March 18, 2020

முஸ்ஸிம் அரசியல் கட்சிகள்தான் பெரும்பான்மையாக நிற்பார்கள் - இன்பராசா

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதறடிக்க வேண்டிய நோக்கம் எமக்கு இல்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தெரிவித்தார்.

மன்னாரில் இன்று 18 இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு பலத்தை காட்ட வேண்டிய தேவை உள்ளது. அந்த வகையிலே குறித்த பொதுத்தேர்தல் இடம்பெற உள்ளது.

அந்த வகையில் தமிழ் பேசும் மக்களாகிய நாம் சிந்தித்து செயற்பட வேண்டிய நிலை உள்ளது.

இது வரை காலமும் நாங்கள் விட்ட தவறை தொடர்ந்தும் விடாமல் தற்போது நாங்கள் கால காலமாக தவறுகளை விட்டு சுட்டிக் காட்டிக் கொண்டு இருக்காமல் அத்தவறை நிவர்த்தி செய்ய முயற்சி செய்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள ஒட்டு மொத்த தமிழ் மக்களும் எங்களுக்கு என ஒரு சுயமான உறுதியான பலம் பொறுந்திய அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய காரணம் இருக்கின்றது.

எங்களுடைய மக்களின் பிரச்சினையை எடுத்து நாடாளுமன்றத்தில் அல்லது சர்வதேச நாட்டிற்கு எடுத்துக்கூற வேண்டுமாக இருந்தால் ஒரு பலமான கட்சி தேவை.

அவ்வாறு நாடாளுமன்றத்தில் பலமான ஒரு கட்சி இருந்தால் மட்டுமே மக்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வர முடியும்.

அந்த வகையில் தற்போது இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது வடக்கு-கிழக்கை பொறுத்த வகையில் வன்னி மாவட்டத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளது.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் உள்ளன. தமிழ் மக்களின் வாக்குகளை சூழ்ச்சியான முறையில் சிதறடிப்பதற்காக பலதரப்பட்ட குழுக்களை இறக்கி விட்டுள்ளனர்.

உண்மையில் எமது தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து பலமிக்க கட்சியை பலம் இல்லாத அமைப்பாக மாற்றுவதற்கு சர்வதேச அமைப்புக்களாக இருக்கலாம், உள்நாட்டு புலனாய்வு துறையினரால் இருக்கலாம் அல்லது சோரம் போன ஒரு சிலரினால் இருக்கலாம் வன்னி மாவட்டத்தில் சுமார் 18 இற்கும் மேற்பட்ட சுயேட்சைக்குழுக்களை இறக்கி விட்டுள்ளனர்.

அதனை முற்று முழுதாக உற்று நோக்கி பார்த்த நிலையிலே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் கட்சியாகிய நாம் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டோம்.

இந்த நிலையில் எமது கட்சி சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட நேற்று வரை கட்டுப்பணம் செலுத்துவதற்கு தயாராக இருந்தோம். எனினும் திடீரென எமது கட்சியின் மத்திய குழு, செயற் குழு, நிர்வாக குழு எல்லாம் கூடி முடிவெடுத்துள்ளோம்.

தற்போது நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் போட்டியிடாமல் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்காமல் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் ஓர் பரப்புரையினை மேற்கொள்வது என முடிவுகளை மேற்கொண்டோம்.

தமிழ் மக்களின் விடுதலைக்காக கடந்த 30 வருடங்கள் ஆயுதம் ஏந்தி போராடி பல ஆயிரக்கணக்கான மாவீரர்களை விதைத்துள்ளோம். பல இலட்சக்கணக்கான மக்களை நாங்கள் இழந்துள்ளோம்.

அந்த வகையில் நாங்கள் இனிமேலாவது சிந்தித்து எமது மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை காட்டி எங்களுடைய மக்களுக்கு பலமான அரசியல் அமைப்பை ஏற்படுத்த வழியமைக்க வேண்டும்.

நாங்கள் புனர் வாழ்வளிக்கப்பட்ட போராளிகள். சுமார் 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியில் வந்த போது தாங்கள் தவித்த நிலையிலே காணப்பட்டோம்.

என்ன செய்வது? எமது வாழ்வாதாரத்தை எவ்வாறு முன்னேற்றுவது? எமது குடும்பங்களை எவ்வாறு கட்டி காப்பது? என்ன தொழிலை செய்வது உள்ளிட்ட நோக்கங்களுடன் வெளியில் வந்தோம்.

அந்த நேரத்தில் கூட நாங்கள் சிந்தித்தோம் எங்களுக்கென பலம்மிக்க அரசியல் கட்சிகள் அல்லது வெளிநாட்டில் உள்ள அமைப்புக்கள் யாராவது எங்களை பொறுப்பேற்பார்கள், எங்களின் வாழ்வாதாரம், பொருளாதார நடவடிக்கைகளை முன்னோக்கி செல்வார்கள் என்று ஒரு சில வருடங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

அந்த வகையில் சில தவறுகளை விட்டுள்ளார்கள். பலமிக்க அரசியல் வாதிகள் விட்ட தவறுகளின் விளைவாகவே ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு ஜனநாயக நீதியில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலை புலிகள் என பெயர் சூட்டி 2017ம் ஆண்டு தேர்தல் ஆணையாளரிடம் சென்று எமது கட்சியை பதிவு செய்தோம்.

எமது மக்களுக்கு ஜனநாயக ரீதியில் அடிப்படை உரிமைகளையாவது பெற்று கொடுக்க வேண்டும். எமது போராளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

எமது மக்கள் சுயமாக வாழ வேண்டும் உள்ளிட்ட நோக்கங்களுடன் தான் நாங்கள் பயணித்துக்கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 25ம் திகதி இடம் பெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலானது ஒரு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

எமது தமிழ் கட்சிகள் பலதாக பிரிந்து வந்து தேர்தலில் முகம் கொடுக்கின்றனர். சுயேட்சைக் குழுக்களாகவும் போட்டியிடுகின்றனர். எனவே தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் சிந்திக்க தவறுவோமாக இருந்தால் அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பெரும்பான்மையாக நிற்கப்போவது பலம் பொருந்திய நாடாளுமன்ற உறுப்பினராக முஸ்ஸிம் அரசியல் கட்சிகள் என்பதனை நீங்கள் மறந்து விட வேண்டாம்.

எங்களுடைய கட்சிக்கு பலம் இருக்காது. நாங்கள் பேரம் பேச முடியாது. எனவே எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அதனை சரி செய்து கொண்டு எமது விடயங்களை முன்னெடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

0 கருத்துரைகள்:

Post a comment