Header Ads



வைத்தியசாலைகளுக்கு கிளினிக், வரவேண்டாமென வலியுறுத்தல்

- கே.கண்ணன் -

எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய்,  உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாமென, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பில் சுகாதார அமைச்சு  வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மேற்படி நோயாளிகளுக்குக் காணப்படும் அதிக ஆபத்துக் காரணமாக நோயாளர்கள், பிணி நிலையத்துக்கு (கிளினிக்) வரவேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதற்குப் பதிலாக அவர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கியமான பொறுப்புடைய ஒருவரை, பிணி நிலையத்துக்கு கிளினிக் புத்தகத்துடன் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இது குறித்த தேவையான சேவைகள் வழங்குவதற்காக அரச வைத்தியசாலைகள் பிணி நிலைய நேர அட்டவணையின்படி செயல்பட்டு வருவதுடன், இரு மாதங்களுக்குத் தேவையான மருந்தும் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. 

மேலும், பிணி நிலையத்துக்கு அவர்களால் வரமுடியாவிட்டால் ஏதேனுமொரு வார நாள்களில் அம்மருந்துகளை வெளிநோயாளர்கள் பிரிவில் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிணி நிலைய புத்தகப் பதிவுகள் அல்லது நோயறிதல் அட்டைகள், ஊரடங்கு அமுலின் போது அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.