Header Ads



எவ்வித பேதமும் இன்றி இலங்கையர் என்ற ரீதியில், ஒன்றிணைந்தால் கொரோனா வைரஸ் சவாலில் வெற்றிபெற முடியும்

(எம்.மனோசித்ரா)

இலங்கை வரலாற்றில் நாடும் மக்களும் பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயற்படுவது சிறந்த அணுகுமுறையாகும் என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கை வரலாற்றில் நாடும் மக்களும் பாரியதொரு சவாலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து பொது தேசிய ஒழுங்கமைப்பின் கீழ் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அண்மைக்காலமாக மதத் தலைவர்களும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிவில் சமூக அமைப்புக்களும் கோரி வந்தன. 

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இனங்காணப்பட்ட போதே அனைத்து தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியிருந்தோம். அதன் மூலம் தேசிய ஒருமித்த கருத்தொன்றுக்கு வரக் கூடியதாக இருந்திருக்கும். காரணம் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களது சடலங்களைக் கொண்டு அரசியல் செய்வதற்கு எந்த கட்சிக்கும் உரிமையில்லை.

செவ்வாய்க்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டம் சிறந்ததொரு அணுகுமுறையாகும். மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் இதுபோன்றதொரு சந்தர்ப்பத்தில் மக்கள் நலன் தொடர்பான கருத்துக்களை முன்வைப்பதற்கான பொறுப்பு மற்றும் உரிமையை உறுதிப்படுத்துவதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும்.

இந்த கட்சி தலைவர் கூட்டத்தின் போது நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் சுகாதாரத்துறையினர், முப்படையினர் மற்றும் பொலிஸார் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேலும் இதன் போது, நாளாந்தம் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளோடு ஏனைய நாடுகள் பின்பற்றும் நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும் என்ற யோசனை என்னால் முன்வைக்கப்பட்டது.

அத்தோடு தினக் கூலிக்கு தொழில் செய்யும் சுமார் 8 மில்லியன் குடும்பங்கள் இலங்கையிலுள்ளன. இவ்வாறான குடும்பங்களுக்கு மேற்கத்தேய நாடுகள் அவர்களது ஊதியத்திற்கு சமமான நிவாரணத்தை வழங்கியுள்ள போதிலும் இலங்கையில் அவ்வாறான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படாமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  மற்றும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்கள் என்போரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இவர்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன தெரிவித்துள்ளதைப் போன்று இந்த வைரஸை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு வருட காலமேனும் தேவைப்படும். எனவே அபிவிருத்தியடைந்த நாடுகள் மாத்திரமின்றி எமது நாடும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும். எனவே ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத்துறைகளில் இலங்கையில் பெரும்பங்கு வகிக்கும் தனியார் துறைகளை மேம்படுத்தும் வகையில் திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும்.

தேர்தலை விடவும் மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பிலேயே அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். எனினும் பொதுத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் கட்சி தலைவர்கள் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

எவ்வித பேதமும் இன்றி இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் ஒன்றிணைந்தால் கொரோனா வைரஸ் சவாலில் வெற்றி பெற முடியும் என்று நம்புகின்றேன். இந்த நெருக்கடியான சூழலில் அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து கலந்தாலோசித்தமைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கலந்து கொண்ட கட்சி தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். 

No comments

Powered by Blogger.