Header Ads



இலங்கை வரலாற்றில் கைப்பற்றப்பட்ட, அதிக பெறுமதி கொண்ட போதைப்பொருள்

(எம்.எப்.எம்.பஸீர்)

தென் பகுதி சர்வதேச கடற்பரப்பில், கொடி இன்றி பயணித்த ஆழ்கடல் படகொன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்ததில் இலங்கை கடற்படையினர் சுமார் 1250 கோடி ரூபா வரை பெறுமதி கொண்ட கொக்கைன், ஐஸ் மற்றும் சில போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரிய பண்டார வீரகேசரிக்கு தெரிவித்தார். 

இந்நிலையில் குறித்த ஆழ் கடல் படகும், அதில் உள்ளவர்களும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

கடற்படையின் ஆழ் கடல் மேற்பார்வை கப்பலான சயுர கப்பல், கடந்த சனியன்று காலை 9.30 மணிக்கு  தென் கடலில் அவதானித்த சந்தேகத்துக்கு இடமான கப்பலில் இருந்தே இந்த போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

கரையில் இருந்து 463 கடல் மைல் தூரத்தில் (835 கிலோ மீற்றர்) ஆழ் கடலில்  அவதானிக்கப்பட்ட சந்தேகத்துக்கு இடமான ஆழ் கடல் படகில், அப்படகு பதிவு செய்யப்பட்ட நாட்டின் கொடி காணப்படாமையால் கடற்படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே அந்த படகை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

அதில் இருந்த அனைவரும் வெளிநாட்டவர்கள் எனக் கூறும் கடற்படையினர், இது குறித்த அனைத்து தகவல்களையும் இன்று வழங்க முடியும் என தெரிவித்தனர்.

குறித்த படகை சோதனைசெய்த போது,  அதில் 500 கிலோ கொக்கைன், 500 கிலோ ஐஸ், பாபுல் 200 பெக்கட்டுக்களும் அடையாளம் காணப்படாத  ஒரு வகை மாத்திரை 100 கிராமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 1250 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த இரு மாதத்துக்குள் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் போது சிக்கிய 3 ஆவது படகாக  இந்த படகு கருதப்படுவதாக  கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுரு சூரியபண்டார கூறினார்.

இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 22 மற்றும் 25 ஆம் திகதிகளில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்திய இரு படகுகள் இவ்வாறு கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டிருந்தன. 

இதன்போது கடலில் வைத்து மற்றொரு இலங்கை மீனவப் படகும் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் அவ்விரு நடவடிக்கைகளின் போதும் 16 வெளிநாட்டவர்களும் 11 இலங்கையர்களும் கடலிலும் கரையிலும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப் பொருளும் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களும் இன்று திக்கோவிட்ட துறைமுகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளனர். 

அதன் பின்னர் கடற்படை - பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றின்  கூட்டிணைப்பில் விஷேட விசாரணைக்கு திட்டம் இடப்பட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.