Header Ads



கொரோனாவை கட்டுப்படுத்த, சீனா ஒத்துழைப்பு


கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாரென சீனா அறிவித்துள்ளது.

சீன தூதரகத்தில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் ஆகியோருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது , இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முழுமையான ஒத்துழைப்பை வழங்க சீன அரசாங்கம் தயாராகவுள்ளதாக இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பிற்காக இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் அந்நாட்டு மக்களால் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி இலங்கையில் இருந்த சீனப் பெண்ணுக்கு சிகிச்சைகளை அளித்து அவரை குணப்படுத்தியமை மற்றும் அவரோடு நட்புறவை பேணியமை என்பனவற்றுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இலங்கைக்கான பதில் சீனத்தூதுவர் ஹூ வெய், சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை தடுப்பதற்கான மருந்துகள், வைத்திய உபகரணங்கள் மற்றும் நிதி வசதிகள் உள்ளிட்ட தேவையான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹூ வெய் உறுதியளித்துள்ளார்.

சீன அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்பட்ட மூலோபாயங்கள் தொடர்பான அறிக்கையை , இலங்கைக்கான பதில் சீன தூதுவர் சுகாதார அமைச்சரிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.