Header Ads



தமது ஆதரவாளர்களை பாதுகாக்க ஐ.தே.க.யின் முக்கிய தீர்மானங்கள்

நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து கட்சி ஆதரவாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமினால் வெளியிடப்பட்டுள்ள இவ் அறிக்கையிலே, எதிர்வரும் தேர்தல் செயற்பாடுகளின் போது கட்சி ஆதரவாளர்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் மாவட்ட தலைவர்களுக்கும் , முகாமையாளர்களுக்கும் அறிக்கை விடுத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி மேலும் கூறியுள்ளதாவது, 

உலகளாவிய ரீதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸின் நெருக்கடியின் மத்தியில் , பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் , இந்த காலத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டும் , ரமழான் பண்டிகையும் மற்றும் ஈஸ்ட்டர் பண்டிகையும் இடம்பெறவிருக்கின்றது.

இந்நிலையில் இது குறித்து கவனம் செலுத்துமாறும் , பாதுகாப்பு முறையொன்றை அமுல் படுத்துமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடமும் , தேர்தல்கள் ஆணைக்குழுவிடமும் வேண்டு கோள்விடுத்த போதிலும் இதற்கான எந்தவித பிரதிபலனும் கிடைக்க வில்லை.

எனவே வைரஸ் தொற்றிலிருந்து தமது ஆதரவாளர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக ஐ.தே.க. சில தீர்மானங்களை எடுத்துள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது இரண்டு பேர் மட்டுமே சமூகமளிக்க வேண்டும். இதன் போது ஆதரவாளர்களை அழைத்துவருவதையோ , வாகன பேரணிகளை நடத்துவதையோ தவிர்த்துக் கொள்ளுவதுடன் , ஆதரவாளர்கள் ஒன்றுக்கூடுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

வீட்டுக்கு வீடு தேர்தல் பிரசாரங்களை செய்யும் போது சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டு உரிமையாளர்களின் அனுமதியின்றி வீடுகளுக்கு செல்லக் கூடாது.

தேர்தல் அலுவலகங்களில் கூட்டங்களில் கலந்துக் கொள்பவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு , அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் , உபகரணங்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இது தொடர்பான தேவையான ஆலோசனைகளை வழங்க ஐ.தே.க.வுடன் தொடர்புடைய வைத்தியக் குழுக்கள் தயாராக இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(செ.தேன்மொழி)

No comments

Powered by Blogger.