Header Ads



புலனாய்வு அறிக்கையிடலில், றிப்தி அலிக்கு விருது

இளம் ஊடகவியலாளரும், விடியல் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியருமான றிப்தி அலிக்கு புலனாய்வு அறிக்கையிடல் மையத்தினால் அதி சிறந்த புலனாய்வு அறிக்கையிடல் விருது நேற்று (10) செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

"அறியாமை, தீவிர சமய நம்பிக்கையினால் சமூகத்தில் அதிகரிக்கும் ஆபத்தான பிரசவங்கள்" எனும் தலைப்பில் விடிவெள்ளி பத்திரிகை மற்றும் விடியல் இணையத்தளம் ஆகியவற்றில் வெளியான கட்டுரைக்கே இந்த விருது வழங்கப்பட்டது.

புலனாய்வு அறிக்கையிடல் மையம் - ஸ்ரீலங்காவின் முதலாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு தெரிவுசெய்யப்பட்ட இளம் ஊடகவியலாளர்களுக்கு கடந்த செப்டெம்பர் மாதம் புலனாய்வு அறிக்கையிடல் தொடர்பான பயிற்சிகள் மற்றும் திறன்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்ட ஊடகவியாலாளர்களில் 13 பேர் தமக்கு வழங்கப்பட்ட பயிற்சியின் அடிப்படையில் 14 புலனாய்வு அறிக்கையிடலை கடந்த நான்கு மாதங்களாக மேற்கொண்டிருந்தனர்.

இந்த புலனாய்வு அறிக்கையிடல், சுயாதீன நடுவர் குழுவினால் பரிசீலிக்கப்பட்டு, அதில் அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடலை மேற்கொண்ட மூன்று ஊடகவியலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதன்போதே ஊடகவியலாளர் றிப்தி அலியினால் "அறியாமை, தீவிர சமய நம்பிக்கையினால் சமூகத்தில் அதிகரிக்கும் ஆபத்தான பிரசவங்கள்" எனும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடல் விருது வழங்கப்பட்டது.

இதற்கு மேலதிகமாக வீரகேசி பத்திரிகையின் உதவி ஆசிரியர் லியோ நிரோஷ தர்ஷன் மற்றும் சிலுமின பத்திரிகையின் ஊடகவியலாளர் ராகுல் சமந்த ஹெட்டியாராச்சி ஆகியோரின் கட்டுரைகளுக்கும் அதி சிறந்த புலனாய்வு அறிக்கையிடல் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிசிறந்த புலனாய்வு அறிக்கையிடலை மேற்கொண்ட மேற்படி மூன்று ஊடகவியலாளர்களும் பாகிஸ்தானின் கராச்சியிலுள்ள ஊடகவியல் சிறப்புக்கான மையத்திற்கு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி  முதல் 27ஆம் திகதி வரை சிறப்பு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விருது விழா கொழும்பு - 3 இல் அமைந்துள்ள ஓசோ ஹோட்டலில் நேற்று (10) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சித் திட்டம், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியுதவியிலும் சர்வதேச ஊடக ஆதரவு (IMS) மையத்தின் நெறிப்படுத்தலிலும் இடம்பெற்றது.



No comments

Powered by Blogger.