Header Ads



இத்தாலியில் இருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதித்த இராணுவ கேர்ணலுக்கும், மகனிற்கும் கொரோனா தொற்று

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில்  இராணுவ கேர்ணல் ஒருவரும் அவரது மகனும் அங்கொடை தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் குறித்த கேர்ணலின் தாயும் கொரோனா தொற்றின் அறிகுறிகள் காரணமாக  கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.

 ஏற்கனவே 22 ஆம் தொற்றாளராக இராணுவ மேஜர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.  அவர் இத்தாலியில் இருந்து வந்தோரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டவராவார்.

இந்த இராணுவ வீரர் 44 பேருடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர் எனவும் தெரியவந்திருந்தது. அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையிலேயே தற்போது மற்றொரு இராணுவ கேர்ணல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு தற்போது தொற்றுக்குள்ளாகியுள்ள கேர்ணல், கொத்தலாவலை பாதுபாப்பு பல்கலைக்கு சொந்தமான வேரஹெர  வைத்தியசாலையில் கடமையாற்றியவர் என்பதும் தெரியவந்துள்ளது. அந்த வைத்தியசாலையில் வைத்து அவருக்கு கொரோனா தொற்றியது எவ்வாறு என தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

No comments

Powered by Blogger.