March 18, 2020

கொரோனா எனும் அச்சமும், நாமும்...

- அஜ்மல் மொஹிடீன் -

கொரோனா தொற்று உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டிருக்கின்றது.

இவ்வளவு காலமும் மிருகங்களினால்,பறவைகளினால்,  எலிகளினால்,நுளம்புகளினால் நோய்கள் காவிச் செல்லப்படுகின்றன என்ற அச்சம் மறைந்து, மனிதன் கொரோனா வைரஸ்களின் நோய் காவியாக மாறி விட்ட நிலைமை, யாரை யார் நம்புவது,யாரை யார் கிட்ட வைத்துக் கொள்வது .மனிதனுக்கு மனிதன் அச்சமாகி விட்டான்.

உலக நாடுகள் மனித நடமாட்டத்தை வீடுகளுக்குள் அடைத்து வருகின்றன.

நாட்டுக்கு நாடு உள்வரவும்,வெளிச் செல்லுகையும் தடை  விதிக்கப்பட்டு வருகின்றன.

உலக‌ விமானப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டு இறுக்கப்படுகின்றது.

துறைமுக ஏற்றல்,இறக்கல் நடவடிக்கைகள் தடைப்பட்டு விட்டன.

முழு உலக நாடுகளும் படைகளை முகாம்களில் இருந்து வீதிகளுக்கு அழைத்துள்ளன,சிவில் நடவடிக்கைகளுக்காக, உற்பத்தி,வருமானம் பற்றி கவனிக்க மனிதனுக்கு வெளிச்  செல்ல முடியாது.

உழைப்பு,உற்பத்தி,விவசாயம்,கைத்தொழில்,விநியோகம்,போக்குவரத்து,பணப் பரிமாற்றம் ,மனித நடமாட்டம் யாவும் மெல்ல மெல்ல முடக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா அச்சுறுத்தல், வருமான மின்மை,பொருட்களின்மை,வறுமை,  பஞ்சம்,பயம் என்பன மெல்ல மெல்ல நெருங்கி வந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு மனிதனும் தனக்கு அச்சம் வரும் காலங்களில் எல்லாம் அமைதிக்காகவும்,மன நிறைவுக்காகவும் தஞ்சம் புகும் இடம் வணக்கஸ்தலங்கள்.இன்று வழிபாட்டுக்கு வழியில்லை என வணக்கஸ்தலங்கள் மூடி வைக்கப்பட்டுள்ளன.

மரணம் ஏற்பட்டால் மட்டுமே மனித வாழ்வில் அழைப்பில்லாமல் தூக்குவதற்கு நாலு பேரும்,ஆறுதலுக்கு நாற்பது பேரும் வருவார்கள்.அவர்கள் எல்லாம் வருவார்களா நிலைமை மாறி விடுமோ நினைக்கவே மனம் மறுக்கின்றது.அஞ்சுகின்றது

தொலைக்காட்சிக்கு முன்னும், தொலைபேசிக்கும் முன்னும் மனித வாழ்வு தஞ்சம் கிடக்கின்றது . பொழுதுபோக்க அல்ல கொரோனாவி ன் அவலத் தகவல்களை அறிய.

படைத்தவன் நம்பிக்கையும், மனவலிமையும் தான் வாழ்வின் நம்பிக்கைகளாக இருக்கின்றது.

அன்றாடம் உழைக்கும் கூலியாட்கள்,நடைபாதை வியாபாரிகள்,தினச்சந்தைகளில் கடை விரிப்போர்கள்,முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் நிலைமை என்ன.

வசதி படைத்த நல்லுள்ளங்களுக்கும் கூட வருமானம் தடைப்படும் போது‌ எவ்வாறு அடுத்தவரை கவனிப்பது.

ஊர் நிர்வாகங்களே,சிவில் அமைப்புக்களே,அரசியல்வாதிகளே நீங்கள் உங்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?

ஊர்கட்டுப்பாடு,ஊர்வழமை என்பவர்களே,ஊருக்குள் இருக்கின்ற எல்லா பிரச்சினைகளுக்கும் நாங்கள்தான் தீர்வாளர்கள்,எமது நிர்வாகமே நீதி வழங்கும் என நெஞ்சு நிமிர்த்தும் ஊர் நிர்வாகங்களே, மக்களை மத வழி அழைக்கும் இயக்கங்களே அழைப்பு பணி செய்யும் அழைப்பாளர்களே இப்போது உங்கள் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்.

ஊர் நிர்வாகங்களே !
மதம்சார் இயக்கங்களே !
சிவில் அமைப்புக்களே !
சமூக செயற்பாட்டாளர்களே!
அரசியல் செய்யும் அரசியல்வாதிகளே!

உங்கள் பிரதேசங்களில் மக்களுக்கு ஒரு இடர் வரும் போது என்ன செய்யலாம் என்ற இடர் காப்பு திட்டங்கள் ( Risk bearing management ) உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா.

வெள்ளம் வரும் போதும்,ஏதாவது கலவரம் வரும் போதும்  நாலு தனவந்தர்களை தேடுவது நிதி சேகரிப்பது சமைத்த உணவு,உலர் உணவு இன்னும் கொஞ்சம் முன்னேறினால் வீட்டு பொருட்கள்,குறிப்பிட்ட ஓரிருவருக்கு ஒரு சிறு  தொகை என்று வழங்குவது இவைதான் உங்களது இடர் துடைப்பு செயற்பாடுகள்‌.

இந்த நேரத்திலும் துஆக்களை(பிரார்த்தனைகளை),நல்லுபதேசங்களை பரிமாறுவது,இதற்கு மேலாக சமூகவலைத் தளங்களில் எங்கேயோ எவனோ எழுதியதையும்,பேசியதையும் கொப்பி பேஸ்ட்(Copy-Paste)பண்ணுவது இவற்றில் எல்லோரும் பிஸி(busy).

நல்லுபதேசம்,பிரார்த்தனை,இறைவனை என்றும் நினைவு கொள்ளுங்கள்,நோன்பு பிடியுங்கள் என்றெல்லாம் ஆலோசனை சொல்லும் அமைப்புக்களே,நல்ல மனிதர்களே நீங்கள் சொல்லும் இவை எல்லாம் நிச்சயம் பின்பற்றப்பட வேண்டியவையே எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,மறுக்கவும் இல்லை .

ஆனால் மக்கள் அனுபவிக்கின்ற இடர்களை,துயர்களை நீக்க என்ன செயற்திட்டங்களை வகுத்து வைத்துள்ளீர்கள்,என்ன திட்டங்களை செயற்படுத்தப் போகின்றீர்கள்.

ஸகாதை முன் கூட்டியே கொடுங்கள்,ஸதகாக்களை அதிகரித்து  கொடுங்கள் என்று கூறுகின்றீர்கள்.

வர்த்தகம் முடக்கப்பட்டு,பணப் பரிமாற்றம் மட்டுப்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் தருணத்தில் எத்தனை வர்த்தகர்களிடம்,தனவந்தர்களிடம் உடன் பணம்( liquid money) இருக்கப் போகின்றது.

இடர்காப்பு முகாமைத்துவம்(Risk bearing management) ஒன்றுக்கு இனியாவது  தயாராக முயற்சி செய்யுங்கள், 
இடர்காப்பு முகாமைத்துவம் என்பது நிதியை மட்டும் சேர்த்து வைப்பது அல்ல,
மனித வலுக்களை பயிற்சி அளித்து வைப்பது,
களத்தில் நின்று செயற்படக் கூடியவர்கள்,திட்டமிடக்கூடியவர்கள்,
ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைப்பு செய்யக் கூடியவர்கள் என ஒரு அமைப்பை உருவாக்கி வைத்திருத்தல்,

கூட்டுறவு முறையில் பொருட்களை சேகரித்து உரிய விலையியில் எல்லோருக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை விற்பனை விநியோகம் செய்யக்கூடிய முறைமையினை செயற்படுத்துதல்.

இதன் மூலம் கிடைக்கக் கூடிய மேலதிக வருமானத்தை வறுமையில் உள்ளவர்களுக்கு பகிர்ந்தளித்தல்,

எந்த இடர்காப்பு தருணங்களிலும் தொண்டர்களாக கடமையாற்றக்கூடிய மருத்துவர்கள்,தாதிமார், கல்வியாளர்கள்,முகாமைத்துவ அனுபவஸ்தர்கள் என ஒரு ஆளணியினரை வைத்திருத்தல்,

பாடசாலை சாரணர் அணி போன்று ஊருக்குள் ஓர் இளைஞர் அணியை பயிற்சி அளித்து வைத்திருத்தல்.

தேவையான உபகரணங்களையும், கருவிகளையும்(Equipments and Tools) ஓரளவுக்காவது இருப்பில் வைத்திருத்தல்.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க அல்லது கவனிக்க என பாடசாலை தவிர்ந்த ஒரு பொது இடத்தை வைத்திருத்தல்.

போன்ற பல்வேறு இடர்காப்பு முகாமைத்துவ முன்னேற்பாடுகளை வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு காலத்துக்குத்தான் நாம் பழி சொல்லி வழி சொல்லத் தெரியாத சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கப் போகின்றோம்‌.

உபதேசங்கள் புரிவது மட்டும் சமூகக் கடமை,ஊர்க்கடமை என்றில்லாமல் மாறுவோம்,மாற்றலுக்கு ஒரு வலு சமைப்போம்.

என் வீட்டையும்,உங்கள் வீட்டையும்,நமது வீதிகளையும் கொரோனா மட்டுமல்ல எந்த இடர் வருவதற்கும் முன் அவற்றை நேர் கொள்ள ,பாதுகாக்க,இழப்புக்களை தவிர்க்க தயாராகுவோம்.

முயற்சியில்லாத,திட்டமில்லாத,கட்டுப்பாடில்லாத எந்த ஒரு சமூகத்திற்கும் இறைவனின் உதவிகள் வந்து சேர்வதில்லை‌.

சமுத்திரத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒருவனை நோக்கி ஒரு வானூர்தி நூலேணியை அனுப்பியதாம்,தூரத்தே நங்கூரமிட்டிருந்த ஒரு கப்பல் படகு‌ ஒன்றை அனுப்பியதாம்,அவனருகே ஒரு மரக்குற்றி மிதந்து வந்ததாம் உயிருக்கு போராடும் அவனோ நான் எனது இறைவனையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்,அவனிடமே வேண்டுதல் செய்கிறேன் அவன் என்னை காப்பாற்றுவான் உங்கள் உதவி தேவையில்லை என்று தட்டிக் கழித்தானாம்‌.

அடுத்து வந்த பேரலை ஒன்று அடித்து சென்று அவன் இறக்கும் நிலையில் கூறியதாம் உனது இறைவன் உனக்கு மூன்று உதவிகளை அனுப்பினான் நீ முயற்சிக்கவில்லை எனவே நீ இவ்வுலகில் வாழத் தகுதியற்றவன்‌ என்றதாம்.

0 கருத்துரைகள்:

Post a comment