Header Ads



ஸ்பெயின் ஓய்வூதிய வீடுகளில் கைவிடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கும் கொரோனா நோயாளிகள்


கொரோனா தொற்று நெருக்கடியில் பணி புரியும் ஸ்பெயின் நாட்டு ராணுவத்தினர், முதியவர்கள் சிலர் பணிக்கு பிறகான ஓய்வு இல்லங்களில் தனித்துவிடப்பட்டந்திருந்ததை கண்டதாகவும், சிலர் மெத்தைகளில் இறந்த நிலையில் கிடந்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள ஓய்வு இல்லம் ஒன்றில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய ராணுவம் கொண்டு வரப்பட்டது.

விளையாட்டுக்கு பயன்படுத்தப்படும் ஐஸ் மைதானத்தை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்களை வைப்பதற்காக தற்காலிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இத்தாலிக்கு பிறகு ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514ஆக உயர்ந்துள்ளதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிழமை வரை 2696 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 39,637 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பணி ஓய்வுக்கு பிறகு முதியவர்கள் தாங்கும் இல்லங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் குறித்து கடுமையாக இருக்கப்போவதாக ஸ்பெயினின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் தெரிவித்துள்ளார்.

"ராணுவம் சோதனை செய்தபோது சில முதியோர் இல்லங்கள் அவர்கள் கவனிப்பின்றி இருந்ததாகவும், சில மெத்தையில் இறந்து கிடந்ததாகவும் தெரியவந்துள்ளது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சில இல்லங்களில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பிறகு அதன் ஊழியர்கள் விட்டுச் சென்றுவிட்டனர் எனவும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இயல்பான சூழலில் இறுதிச் சடங்கு சேவைகள் வந்து உடலை பெற்றுக் கொள்ளும் வரை உடல்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

ஆனால் கொரோனா தொற்றால் உயிரிழந்திருப்பார்கள் என்று சந்தேகம் இருந்தால், சரியான உடை மற்றும் பாதுகாப்பு கவசத்துடன் வரும் இறுதிச் சேவை நபர்கள் வரும் வரை உடல்கள் கவனிப்பின்றி படுக்கையில் கிடத்தப்பட்டன.

தலைநகர் மேட்ரிட்டில் இதற்கு 24 மணி நேரம் ஆகலாம். அங்குதான் அதிகம் பேர் இறந்துள்ளனர்.

முதியோர் இல்லங்கள் மீதுதான் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்தவுள்ளது என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த மையங்களை தீவிரமாக கண்காணிப்போம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேட்ரிட்டில் நெருக்கடி அதிகரித்துள்ளதாலும், பாதுகாப்பு கவசங்கள் போதுமானதாக இல்லை என்பதாலும் செவ்வாய்க்கிழமையன்றிலிருந்து அந்நகரின் மாநகராட்சி இறுதிச் சடங்கு சேவை நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலிக்கு பிறகு ஸ்பெயினில் தான் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 602 கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்தம் பலி எண்ணிக்கை 6,077 ஆகும்.

இருப்பினும் இந்த எண்ணிக்கை கடந்த சில தினங்களை ஒப்பிடும் போது குறைவானது. அங்கு அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுபாடுகளால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.