Header Ads



மாணவர்கள் வீடுகளிலிருந்தே கல்வி, கற்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் மாதம் நடாத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த அனைத்துப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மாணவர்கள் தமது வீடுகளிலிருந்தவாறே இணையம் மூலமாகக் கல்வி கற்கும் வகையிலான ஏற்பாடுகளை கல்வியமைச்சு ஆரம்பித்திருக்கிறது. 

இதுகுறித்து கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று -18- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது விளக்கமளிக்கப்பட்டது.

அதன்படி தரம் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டு, அக் காணொளிகள் டயலொக் வலையமைப்பின் ஊடாக வழங்கப்படும் 'நனச' தொலைக்காட்சியின் மூலம் ஒளிபரப்பப்படுகின்றன. 

அதேபோன்று கல்வியமைச்சின் மூலம் 'தக்சலாவ' என்ற வேலைத்திட்டத்தின் கீழ் e-Thaksalawa.moe.gov.lk  என்ற இணையத்தளமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளத்தில் 1 - 13 வரையான வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள், அதனைக் கற்பதற்கு இலகுவான விதத்தில் மும்மொழியில் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கும் மேலதிகமாக இணைய நூலகம், விசேட கற்றல், வினாப்பத்திரங்கள் ஆகியவையும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கல்வித் திணைக்கள அதிகாரி தெரிவித்தார். அதுமாத்திரமன்றி சில பாடங்களை செயன்முறை அடிப்படையில் கற்கும் விதமாகக் காணொளிகளும் பதிவேற்றப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் காரணமாக பாடசாலைகளின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்கள் வீடுகளில் தங்கியிருக்கும் நாட்களைப் பயனுடைய வகையில் செலவிடும் வகையில் நாம் இத்திட்டத்தை முனைப்புடன் அமுல்படுத்துவதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்' என்றார். 

No comments

Powered by Blogger.