Header Ads



மக்களுக்கு மேலும் பண, பொருள் நிவாரணங்கள் வழங்க ஜனாதிபதி பணிப்புரை

புதிய கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் இடர் நிலைமைக்குள்ளான குடும்பங்கள் மற்றும் நபர்களுக்கு மேலும் பல பண மற்றும் பொருள் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளன.

ஒரே தடவையில் வழங்கப்படும் கொடுப்;பனவாக 5000 ரூபாவை வழங்குவதன் மூலம் அவர்கள் முகம்கொடுத்துள்ள பொருளாதார கஷ்டங்கள் தணியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அத்தியாவசிய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்காக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி அவர்களினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்தும் விதம் குறித்து விளக்கும் சுற்றுநிருபமொன்று ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி. ஜயசுந்தர அவர்களின் கையொப்பத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அது, நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அமைச்சுக்களின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட, பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. புதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிக்கும் முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டம் நிறைவுற்றதாக அறிவிக்கும் வரை இந்த நிவாரணங்கள் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும்.

புதிய கொரோனா வைரஸை இலங்கையிலிருந்து ஒழிப்பதற்கான முன்னுரிமை நிகழ்ச்சித்திட்டத்;தின் அத்தியாவசிய அம்சமாக இருப்பது அனைத்து மக்களினதும் இயல்பு வாழ்க்கையை தொடர்ச்சியாக பேணுவதாகும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் தனது சுற்றுநிருத்தில் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள நாளாந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த மக்கள் பிரிவினரை பிரதான கட்டமைப்புக்குள் இணைத்துக்கொள்வது அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும் என ஜனாதிபதி செயலணியினால் இனம் காணப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களை நிவாரண விலைக்கு வீடுகளுக்கு வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்துமாறு ஜனாதிபதி அவர்கள் தனக்கு பணித்திருப்பதாக கலாநிதி ஜயசுந்தர அவர்கள் தனது சுற்றுநிருபத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் இன்று வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் மற்றும் அவற்றை பெற்றுக்கொள்வதற்கு தகைமையுள்ளவர்கள் கீழ்வருமாறு,

முதியோருக்கான கொடுப்பனவு பெறும் 416764 பேருக்கும் முதியவர்களாக இனம்காணப்பட்ட, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 142345 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படும்.
அங்கவீனர்களுக்கான கொடுப்பனவு பெறும் 84071 பேருக்கும் அங்கவீனர்கள் என அடையாளம் காணப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டுள்ள 35229 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு உரித்தாகும்.
விவசாய காப்புறுதி முறைமையின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள 160675 விவசாயிகளுக்கும் ரூபா 5000 கொடுப்பனவு உரித்தாகும்.
சிறுநீரக நோயாளிகளுக்கான கொடுப்பனவு பெறும் 25320 பேருக்கும், மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 13850 பேருக்கும் ரூபா 5000 கொடுப்பனவு வழங்கப்படும்.
கர்ப்பிணி தாய்மார் மற்றும் மந்த போசனையுடைய பிள்ளைகளுக்கான திரிபோஷ மற்றும் வேறு போசனை பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வழங்கப்படும்.
சமூர்த்தி கொடுப்பனவு பெறும் 1798655 பேருக்கும் மேலும் ஆவணப்படுத்தப்பட்டுள்ள 600339 குடும்பங்களுக்கும் ரூபா 5000 கொடுப்பனவு சமூர்த்தி வங்கிகள், சமூர்த்தி அதிகார சபையின் ஊடாக வழங்கப்படும்.
ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் 645179 பேருக்கு ஓய்வூதிய சம்பளம் வளங்கப்படும்.
1500000 அரச ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளம் வழங்கப்படுவதுடன் சம்பளத்திலிருந்து கடன் தொகை அரவிடப்படுவது மீண்டும் அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டிகள், ட்ரக் வண்டிகள், பாடசாலை பஸ் மற்றும் வேன்கள் மற்றும் சுயதொழிலுக்காக பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கில்கள் உரிமையாளர்கள் உள்ளிட்ட சுய தொழில்களில் ஈடுபட்டுள்ள 1500000 பேருக்கு வரி தவணைக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
உருவாகியுள்ள நிலைமைகளுக்கு மத்தியில் பொருளாதார அசௌகரியங்கள் காரணமாக ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாத தனியார் வர்த்தகங்களுக்கும் நிவாரணங்கள் உரித்தாகும்.
மேற்படி வகைப்படுத்தலுக்கு உட்படாத, ஆனால் இடர் நிலைமைக்கு முகம்கொடுத்துள்ளதாக இனம் காணப்படுபவர்களுக்கும் சமமான நிவாரணங்கள் வழங்கப்படும். அதனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமூக சேவை அபிவிருத்தி, சமூர்த்தி அபிவிருத்தி, விவசாய ஆராய்ச்சி அபிவிருத்தி மற்றும் குடும்ப சுகாதார சேவைகள் அதிகாரிகளினதும் மாவட்ட செயலாளர்களினதும் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படும்.

மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் அத்தியாவசிய பொருட்களை ஆட்களுக்கு நேரடியாக பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளரின் சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் இடைத்தரகர்கள் இன்றி சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் தனியார் விற்பனை வலையமைப்புகளை பங்குதாரர்களாக்கி கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று குறித்த அதிகாரிகள் ஜனாதிபதி பணிக்குழாமின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களின் கீழ் செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

மொஹான் சமரநாயக்க

பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.30

No comments

Powered by Blogger.