Header Ads



கோட்டாபய மஹிந்த மீது நம்பிக்கை வைத்து, செயற்படவேண்டியது காலத்தின் தேவையாகும்

எதிர்வரும்  பாராளுமன்ற பொதுத் தேர்தல் நாட்டின் நாலா திசைகளிலும் வாழக்கூடிய தமிழ்,  முஸ்லிம் மக்களின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தல் என்பதை உணர்ந்து, நிதானமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியது காலத்தின் தேவையாகும் என வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார்.

வடமேல் மாகாணசபையில்    இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பாராளுமன்ற தேர்தல் பற்றி வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர்;

நாட்டில் நாலா திசைகளிலும் வாழக்கூடிய தமிழ் , முஸ்லிம் மக்கள் பல அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்குண்டு வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். அரசியல் ரீதியாக நெருக்கடிக்குள் சிக்குண்டு இருக்கும் இவ்விரு சமூகத்தையும் விடுவிக்க அல்லது வெளியேற்ற ஒரு சில அரசியல் தலைமைத்துவங்கள் விரும்புவதில்லை. அவ்வாறான ஒரு நிலை ஏற்பட்டால் அந்த அரசியல் தலைவர்களுக்கு ஒரு அரசியல் எதிர்காலமே இல்லாமல் போய்விடும்.

பிச்சைக்காரனின் காலில் காயம் இருக்கும் வரை அதைக் காட்டிக் கொண்டு அவன் பிச்சை எடுத்துக் கொண்டே இருப்பான். எப்போது காயம் இல்லாமல் போய்விடுமோ அன்றே அவன் பிச்சைக்கார தொழிலுக்கு முழுக்கு போட வேண்டிய நிலை ஏற்படும், இதுவே இன்றைய எமது சமூக அரசியல் தலைமைத்துவங்களின் நிலை. இதை உணர்ந்து தமிழ் முஸ்லிம் மக்கள் சிந்தனையோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் செயற்பட வேண்டுமென நான் அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இனத்தின் பெயராலும், மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும் எப்போது அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டதோ,  அன்றே எமது சமூகத்திற்கு கேடு ஏற்பட்டு விட்டது என்றே கூறவேண்டும். சிலர் தங்களது அரசியல் பிழைப்புக்காக இனத்தையும் மதத்தையும் அரசியலாக மாற்றிச் செயல்படுகின்றனர். இதனால் நாட்டில் காலத்துக்குக் காலம் இனவாத,  மதவாத பிரச்சினைகள் ஏற்படும் போது, அரசியல் புரியும். இவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டாலும், பாதிக்கப்படுகின்ற மக்களை இவர்களால் பாதுகாக்க முடியாமல் போனதைக் கடந்தகால அரசியல் வரலாறு எமக்கு நல்ல சான்றுகளையும்  பாடங்களையும் கற்றுத் தந்துள்ளது.

எமது முன்னைய அரசியல் தலைவர்களான ரீ.பீ. ஜாயா, டாக்டர் எம்.சி.எம். கலீல், சேர். ராசிக் பரீட், கலாநிதி காயிதே மில்லத், பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் இனவாத, மதவாத அரசியல் புரியாது, பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களுடன் இணைந்து செயற்பட்டார்கள்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி, ரணில் சஜித் என இரு கூறுகளாகப் பிரிந்து செயற்படும் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாட்டின் அனைத்து மக்களையும் அரவணைத்து அரசியல் புரிய ஆசைப்படும் போது, அவர்களின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படவேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

1 comment:

  1. சமகாலத்து மண்குதிரைக்குச் சிறந்த உதாரணம் இந்த மாபுருஷர்தான்! இதை நம்பி கடலில் இறங்கியருக்கு மிஞ்சுவது கடைசி மூச்சு விடும் சந்தர்ப்பம் மட்டும்தான்!

    ReplyDelete

Powered by Blogger.