March 07, 2020

முஸ்லிம்களுக்கு எதிரான டெல்லி வன்முறை - அருந்ததிராயின் அதிரடிப் பேச்சு


இது கொரோனா வைரஸின் எங்கள் பதிப்பு - நாங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கிறோம்,

டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய் -- இது டெல்லியின் ஜந்தர் மந்திரில் அவர் ஆற்றிய உரை,

அன்புக்குரிய நண்பர்களே தோழர்களே 
சக எழுத்தாளர்களே

இன்று நாங்கள் கூடியிருக்கின்ற இடம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்ற கட்சியினரின் உறுப்பினர்களின் பொறுப்பற்ற வெறுப்புரைகளால் தீ மூட்டப்பட்ட, போலீசார் பின்புலமாக இருந்து முழு வேகத்துடன் உதவிய பெரும்பான்மையான இலத்திரனியல் பொதுஜன ஊடகங்களால் முழுநேர உதவி உத்தரவாதம் அளிக்கப்பட்ட, நீதிமன்றங்கள் தங்கள் வழியில் எந்தத் தடைகளையும் ஏற்படுத்தாது என்று ஆறுதல் மிக்கநம்பிக்கையூட்டப்பட்ட, ஒரு பாசிஸ கும்பலினால் ஆயுதங்கள் கொண்டு முஸ்லிம்கள் மீது கொலைவெறியாட்டம் ஆடிய வடகிழக்கு டெல்லியின் உழைக்கும் வர்க்கம் வாழ்கின்ற குடியிருப்புக்களிலிருந்து ஒரு சிறிய பேரூந்து பயண தூரத்தில் அமைந்திருக்கிறது.

இந்தத் தாக்குதல்  குறித்து சிறிது காலமாக காற்றுவாக்கில் காதில்விழுந்து  இருந்ததனால் மக்கள் ஓரளவு தங்களை தயார்  படுத்தியிருந்தார்கள், ஆகவே தங்களை ஓரளவு காத்துக் கொண்டார்கள். சந்தைகள் கடைகள் வீடுகள், பள்ளிவாயல்கள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன  வீதிகள் யாவும் கற்களாலும் கழிவுகளாலும் நிரம்பிக் கிடந்தன . வைத்தியசாலைகள் காயம் பட்டோரினாலும் இறந்து கொண்டிருப்போரினாலும் நிரம்பி வழிந்தன, பிணவறைகள் பிணங்களினால் நிறைந்து கிடந்தது  அவற்றுள் முஸ்லீம், ஹிந்துக்கள் என்ற இரு சாரார் மட்டுமல்லாது ஒருபோலீஸ்காரரும், இளம் புலனாய்வு பணியக  அதிகாரியும் உட்பட்டிருந்தார். ஆம், மக்கள் இரு சாராரும் தங்களது குரூர கொடூர தன்மையையும் நம்ப முடியாத தைரியத்தையும் அன்பையும் வெளிக்காட்டக்கூடிய தங்கள் சக்தியை வெளியே கொட்டினார்கள் 

எப்படியிருப்பினும் இரு சாராருக்கும் ஒரு சமநிலையை காண முடியவில்லை, இவை எதுவும்,  இன்று நிர்வாணமாக நிற்கின்ற பாசிஸ  தேசத்தின் கருவிகளின் பின்புலத்தில் இயங்கிய, ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்ட கல்வியறிவற்ற, மூடராகிய ஒரு கும்பலினால்தான் இந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மையை மாற்றப போவதில்லை. இந்த சுலோகங்களுக்கு உடன்படாத வகையில் மக்கள் இதனை இந்து முஸ்லீம் கலவரமாக பெயரிட விரும்பவில்லை  இது இன்றைக்கு முன்கொண்டுசெல்லப்படும் பாசிஸத்துக்கும் அதற்கு எதிரான போராட்டத்துக்கும் இடையிலான முறுகலின் வெளிப்பாடாக அதனை நாம் காணமுடியும். இங்கே முஸ்லிம்கள் பாசிசத்தின் எதிரிகளுள் முதல் எதிரிகளாக  இருக்கிறார்கள், இதனை இன்று பலபேர் நோக்குவது போல் ஒரு இனக்கலவரமாகவோ அல்லது இடது மற்றும் வலது சாரி சிந்தனைகளின் மோதலாகவோ . அல்லது சரிக்கும் பிழைக்கும் இடையிலான சிக்கலாகவோ பார்ப்பதென்பது ஒரு தெளிவற்றதும் ஆபத்தானதுமான ஒரு பார்வையாகவே முடியும்.

போலீசார் தீவைப்பு சம்பவங்களை வேடிக்கை பார்த்து நிற்பதனையும், சில வேளைகளில் அவர்களே அதில் பங்கெடுப்பதனையும் நாம் எல்லோரும் காணொளிகளில் கண்டிருக்கிறோம். டிசம்பர் 15ம் திகதி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அராஜகத்தில் ஈடுபடும்போது அவர்கள் செய்தது போலவே இங்கும் அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை அடித்து நொறுக்குவதனை கண்டிருக்கிறோம், அவர்கள் காயப்பட்ட முஸ்லிம்களை அடிப்பதனையும் அவர்களை சூழ்ந்து கொண்டு தேசிய கீதத்தை பாடும்படி வற்புறுத்துவதையும் கண்டிருக்கிறோம், எங்களுக்கு தெரியும்  அந்த தாக்கப்பட்ட மக்களுள்  ஒர் இளைஞன் இறந்துவிட்டவன் என்று, 

மரணித்த, மற்றும் காயப்பட்டு அல்லலுக்கு ஆளான முஸ்லிம்கள், இந்துக்கள் யாவரும் பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் இதைவிட பலமடங்காக பல வாரங்கள் அரங்கேற்றப்பட்ட மனிதப்படுகொலைகளை நிகழ்த்திய  ஒரு மாநிலத்தின் மகுடம் சூடியிருந்த, அந்த மாநிலத்தின் உள்விவகாரங்களுக்கு பொறுப்பாயிருந்த, அவர் இதற்கெல்லாம் புதியவரல்ல என்று சொல்லக்கூடிய, பாசிச பிரதமர் என்று நிர்வாணப்பட்டு நிற்கின்ற நரேந்திர மோடியின் தலைமையிலான அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களே.

இந்தக் குறிப்பிட்ட பெருந்தீயின் உடட்கூறுகள் இனிவரப்போகும் பல வருடங்களுக்கு ஆராயப்படப் போகின்றன, ஆனால் அவை குறித்த உள்ளக விளக்கங்கள் ஒரு சரித்திர பதிவீடாக மட்டுமே இருக்கப்போகிறது, ஏனென்றால், சமூக ஊடகங்களால் நெய்யூற்றி கொழுந்து விட்டெரியச் செய்யப்பட்ட வெறுப்புமிக்க வதந்திகளின் இயல்பினை அடிப்படையாகக் கொண்டு, அதன் சுழல் எம்மை சூழ்ந்து கொள்வதனையும், தென்றலில் மிதந்து வரும் அதன் இரத்த வாடையையும்  நாம் ஏற்கனவே நுகர ஆரம்பித்து விட்டோம் என்பதனாலும்  இது ஒரு பதிவாக மட்டும் கடந்து போகப் போகிறது, இப்பொழுது வடக்கு டெல்லியில் கொலைகள் நடைபெறா விட்டாலும் நேற்று பிப்ரவரி 29ம் திகதி ஒரு கும்பல் நடந்ததாக்குதலை கட்டமைத்த “Desh ke Gaddaron ko, Goli maaron saalon ko.” என்ற கோசத்தை எழுப்பியபடி சென்றதனைநாம்கண்டோம் 

சில நாட்களுக்கு முன்னர்தான் டில்லி உயர்நீதிமன்ற நீதியரசர் முரளிதரன் பிஜேபி யின் முன்னாள் MLA வேட்பாளர் கபில் மிஸ்ரா என்பவர் தாக்குதலை தூண்டும்விதத்தில் பேசியமைக்கும் அதே சுலோகத்தை தனது தேர்தல் பிரச்சாரமாக மேற்கொண்டும் கூட டில்லி போலீசார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையை இட்டு மிகவும் விசனப்பட்டார். அவர் கோபப்பட்டு தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய அதே தினம் 26ம்திகதி இரவு அவருக்கு பணியிட இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டு பஞ்சாப் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறார்.

 கபில் மிஸ்ரா மீண்டும் அதே சுலோகங்களுடன் வீதிகளில் இறங்கியுள்ளார்  மறுஅறிவித்தல் வரை இது தங்கு தடையின்றி பாவனையில் இருக்கும் என்பதே இதன்பொருள்; நீதிபதிகளுடனான விளையாட்டுகளும், கேலிகளும் இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல  நீதியரசர் லோயாவின் கதையை நாங்கள் அறிவோம். குஜராத்தின் நரோடா  படியா என்னும் இடத்தில்  2002ம் ஆண்டு 96 முஸ்லிம்களை கொன்ற சம்பவத்தில் பங்கெடுத்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்ட பாபு பஜ்ரங்கி என்பவனை நாம் மறந்து விட்டோம். அவனுடைய வாக்குமூலத்தை youtube இல் கேளுங்கள். எப்படி தன்னை நரேந்திர பாய் சிறையில் இருந்து மீட்பதற்கு நீதிபதிகளுடன் விளையாடினார் என்பதனை அவன் விலாவாரியாக சொல்லுவான்.

தேர்தல்களுக்கு முன்னர் இப்படியான படுகொலை சம்பவங்களை எதிர்பார்க்க நாம்  கற்றுக்கொண்டிருக்கிறோம். வாக்குகளை ஓர்மைப்படுத்துவதற்கும் துருவப்படுத்தவும்  தொகுதிகளை கட்டமைக்கவும் வெற்றி கொள்ளவும் இவை போன்ற காட்டுமிராண்டித்தனமான உத்திகளை கைக்கொள்ளும் அளவு அவர்கள் வந்து விட்டார்கள். ஆனால் டில்லி படுகொலை தேர்தலுக்கு சிலநாட்கள் பின்னரும் அதுவும் பிஜெபி - ஆர்எஸ்எஸ் கூட்டணி படுதோல்வி அடைந்த பின்னர் நடந்து இருக்கிறது. இதனை டெல்லிக்கான தண்டனையாகவும் முன்வருகின்ற பீகார் தேர்தலுக்கான விளம்பரம் அல்லது முன் எச்சரிக்கையாகவும் கொள்ளமுடியும்.

எல்லாமே பதிவிடப்பட்டுள்ளன. கபில் மிஸ்ரா, பர்வேஸ் வர்மா யூனியன் மந்திரி அனுராக் தாகூர், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்  உள்விவகார அமைச்சர் அமித்சா ஏன், பிரதமர் நரேந்திரமோடி உட்பட எல்லோரது ஆத்திரமூட்டும் பேச்சுக்களும் எல்லோருக்கும் கேட்பதற்கும் பார்ப்பதற்கும் என பதிவிடப்பட்டுள்ளன, இருந்தும் எல்லாமே தலைகீழாக மாற்றப்பட்டுள்ளன, சிஏஏ இற்கு எதிராக 75 நாட்களாக முழுவதும் அமைதியாகவும்  அதிகம் பெண்களாலும் , முஸ்லிம்கள் மட்டுமல்லாது  பெரும்பாலும் முஸ்லிம்களாலும், ஆயிரக்கணக்கில் திரண்டு வீதியில் போராடிய போராட்டக்காரர்களால் முழு இந்தியாவும் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற  தோற்றப்பாட்டை அவர்கள் காண்பிக்கிறார்கள.

தேசிய சனத்தொகை பதிவேடு  என்கின்ற  CPR மற்றும் தேசிய பிரஜைகள் பதிவேடு NRC ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ள முஸ்லிமல்லாத சிறுபான்மையினருக்கு விரைந்து குடியுரிமையை பெற்றுக் கொடுக்கக்கூடிய CAA பிரஜாவுரிமை திருத்த சட்டமூலமானது வெளிப்படையாகவும் வெட்கமற்ற விதத்திலும் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணானது மட்டுமன்றி குரூரமான முறையிலும் வெட்ட வெளிச்சமாகவும் முஸ்லிகளுக்கு எதிரானதுமாகும். இது முஸ்லிம்களை மட்டுமல்லாது இன்று “Goli Maaro Saalon Ko” என்று கூச்சலிடுகின்றவர்கள் உட்பட அவர்கள் கேட்கின்ற உரிய ஆவணங்கள் இல்லாத பல மில்லியன் கணக்கான இந்தியர்களை சட்டரீதியற்றவர்களாகவும், நிலைகுலைந்தவர்களாகவும், குற்றவாளிகளாகவும் ஆக்க க்கூடிய அர்த்தத்தை கொண்டிருக்கிறது.

ஒருமுறை உங்கள் பிரஜாவுரிமை கேள்விக்குள்ளானால் எல்லாமே கேள்விக்குரியதாக மாறிவிடும் ,உங்கள் பிள்ளைகளின் உரிமைகள் உங்கள் நிலவுரிமைகள், உங்கள் வாக்களிக்கும் உரிமைகள் எல்லாமே. 

ஒருமுறை ஹன்னாஹ் ஆரென்ட் சொன்னது போல் “குடியுரிமை உங்களுக்கு எல்லா உரிமைகளையும் பெறுவதற்கு அல்லது வைத்திருப்பதற்கு உரிமையளிக்கிறது”  யாராவது இதைவிட வேறுவிதமாக சிந்திப்பவர் இருப்பாரேயானால் அவர்கள்  தயவு செய்து  அஸாமை நோக்கி உங்கள் கவனத்தை திருப்பி அங்கே இந்துக்கள் முஸ்லிம்கள் தலித்துக்கள் ஆதிவாசிகள் என இருபது லட்சம் மக்களுக்கு என்ன நடந்தது என்று பாருங்கள். இப்பொழுது மேகாலயா  மாநிலத்தில்  உள்ளூர்  வாசிகளுக்கும் மாநிலத்தை சாராதவர்களுக்கும் இடையே பிரச்சினை மூண்டிருக்கிறது, ஷில்லாங்கில்  ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது, வெளிமாநில மக்களுக்கு  எல்லைகள்  மூடப்பட்டுள்ளன.

NPR-NRC-CAA என்கின்ற சட்டங்களின்  ஒரேநோக்கம், இந்தியாவில்  மட்டுமல்லாது  முழு உபகண்டத்திலுமே ஒரு சீர்குலைவை ஏற்படுத்தி மக்களை பிளவுபடுத்துவது மாத்திரமே. இந்தச்சட்டங்கள் இல்லையென்றால் இந்தியாவின் நிகழ்கால உள்விவகார அமைச்சர் வங்காள தேச கறையான்கள் என்று அழைக்கின்ற பல மில்லியன் கணக்கான மனித ஆவிகளை தடுப்பு முகாம்களில் அடைத்து அவர்களை நாடுகடத்த முடியாது. இப்படியான சொற்பிரயோகங்களை பயன்படுத்துவதனாலும் , இது போன்ற முட்டாள்தனமான பேய் சட்டங்களை கொண்டுவருவதனாலும் இந்த அரசாங்கம் தான் அக்கறை காட்டுவதாக நடிக்கின்ற அந்த இந்துக்களை, , டெல்லியிலிருந்து வெளிப்படுகின்ற இனப்பாகுபாட்டின் பின்விளைவுகளை அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ள  பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் வாழும்  பல மில்லியன் இந்துக்களை அது உண்மையிலேயே  ஆபத்தில்  தள்ளுகிறது,

நாங்கள் எங்கே  நிற்கின்றோம் என்று பாருங்கள். 

1947ம் ஆண்டு இன்றைய ஆட்சியாளரை தவிர மற்றைய ஒவ்வொரு மனிதரும் போராடி  காலனித்துவ ஆட்சியாளரிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம். அன்றிலிருந்து சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டங்கள், பெண்ணியப்போராட்டங்கள் என்று எமது சமூக இயக்க முறைமைகள் எமது இன்றைய வரையான பயணத்தை வரையறுத்து நிற்கின்றன . 

1960ம் ஆண்டுகளில் புரட்சிகளின் கோஷங்களாக சமூக நீதி, செல்வங்களின் மீள்பங்கீடு, அடக்குமுறை ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் என்பனவே இருந்தன. 

1990ம் ஆண்டுகளில் 120 கோடி மக்களுக்காக வருடாந்த வரவுசெலவு திட்டத்தில் செலவிடப்பட்ட தொகையை விட கூடுதலான செல்வத்தினை வெறுமனே 63 இந்தியர்கள் தங்கள் கைவசம் வைத்திருந்த நவீன இந்தியாவை கட்டமைக்கின்ற போது ஏற்பட்ட பக்கவிளைவினால் தங்கள் நிலங்களையும் கிராமங்களையும் இழந்த பல லட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர்வினை எதிர்த்து போராடும் அளவுக்கு நாம்  தரம் தாழ்ந்து போனோம். 

இன்று இந்த நாட்டை கட்டமைக்க எதுவுமே செய்யாத ஒரு கூட்டத்திடம் இந்தியப்பிரஜைகளாக எமது உரிமைகளை இரந்து கேட்கும் அளவுக்கு இன்னும் கீழிறங்கி இருக்கிறோம்.. நாம் இரக்க , இரக்க  அரசு எமக்கான பாதுகாப்பை மறுப்பதை காண்கிறோம், போலீசார் இனத்துவேசம் மிக்கவர்களாக மாறுவதை காண்கிறோம், நீதிபதிகள் படிப்படியாக கடமை தவறுவதை அவதானிக்கிறோம். பாதிக்கப்படுவோருக்கு ஆறுதலாகவும் பாதிப்பை ஏற்படுத்துவோருக்கு பாதிப்பை ஏற்படுத்துவோராகவும் இருக்கவேண்டிய ஊடகங்கள் அதற்கு எதிர்மாறாக செயற்படுவதனையும் நாங்கள் காண்கின்றோம். 

இன்று ஜம்முவும் காஷ்மீரும் தங்களது அரசியல் சட்ட ரீதியான விசேட அந்தஸ்தினை இழந்து 210 ஆவது நாள். ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் அவர்களின் மூன்று முன்னாள் முதமைச்சர்கள் உட்பட சிறையிலே வாடுகின்றார்கள். சுமார் எழுபது லட்சம் மக்கள் மனித உரிமை மீறலின் நவீன வழிமுறையொன்றாகிய அப்பட்டமான தகவல் பெறும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிப்ரவரி 26ம் திகதி டெல்லியின் வீதிகள் காஷ்மீரின் வீதிகள் போன்று காட்சியளித்தன. அன்றுதான் காஷ்மீர் மாணவர் ஏழு மாதங்களின் பின் பாடசாலை சென்ற முதல் நாள். உன்னைச்சுற்றி எல்லாமே குரல்வளையை நெரித்து இருக்கின்ற நிலையில் பாடசாலை செல்வதில் என்ன அர்த்தம் இருக்கப்போகிறது. 

அரசியல் அமைப்பினால் ஆளப்படாத ஒரு ஜனநாயகம், அதன் சட்டதிட்டங்கள் எல்லாம் வறிதாக்கப்பட்ட  நிலையில் அது வெறுமனே பலம்பெற்றோர்  ராஜ்யமாக மட்டுமே பரிணமிக்க முடியும்.  நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ   விரும்பலாம்,  விரும்பாமல் விடலாம், ஆனால் அப்படி ஒன்று இல்லை என்பதுபோல செயற்படுகின்ற  இன்றைய  அரசாங்க செயற்பாட்டு முறை ஜனநாயகத்தையே முழுவதுமாக அழித்துவிடும். ஒருவேளை இதுவே அவர்களின் இலக்காகவும் இருக்கலாம், இதுதான் கொரோனா வைரஸின் எங்கள் பதிப்பு என்பது    நாங்கள் நோயாளிகள்.

பிரபஞ்சத்தின் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவிகள் தென்படவில்லை, எம் நலன் நாடும் வெளிநாடுகளை காணவில்லை, ஐக்கிய நாடுகள் கூட கிடையாது. 

தேர்தல்களில் வெற்றி பெற நாடுகின்ற எந்த அரசியல் கட்சியுமோ நியாயமான நிலைப்பாட்டினை எடுப்பதற்கு முடியுமான அல்லது விருப்பமான கட்டத்தில் இல்லை.  ஏனென்றால் நாடி நரம்பெல்லாம் எரிந்து கொண்டிருக்கின்றன, நாங்கள் தோற்றுக்கொண்டிருக்கிறோம். எல்லா முறைமைகளும் தோற்றுக்  கொண்டிருக்கின்றன.

எங்களுக்கு தற்போதைய தேவையாக இருப்பது பிரபல்யமற்றவராய் இருப்பதற்கு ஆயத்தமான மக்களே, தங்களை ஆபத்தில் தள்ளுவதற்கு தயாரானவர்கள்,  உண்மையை சொல்வதற்கு தயங்காதவர்கள் அவசியமாகின்றார்கள்,

 தைரியமான ஊடகவியலாளர் அதனை செய்ய முடியும், செய்திருக்கிறார்கள், தைரியமான வழக்கறிஞர்கள் கூட அதனை செய்ய முடியும் செய்திருக்கிறார்கள், கலைஞர்கள், அழகிய புத்திசாதுரியமிக்க தைரியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், திரைத்துறையினர், தயாரிப்பாளர்கள் எல்ல்லோருமே அதனை செய்ய முடியும், அந்த அழகு எம்மிடமுண்டு,  அதுதான் நாம். 


எமக்கென வேலையொன்றிருக்கிறது, வெல்வதற்கு உலகம் ஒன்றிருக்கிறது 

 முற்றும், 

தமிழில் டாக்டர். சிஹாப்தீன்  நஜிமுதீன் 

0 கருத்துரைகள்:

Post a Comment