Header Ads



கொரோனாவிலிருந்து எம்மை நாம், பாதுகாத்துக்கொள்ள வேண்டும் - அரசாங்கத்தை மாத்திரம் நம்ப வேண்டாம்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் மெத்தனமாக செயற்படுவதாக சிங்கள பௌத்த மக்களின் அதியுர் மதத் தலைமை பீடங்களில் ஒன்றான மல்வத்து பீடம் குற்றம்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் இன்னமும் இலங்கையில் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதற்காக அரசாங்கம் மெத்தனப் போக்குடன் செயற்படக்கூடாது என வலியுறுத்தியுள்ள மல்வத்து பீடத்தின் துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர், இவ்வாறான நடவடிக்கைகளால் கொரோனா வைரஸின் தாக்கம் மோசமடையலாம் என்றும் எச்சரித்துள்ளார்.

உலகில் பல்வேறு நாடுகள் விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்களை தடை செய்துள்ள நிலையில் இலங்கையில் அவ்வாறான தடைகள் ஏதும் அமுல்படுத்தாது இருப்பது குறித்தும் தனது அதிருப்தியை துணை மகாநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் வெளிப்படுத்தியுள்ளார்.

'எமது நாட்டில் கொரோனா வைரஸ் குறிப்பிடத்தக்க பாதிப்பினை ஏற்படுத்தவில்லை, எனினும் இந்த நோய்த் தாக்கம் எமது நாட்டிற்கு ஏற்படவில்லை என எவரும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது நாட்டில் இதன் தாக்கம் ஏற்படலாம், பல நாடுகள், விமான பயணங்களை, கப்பல் பயணங்களை தடை செய்துள்ளன.

எனினும் எமது நாடு எவ்வித தடைகளையும் இதுவரை விதிக்கவில்லை. ஆகவே நாட்டை வந்தடையும் பயணிகள் ஊடாக இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.

ஆகவே எமது நாட்டின் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையை மாத்திரம் நம்பியிருக்க வேண்டாம். மக்கள் எந்த சந்தர்ப்பத்திலும் எமக்கும் இந்த நோய்த் தொற்று ஏற்படலாம் என்ற அவதானத்துடனேயே இருக்க வேண்டும்.

அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருக்க வேண்டாம். நாம் எம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் காலம் என்பதால் பெரிய கூட்டங்கள், பேரணிகள் இடம்பெறும் இதுத் தொடர்பில் மாத்திரம் சிந்திக்க வேண்டும்.

இந்த நோய்த் தொடர்பிலான தெளிவுப்படுத்தல்களை ஊடகங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் மீண்டும் இதுத் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இதன்மூலம் நோய்த் தொற்றை தடுக்க முடியும்” என அவர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.