது பெருவிரலைத் தவிர மற்ற விரல்களை ஒவ்வொன்றாக மடக்கிக்கொண்டு, "இவை உம்முடைய இம்மை மறுமை அனைத்தையும் உள்ளடக்கிக் கொள்ளக்கூடியவை" என்று சொன்னார்கள்.  (நூல் : முஸ்லிம் 5229)

ஆரோக்கியம் அல்லாஹ்வின் மிகப்பெரும் அருளாகும். அந்த அருட்கொடையை பேணிப்பாதுகாப்பது எம்மீது கடமையாகும். ஆரோக்கியத்தை பேணிப்பாதுகாப்பதோடு அதனை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திப்பதும் நபிகளாரின் மிக அழகிய சுன்னாவாகும். ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்கும்படி நபிகளார் தமது தோழர்களுக்கு கற்றுக் கொடுக்கும் வழமையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள். என்பதை மேலுள்ள நபி மொழியின் மூலம் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

ஆரோக்கியம் எனும் இறைவனின் மகத்தான இந்த அருட்கொடையை பேணிப்பாதுகாத்துக் கொள்வதற்கு இஸ்லாம் மிக அழகான வழிகாட்டல்களை எமக்கு வழங்கியிருக்கின்றது. அதே போன்று ஆரோக்கியத்துக்கு கேடாக அமையும் அனைத்தையும் தடுக்கப்பட்ட அம்சமாக ஆக்கி வைத்திருக்கின்றது. மனிதனின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமளித்து, அவனது அன்றாட செயற்பாடுகளில் ஆரோக்கியத்தை பேணிக் கொள்வதனை இஸ்லாம், ஈமான் சார்ந்த அம்சமாகவும் வணக்கமாகவும் ஆக்கியிருக்கின்றது.

அல்லாஹ் கூறுகிறான்: 
முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) – நீங்கள் பெருந்தொடக்குடையோராக (குளிக்கக் கடமைப் பட்டோராக) இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல ஜலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவற்றால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை – ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். (அல்-குர்ஆன் 5:6)

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமையான தொழுகையை தொழுவதற்கு முன்பு மிக அழகிய முறையில் இஸ்லாம் காட்டித்தந்தவாறு உடலை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்படி சுத்தம் செய்ததன் பின்பே அந்த தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. சுத்தமில்லாமல் தொழுகை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இப்படி இஸ்லாம் வணக்கங்களுக்கு முன் செய்யப்பட்ட வேண்டிய வணக்கமாகவே உடல் சுத்தத்தை விதியாக்கியிருக்கின்றது.

ஆரோக்கியத்தை பேணிக்கொள்வதற்கு தூக்கத்திலிந்து எழுந்தது முதல் அன்றாடம் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பல ஆரோக்கிய வழிகாட்டல்களை இஸ்லாம் எமக்கு போதித்திருக்கின்றது. அது போன்று ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரது நோயின் தன்மைக்கு ஏற்ப நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்ற வழிகாட்டலையும் இஸ்லாம் எமக்கு வழங்கியிருக்கின்றது. அவற்றில் முக்கியமான சிலவற்றை ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடைப்படையில் சுருக்கமாக இங்கு நோக்குவோம்.

1- கைகளை நன்றாக கழுவிக் கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் ஒருவர் தூங்கி விழித்தெழுந்தால் 
தண்ணீர்ப் பாத்திரத்திற்குள் கைகளை நுழைப்பதற்கு முன் மூன்று முறை கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) 
(நூல் : புஹாரி 162, முஸ்லிம் 237)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளுச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளு செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே இரவைக் கழித்தது என்பதை அறியமாட்டார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள் (நூல்: புகாரி 162)

கைகளில் ஏதாவது அசுத்தமான பொருட்களோ அல்லது அசுத்தமான இடத்தில் கைகள் பட்டுவிட்டாலோ நாம் நமது கைகளை கழுவி சுத்தப்படுத்திய பின்பே வேறு வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற செய்தியை மேலுள்ள நபி மொழிகளின் மூலம் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

இன்று மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள மருத்துவ உலகால் இது போன்ற சுகாதார ரீதியிலான வழிகாட்டால் வழங்கப்படுவது நாம் அறிந்ததே, எனவே அதனை கருத்திற்கொண்டு வெளியில் சென்று வந்தவுடன் சவர்க்காரமிட்டு நன்றாக நமது கைகளை கழுவிக் கொள்வது அவசியமாகும்.

2- பற்களை சுத்தம் செய்தல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தினருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல் துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) அவர்கள். (நூல்: புகாரி 7240)

3- குளித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெள்ளிக்கிழமை (ஜுமுஆ) தினத்தில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.
(அறிவிப்பவர்: அபூ சஈத் அல்குத்ரீ (ரலி) 
நூல்: புகாரி 858)

மக்கள் ஒன்று கூடுகின்ற பொது இடங்களில் பிறருக்கு தொந்தரவில்லாமல் இருப்பதற்காக வெள்ளிக்கிழமை குளிப்பதனை இஸ்லாம் கட்டாயமான ஒன்றாக ஆக்கியுள்ளது. தண்ணீரை வீண்விரயம் செய்யாமல் பொதுவாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் குளித்து சுத்தமாக இருப்பதனை இஸ்லாம் விரும்பத்தக்க ஓர் அம்சமாக கருதுகின்றது.

3- தும்மும்போது வாயை மூடிக்கொள்ளுதல்.

நபி (ஸல்) அவர்கள் தும்மினால் கையையோ அல்லது துணியையோ வாயருகில் வைத்துக் கொள்வார்கள். தும்மலின் சப்தத்தை தாழ்த்திக் கொள்வார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) 
(நூல்: அபூதாவூத் 5029)

4- நகங்களை வெட்டுதல், தேவையற்ற முடிகளை அகற்றுதல்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இயற்கை மரபுகள் ஐந்தாகும்’ அல்லது “ஐந்து செயல்கள் இயற்கை மரபுகளில் (இறைத் தூதர்கள் வழியில்) அடங்கும்’. (அவையாவன:) விருத்த சேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களை(ந்திடச் சவரக் கத்தியைப் பயன்படுத்து)வது, நகங்களை வெட்டிக்கொள்வது, அக்குள் முடிகளை அகற்றுவது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது.
(அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 429)

6- பாத்திரங்களை, தண்ணீர் குவளைகளை மூடி வைத்தல்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
மாலை வேளையில் (இரவு தொடங்கும்போது) பாத்திரங்களை மூடி வையுங்கள். தண்ணீர்ப் பைகளை (சுருக்குப் போட்டு) முடிந்து வையுங்கள். கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். உங்கள் குழந்தைகளை (வெளியே செல்லவிடாமல் அணைத்துப்) பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், (அந்நேரத்தில்) ஜின்கள் பூமியில் பரவி (பொருள்களையும், குழந்தைகளையும்) பறித்துச் சென்று விடும். மேலும், தூங்கும்போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய (எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும். 
என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள். 
(நூல் : புகாரி 3316)

7- பொது வெளியில் மலம் கழித்தல், எச்சில் துப்புதுல், போன்ற அசுத்தமான காரியங்களிலிருந்து விலகிக் கொள்ளுதல்.

சாபத்தை பெற்றுத் தரும் இரு காரியங்களை விட்டு விலகிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் சாபத்தை பெற்று தரும் அந்த இரண்டு விடயங்கள் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் மக்கள் செல்லும் பாதையில் மலம் கழித்து அதனை மாசுபடுத்துபவன் அல்லது நிழல் தரக்கூடியவைகளுக்கு கீழ் மலம் கழித்து அதனை மாசுபடுத்துபவன் என்றார்கள். (அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி)
(நூல் : முஸ்லிம் 269)

8- நோயின் அறிகுறி தென்பட்டால் மருத்துவரை அணுகுதல்.

மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கவில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி), 
நூல்கள் :திர்மிதீ (2038),அபூதாவூத் (2015,3855)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை. (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5678)

9- தொற்று நோயின் அறிகுறி தென்பட்டால் மக்களுடன் கலந்திருப்பதை தவிர்த்தல்.

வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கியமான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள். என நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  (நூல் : புஹாரி : 5774)

10- தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நோய்கள் பரவக்கூடிய இடங்களை தவிர்த்தல்.

சிங்கத்திடமிருந்து விரண்டோடுவதைப் போன்று குஷ்டரோகியை விட்டும், விரண்டு ஓடு. என நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.  அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) 
(நூல் : புஹாரி : 5707)

இன்றைய உலகை மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், ஏனைய தொற்றுநோய்கள் போன்றவற்றிலிருந்து எம்மை நாம் தற்காத்துக்கொள்வதற்கு மார்க்கம் சொல்லித்தருகின்ற மேலுள்ள அம்சங்களை கடைப்பிடிப்பதோடு துறைசார் நிபுணர்கள் முன்வைக்கின்ற மருத்துவ, சுகாதார வழிகாட்டால்களையும் பேணிக்கொள்வது மிக அவசியமாகும்.

நோயுற்று சிகிச்சைக்குச் செல்வதற்கு முன் நம்மை நாம் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ள முயற்சிப்பதே சிறந்த தீர்வாகும். நோய்கள் தொற்றுவதற்குரிய காரணிகளை இயலுமான அளவு தவிர்த்துக் கொள்வதோடு ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விடம் அதிகமாக பிரார்த்திக்கவும் வேண்டும்.


Mufaris Thajudeen Rashadi.

0 கருத்துரைகள்:

Post a comment