Header Ads



தேர்தல் எப்போது நடைபெறும் என, உறுதியாக தெரிவிக்க முடியாது

கொரோனா வைரஸ் பரவும் நிலையில் நாட்டின் தேர்தல் குறித்து தற்போதைக்கு சிந்தித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. மக்கள் வாழும் நாட்டில் தான் தேர்தல் நடத்த முடியும் எனவே தான் தேர்தலை காலவரையற்ற விதத்தில் ஒத்திப்போடத் தீர்மானித்திருப்பதாக  தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பொதுத்தேர்தல் எப்போது நடத்த முடியும் என்பதை தெரிவிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.

பாரளுமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் மறுஅறிவித்தல் வரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் தேர்தல் செயலகம் முன்னெடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு வர்த்த மானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதும் ஏப்ரல் 25ல் தேர்தலைநடத்த முடியாது என்ற அறிவித்தலையும் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளோம். நாட்டின் இன்றைய நிலை தேர்தலொன்றை நடத்தக்கூடியதாக காணப்படவில்லை.

கொரோனா என்ற கொடிய வைரஸ் நோய்க்கு எதிராக நாடு பெரும் போரொன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்த கொடிய நோயிலிருந்து முற்று முழுதாக மீட்சியடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பே கிடையாது. அடுத்த இரண்டு மாதங்களில் இந்த நோயிலிருந்து விடுபட்டாலும் கூட உடனடியாக தேர்தலை நடத்த முடியாது.

ஏப்ரல் மாதம் 30ம் திகதி ஆனைக்குழுவின் முக்கிய கூட்டம் இடம் பெறவுள்ள அக் கூட்டத்தின் போது அரசாங்கத்துடனும், அரசியல் கட்சிகளுடனும், கலந்துயாடியதன் பின்னரே தேர்தல் குறித்து தீர்க்கமான முடிவுக்கு  வரக்கூடியதாக இருக்கும் ஏப்ரல் 30ம் திகதியன்றும் முக்கியமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எண்ணியுள்ளோம்.

நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை உறுதி செய்ததன் பின்னர் ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு பின்னர் 14 நாட்கள் கடந்ததன் பின்னரான ஒரு திகதியிலேயே தேர்தலை நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படும். அந்தக் காலப்பகுதியில் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தமது பிரசாரங்களுக்கு கால அவகாசம் பெற்றுக்கொடுட்கப்பட வேண்டும். இதற்கிடையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது. வாக்காளர் அட்டைகளை அச்சிடுதல், போன்ற பணிகளையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதனிடையே வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. மாவட்டங்கள் மத்தியில் வாக்குச்சீட்டு மாறுபடுகின்றது. அது மட்டுமன்றி மிகக் கூடுதலான வேட்பாளர்கள் களமிறக்கப் பட்டுள்ளனர். அதற்கேற்ற அளவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளது. அத்துடன் தேர்தல் செலவுக்கான நிதியை அரசிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு விடங்களையும் கவனத்தில் எடுக்கின்ற போது தேர்தலின் போது கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது எனவும் ஆணைக்கழு தலைவர் விபரித்தார்.

இத்தகைய பேரிடர் காலத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை உறுதியாக தெரிவிக்க முடியாது என்றாலும் தேர்தல் செயலங்களில் வழமையான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படடு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ.எம் நிலாம்

No comments

Powered by Blogger.