Header Ads



கொடிய ஆட்கொல்லி கொரோனாவை அடியோடு, அழிக்க ஒத்துழைப்பு வழங்குவோம்

கொவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலக நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்துள்ளது. அந்தவகையில் கொரோனா என்னும் கொள்ளை நோயால் இத்தாலியில் மாத்திரம் பலர் இறந்துள்ளனர். அங்கு இறந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. அடுத்தபடியாக சீனாவில் உயிர் பலியெடுத்துள்ளது.

கொரோனாவினால் உலகளாவிய ரீதியில், 248,678 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 10,088 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்தவகையில் பல நாடுகள் மற்றும் நகரங்கள் மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு இருக்கையில் இலங்கையில் பரவியுள்ள கொரோனா எனும் கொள்ளைநோயால் இதுவரை  இலங்கையில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் பரவும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கை இன்று மாலை 6 மணியிலிருந்து நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தவுள்ளது.

இதனால் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள மக்கள் தமக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதிலும் ஏனைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவும் என்ற பயத்திலும் அவர்கள் எவ்வித பாதுகாப்பு முறைகளையும் கையாளாது இவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது.

இதைவிட வெளியிடங்களில் இருந்து நகரங்களுக்கு வேலைக்காக வந்துள்ளவர்கள் மற்றும் வெளியிடங்களில் இருந்து நகரங்களில் வாழும் குடும்பங்கள் அனைத்தும் பெட்டி படுக்கைகளுடன் சொந்த ஊர்களுக்கு செல்வதையும் அவதானிக்க முடிந்தது.

இன்று மாலை 6 மணிக்கு அமுல் படுத்தப்படும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி காலை 6 மணிவரை அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

எது எவ்வாறு இருப்பினும் அரசாங்கமும் நாட்டு மக்களை இந்த கொரோனா எனும் அரக்கனில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவே ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் தமது நலன் கருதியும் நாட்டு மக்களின் நலன் கருதியும் உங்களது வீடுகளில் இருந்து நீங்கள் உங்களை சுயமாக தனிமைப்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து நாட்டை மீண்டும் வழமையான நிலைமைக்கு கொண்டுவர ஒன்றுபடுங்கள். 

ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தம் வேளைகளிலும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

நாட்டு மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்பட்டு இலங்கை சுகாதார அமைச்சு வழங்கும் அறிவுரைகளைப் பின்பற்றி கொரோனா எனும் கொடிய ஆட்கொல்லி நோயை அடியோடு அழிக்க ஒத்துழைப்பு வழங்குவோம்.

No comments

Powered by Blogger.