Header Ads



யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டது


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், யாழ்ப்பாணம் – உடுவில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தாவடியின் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அடையாளங்காணப்பட்ட கொரோனா நோயாளி வசித்த பகுதியே முடக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வௌியேறுவதற்கும், வேறு பகுதி மக்கள் நுழைவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாவடி – சுதுமலை வீதியூடாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புத் தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தாவடியின் 250 தொடக்கம் 300 குடும்பங்கள் வாழும் பகுதி முடக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கூறினார்.

இதேவேளை, தாவடியில் தாம் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு போதியளவு பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படவில்லை என பொது சுகாதார பரிசோதகர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து குறித்த பகுதிக்குள் சென்றாலும், பொது சுகாதார பரிசோதகருக்கான வழமையான சீருடையிலேயே தாம் பணியாற்றுவதாக அவர் கூறினார்.

இதேவேளை, கைதடியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையை 14 நாட்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வங்கிக் கிளையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் தாவடியில் கொரோனா தொற்றுக்குள்ளானவரின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வங்கி ஊழியரும் 14 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

சுவிட்சர்லாந்திலிருந்து கொரோனா தொற்றுடன் வருகை தந்து யாழ். அரியாலையில் ஆராதனை நடத்திய மதபோதகர் தொடர்ந்தும் அந்நாட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த மத போதகரை சந்தித்த தாவடியைச் சேர்ந்தவரே கொரோனா தொற்றுக்குள்ளானமை தெரியவந்தது.

மத போதகர் பங்கேற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட 240-க்கும் மேற்பட்டவர்கள் யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.