Header Ads



தீவிர நோய்ப் பரவலின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு - வழிகாட்டும் அமவாஸ் கொள்ளைநோய்

அமவாஸ் என்பது இன்றைய ஃபாலஸ்தீனில் ஜெரூசலேமுக்கும் ரமல்லாவுக்கும் இடையே ஜெரூசலேமிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலிருந்த ஒரு சிற்றூர். 1967ஆம் ஆண்டில் நடந்த யூத ஆக்கிரமிப்பு அக்கிரமத்தால் அவ்வூர் மக்கள் துரத்தப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டன. 
இன்று இந்தப் பெயரில் அப்படியொரு சிற்றூர் இல்லை.
பின்வரும் தகவல்கள், பேரறிஞர் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களின் அல்பிதாயா வந்நிஹாயா எனும் வரலாற்று நூலில் இடம்பெற்றவையாகும்:
இப்னு ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஹிஜ்ரீ 18ஆம் ஆண்டில் (நிர்வாகச் சீரமைப்புக்காக இரண்டாவது முறை) கலீஃபா உமர் (ரலி) அவர்கள் ஷாம் (சிரியா) புறப்பட்டார்கள். அவர்களுடன் முஹாஜிர்கள் மற்றும் அன்சாரிகளில் முக்கியமான நபித்தோழர்கள் இருந்தனர். அந்தக் குழு ‘சர்ஃக்’ எனுமிடத்தை அடைந்தது. (இது இன்றைய தபூக் நகருக்கு அப்பால் ஜோர்டான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும்.)
அந்த இடத்தில் உமர் (ரலி) அவர்களின் குழு தங்கியிருந்தபோது சிரியாவின் இராணுவத் தளபதிகள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி), யஸீத் பின் அபீசுஃப்யான் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகியோர் அங்கு வந்து கலீஃபா உமர் (ரலி) அவர்களைச் சந்தித்து, சிரியாவில் கொள்ளைநோய் (தாஊன்) பரவியிருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
உடனே கலீஃபா உமர் (ரலி) அவர்கள் (சிரியாவுக்குப் போகலாமா, வேண்டாம என்று) தம்முடன் வந்திருந்த நபித்தோழர்களிடம் ஆலோசனை கலந்தார்கள்.
ஆனால், அவர்களோ இருவேறு கருத்துகளைத் தெரிவித்தனர்.
அவர்களில் சிலர், ‘’கலீஃபா அவர்களே! நீங்கள் முக்கியமான பணி நிமித்தம் புறப்பட்டு வந்துள்ளீர்கள்; அதை முடிக்காமல் நீங்கள் (மதீனா) திரும்ப வேண்டாம்’’ என்று அலோசனை வழங்கினர்.
வேறுசிலர், ‘’கலீஃபா அவர்களே! இந்தக் கொள்ளைநோய் இருக்கும் பகுதிக்கு பல்வேறு நபித்தோழர்களை நீங்கள் அழைத்துச் செல்வது உசிதமல்ல என்று நாங்கள் கருதுகிறோம்’’ என்றனர்.
இரண்டு கருத்துகளையும் பரிசீலித்த கலீஃபா உமர் (ரலி) அவர்கள், இறுதியில் (சிரியாவுக்குச் செல்லாமல்) மதீனா திரும்புவதெனத் தீர்மானித்து, மறுநாள் காலையில் மதீனாவுக்குப் புறப்படும்படி மக்களுக்கு உத்தரவிட்டார்கள்.
அப்போது அபூஉபைதா (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் விதியிலிருந்து வெருண்டோடுவதற்காகவா (ஊர் திரும்புகிறீர்கள்)?’’ என்று கேட்க, உமர் (ரலி) அவர்கள், ‘’ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் ஒரு விதியிலிருந்து இன்னொரு விதியின் பக்கமே வெருண்டோடுகிறோம்’’ என்று பதிலளித்தார்கள்.
அப்போது தம் தேவையொன்றுக்காக வெளியே சென்றிருந்த அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் (அங்கு) வந்து (நடந்த விவகாரத்தைக் கேள்விப்பட்டு), ‘’இது தொடர்பாக என்னிடம் ஒரு விளக்கம் உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஓர் ஊரில் கொள்ளைநோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும்போது அங்கு கொள்ளைநோய் பரவினால் அதிலிருந்து தப்புவதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள்’ என்று சொல்ல நான் கேள்விப்பட்டுள்ளேன்’’ என்றார்கள்.
உடனே உமர் (ரலி) அவர்கள் (தமது முடிவை நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப அமையச் செய்ததற்காக) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு (மதீனா) திரும்பினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் தமிழாக்கம், ஹதீஸ் - 4461)
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அமவாஸ் கொள்ளைநோய் பீடித்த ஆண்டு நான் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்களுடன் சிரியாவில் இருந்தேன். அந்த நோயின் தாக்கம் வீரியமானபோது இந்தத் தகவல் கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது உமர் (ரலி) அவர்கள் தளபதி அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.
அந்தக் கடிதத்தில், ‘’உங்கள்மீது சலாம் உண்டாகட்டுமாக! எனக்குத் தற்போது ஒரு தேவை ஏற்பட்டுள்ளது. அது குறித்து உங்களிடம் நான் நேருக்குநேர் பேச வேண்டியுள்ளது. இந்தக் கடிதத்தைப் படித்து முடித்தவுடன் நீங்கள் என்னிடம் புறப்பட்டு வரவேண்டும் என அறுதியிட்டுக் கூறுகிறேன்’’ என எழுதியிருந்தார்கள்.
அந்தக் கடிதம் கிடைத்ததும் அதைப் படித்த அபூஉபைதா (ரலி) அவர்கள், இந்த நோய்க்குப் பலியாகாமல் தம்மை சிரியாவிலிருந்து வெளியேற்ற கலீஃபா உமர் (ரலி) அவர்கள் நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, ‘’கலீஃபா உமர் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக’’ என்று கூறியவர்களாக, அன்னாருக்குப் பதில் கடிதம் ஒன்றைப் பின்வருமாறு எழுதினார்கள்:
கலீஃபா அவர்களே! உங்களுக்கு என்னிடம் என்ன தேவை ஏற்பட்டிருக்கும் என்று நான் புரிந்துகொண்டேன். தற்போது நான் முஸ்லிம்களின் படையில் பணிபுரிந்துவருகிறேன். மனதளவில் அவர்களை என்னால் வெறுத்தொதுக்க இயலாது. என் விஷயத்திலும் அந்த முஸ்லிம்கள் விஷயத்திலும் அல்லாஹ் தன் முடிவை எடுக்காத வரையில் அவர்களைவிட்டுப் பிரிய நான் விரும்பவில்லை. எனவே, உங்களின் அறுதியான முடிவிலிருந்து எனக்கு விலக்களித்துவிடுங்கள். என்னை என் படையினரோடு விட்டுவிடுங்கள்.
இந்தக் கடிதத்தைப் படித்த உமர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்தார்கள். அதைப் பார்த்த மக்கள், ‘’என்ன, அபூஉபைதா (ரலி) அவர்கள் இறந்துவிட்டார்களா?’’ எனக் கேட்டனர். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘’ஆம்; அவர் இறந்துவிடுவார்போல்தான் தெரிகிறது’’ என்றார்கள்.
பின்னர் அபூஉபைதா (ரலி) அவர்களுக்கு உமர் (ரலி) அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். அதில், ‘’அபூஉபைதா (ரலி) அவர்களே! நீங்கள் சுற்றுச்சூழல் மாசுபட்ட பகுதியில் மக்களைத் தங்கவைத்துள்ளீர்கள்; உடனே, அவர்களை அங்கிருந்து அகற்றி, சூழல் மாசுபடாத (மக்கள் நடமாட்டம் குறைந்த) உயரமான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்’’ எனக் குறிப்பிட்டிருந்தார்கள்.
அந்தக் கொள்ளைநோயின் தாக்கம் தீவிரமானபோது (ஷாம் நாட்டின்) ஆளுநராக இருந்த தளபதி) அபூஉபைதா (ரலி) அவர்கள் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள்.
அப்போது,
‘’மக்களே! இந்தக் கொள்ளைநோய், உங்கள் இறைவனின் அருளு(க்குக் காரணமானது)ம் உங்கள் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களின் இறப்பு(க்கான காரணமு)ம் ஆகும்’’ என்று கூறிவிட்டு,
‘’அபூஉபைதாவாகிய நான் (வீரமரணத்தின் நன்மையைத் தரும்) இந்த நோயில் எனது பங்கை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் (இவ்வூரிலிருந்து நான் வெளியேறமாட்டேன்)’’ எனத் தெரிவித்தார்கள்.
பின்னர் அந்த நோயால் பீடிக்கப்பட்ட அபூஉபைதா (ரலி) அவர்கள் இறந்தார்கள். அவர்மீது அல்லாஹ் தனதருளைப் பொழிவானாக.
பிறகு மக்களுக்கு முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள்.
அவர்களும் பின்னர் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள். அப்போது, ‘’மக்களே! இந்தக் கொள்ளைநோய், உங்கள் இறைவனின் அருளு(க்குக் காரணமானது)ம் உங்கள் நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த நன்மக்களின் இறப்பு(க்கான காரணமு)ம் ஆகும்’’ என்று கூறிவிட்டு, ‘’முஆதாகிய நான் (வீரமரணத்தின் நன்மையைத் தரும்) இந்த நோயில் முஆதின் குடும்பத்தாருக்குரிய பங்கை அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் (இவ்வூரிலிருந்து நான் வெளியேறமாட்டேன்)’’ எனத் தெரிவித்தார்கள்.
இதையடுத்து முஆத் (ரலி) அவர்களின் புதல்வர் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் அந்தக் கொள்ளைநோயில் பீடிக்கப்பட்டு இறந்தார்கள். பின்னர் முஆத் (ரலி) அவர்களும் அந்த நோய்க்குப் பலியானார்கள்.
அவர்களுக்குப்பின் மக்களுக்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டார்கள். அன்னார் மக்களிடையே நின்று உரையாற்றினார்கள். அப்போது, ‘’மக்களே! இந்த நோய் பரவும்போது நெருப்பைப் போன்று தீவிரமாகப் பரவும். எனவே, இங்கிருந்து விலகி மலை(ப்பகுதி)களுக்கு (தனித்தனியாக)ச் சென்றுவிடுங்கள்’’ என்று கூறினார்கள்.
அப்போது ‘அபூவாஸிலா’ அல்லது ‘அபூவாயிலா’ (ரலி) அவர்கள், ‘’நீர் உண்மைக்குப் புறம்பாகப் பேசுகிறீர். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழமையில் இருந்துள்ளேன் (இப்படி அவர்கள் கூறியதை நான் கேட்டதில்லை). நீர் எனது இந்தக் கழுதையைவிட மோசமானவர்’’ என்று விமர்சித்தார்கள்.
அதற்கு அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள், ‘’அல்லாஹ்வின் மீதாணையாக! உமது விமர்சனத்திற்கு நான் பதிலளிக்கப்போவதில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இங்கு தங்கியிருக்கவும் மாட்டேன்’’ என்று கூறிவிட்டுப் பின்னர் (அந்தப் பகுதியிலிருந்து) வெளியேறினார்கள்.
அவ்வாறே மக்களும் வெளியேறி, தனித்தனியாகச் சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவர்களைவிட்டு அல்லாஹ் அந்தக் கொள்ளைநோயை அகற்றினான்.
(சமூக ஒன்றுகூடல் நிகழாமல் மக்களைத் தனிமைப்படுத்தினால் இந்தக் கொள்ளைநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற) அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் யோசனை கலீஃபா உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது.
அப்போது கலீஃபா உமர் (ரலி) அவர்கள் அதை வெறுக்கவில்லை. (அது அவர்களுக்குப் பிடித்திருந்தது.)
(முஸ்னது அஹ்மத் தமிழாக்கம், ஹதீஸ் - 1605)
இந்தக் கொள்ளைநோயில் இறந்தவர்கள் 25,000 பேர் என்று இமாம் நவவீ (ரஹ்) அவர்களின் அல்மின்ஹாஜ் (ஷர்ஹு ஸஹீஹி முஸ்லிம்) நூலில் காணப்படுகிறது.
மற்றொரு கூற்றில், அன்றைக்கு சிரியாவிலிருந்த படைவீரர்களின் எண்ணிக்கை 36,000. அவர்களில் கொள்ளைநோய்க்குப் பலியானோர் 30,000 பேர். அதன் பின்னர் சிரியாவில் 6000 படைவீரர்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர் என்று சொல்லப்படுகிறது.
முக்கியக் குறிப்பு
பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவை நடைபெறாமல் இருப்பது இப்போது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இது, உணர்வு பூர்வமாகப் பார்த்தால் சரிதான். ஆயினும் அறிவு ரீதியாகப் பார்த்தால் இது குறித்துக் கவலை கொள்வதற்குச் சட்ட ரீதியாக எதுவுமில்லை. இதைப் பின்வரும் தகவல்களிலிருந்து அவதானிக்கலாம்:
- மேற்கண்ட அமவாஸ் கொள்ளைநோய் குறித்த வரலாற்றுக் குறிப்பில், சிரியாவின் மூன்றாம் ஆளுநராகப் பொறுப்பேற்ற அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களின் கட்டளைப்படி மலைப்பாங்கான பகுதிகளுக்குச் சென்று, தம்மை சமூகத் தனிமைக்கு உட்படுத்திக்கொண்ட நபித்தோழர்களும் மற்ற முஸ்லிம்களும் குறிப்பிட்ட சில மாதங்கள்வரை கடமையான தம்முடைய தொழுகைகளைத் தனித்தனியாகவே நிறைவேற்றியிருக்க வேண்டும் என்று தெரியவருகிறது.
- இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
فَإِنْ كَانَ خَائِفًا إذَا خَرَجَ إلَى الْجُمُعَةِ أَنْ يَحْبِسَهُ السُّلْطَانُ بِغَيْرِ حَقٍّ كَانَ لَهُ التَّخَلُّفُ عَنْ الْجُمُعَةِ...، وَإِنْ كَانَ تَغَيُّبُهُ عَنْ غَرِيمٍ لِعُسْرَةٍ وَسِعَهُ التَّخَلُّفُ عَنْ الْجُمُعَةِ. (الإمام الشافعي – الأم)
ஜுமுஆ தொழுகைக்குச் செல்ல வேண்டிய ஒருவர், தாம் வெளியே சென்றால் தம்மை அநியாயமாக அரசர் கைது செய்து சிறையில் அடைப்பார் என்று அஞ்சினால், அவர் ஜுமுஆ தொழுகைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம்.
அவ்வாறே ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாகக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடன் கொடுத்தவருக்குப் பயந்து தலைமறைவாக இருந்தால், அவரும் ஜுமுஆ தொழுகைக்குச் செல்வதைத் தவிர்க்கலாம். (நூல்: அல்உம்மு)
- இமாம் அல்முர்தாவீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
وَيُعْذَرُ فِي تَرْكِ الْجُمُعَةِ وَالْجَمَاعَةِ الْمَرِيضُ بِلَا نِزَاعٍ، وَيُعْذَرُ أَيْضًا فِي تَرْكِهِمَا لِخَوْفِ حُدُوثِ الْمَرَضِ. (المرداوي - الإنصاف في معرفة الراجح من الخلاف)
நோய்வாய்ப்பட்டுள்ள ஒருவர் ஜமாஅத் தொழுகைகளையும் ஜுமுஆ தொழுகையையும் கைவிடுவதற்கு நியாயம் உண்டு. இதில் கருத்து வேறுபாடு எதுவுமில்லை. அவ்வாறே, நோய் உருவாகலாம் எனும் அச்சம் நிலவும் போதும் அவற்றைக் கைவிடுவதற்கு நியாயம் உண்டு. (நூல்: அல்இன்ஸாஃப் ஃபீ மஅரிஃபத்திர் ராஜிஹி மினல் கிலாஃப்)
- இமாம் ஸகரிய்யா அல்அன்ஸாரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
وَقَدْ نَقَلَ الْقَاضِي عِيَاضٌ عَن الْعُلَمَاءِ أَنَّ الْمَجْذُومَ وَالْأَبْرَصَ يُمْنَعَانِ مِنْ الْمَسْجِدِ وَمِنْ صَلَاةِ الْجُمُعَةِ، وَمِنْ اخْتِلَاطِهِمَا بِالنَّاسِ. (زكريا الأنصاري - أسنى المطالب)
கருங்குஷ்டம் பீடித்தவரும் வெண்குஷ்டம் பீடித்தவரும் பள்ளிவாசலுக்கு (ஜமாஅத் தொழுகைகளுக்கு) வரக் கூடாது என்றும் ஜுமுஆ தொழுகைக்கு வரக் கூடாது என்றும் மக்களோடு சேர்ந்திருக்கக் கூடாது என்றும் தடுக்கப்படுவார்கள் என அறிஞர்கள் கூறுவதாக காழீ இயாள் (ரஹ்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். (நூல்: அஸ்னல் மத்தாலிப்)
இதற்கான காரணத்தைக் குறிப்பிடவந்த அறிஞர் இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ (ரஹ்) அவர்கள்,
سَبَبَ الْمَنْعِ فِي نَحْوِ الْمَجْذُومِ خَشْيَةَ ضَرَرِهِ، وَحِينَئِذٍ فَيَكُونُ الْمَنْعُ وَاجِبًا فِيهِ. (ابن حجر الهيتمي - فتاوى الفقهية الكبرى)
‘’அந்த நோய் அடுத்தவரைப் பாதிக்கலாம் எனும் அச்சமே இதற்குக் காரணமாகும். எனவே, இதுபோன்ற தருணத்தில் அந்த நோயாளியைப் பள்ளிவாசலுக்கு (ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவற்றுக்காக) வர வேண்டாம் எனத் தடுப்பது அவசியம் (வாஜிப்) ஆகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: ஃபதாவல் ஃபிக்ஹிய்யா அல்குப்ரா)
- சா. யூசுப் சித்தீக் மிஸ்பாஹி 

3 comments:

  1. May Allah bless the writer of this article for opening the eyes of readers..toward the Islamic point of view of the scholars.

    Dear Muslim brothers,, let us stick to the knowledge and stay away for emotional feelings.

    ReplyDelete

Powered by Blogger.