March 17, 2020

பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பது, பொறுப்பற்ற செயலாகவே உள்ளது

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவால் 1984 ஆம் ஆண்டு இனக்கலவரத்தையோ அல்லது விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தையோ அல்லது சஹ்ரான் குழுவினரின் பயங்கரவாதத்தையோ போன்றது அல்ல. இது முழு உலகையுமே உலுக்கிவரும் ஒரு தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கும் புதியதொரு சவாலாகும்.

இத்தகையதொரு தருணத்தில் உலகநாடுகள் அனைத்தும் தமது நகரங்களை முழுமையா மூடுவதற்குத் தீர்மானிக்கையில், இலங்கையில் பொதுத்தேர்தல் நடைபெறுமென அறிவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்கிழமை -17- ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இன்றளவில் எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று என்பது மிகப்பெரும் பீதிக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. இவ்வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பை அரசாங்கம் தேசிய ரீதியிலான அவதானத்திற்குரிய நிலையென்று கூறிவருகின்றது. ஆனால் உண்மையில் இது சர்வதேச ரீதியிலான அவதானத்திற்குரிய நெருக்கடி நிலையாகும். கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட சீனப்பெண் ஒருவர் நாட்டில் அடையாளங்காணப்பட்ட போது இந்த நெருக்கடிநிலை எமது கதவுகளைத் தட்டியது. ஆனால் அப்போதே அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமையினால் தற்போது அது எமது வீடுகளுக்குள்ளேயே வந்துவிட்டது. இதன் காரணமாக நாட்டின் அனைத்துத் துறைகளும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன.

இத்தகையதொரு பின்னணியில் நாம் பொதுத்தேர்தலைப் பிற்போடுமாறு கோரிவருகின்றோம். எனினும் அதன்மூலம் எமக்கு நன்மை உண்டு என்பதாலேயே நாங்கள் தேர்தலைப் பிற்போடுமாறு கோருவதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் உண்மையில் இதனால் எமக்கு எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை. மாறாகப் பொதுத்தேர்தல் பிற்போடப்படாவிடின் சிறியளவிலேனும் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெறும். பெருமளவு நிதியைச் செலவிட்டு விளம்பரம் செய்யமுடியாத வேட்பாளர்கள் தமது ஆதரவாளர்களையும் அழைத்துக்கொண்டு வீடு வீடாகச் செல்வர். இவையனைத்தும் அதிக எண்ணிக்கையானோர் ஒன்றுகூடுவதற்கான வாய்ப்பாகவே அமையும். மேலும் தற்போது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரியொருவர் தொற்றுக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சார்ந்தோர் அல்லது தேர்தல் வாக்குப்பெட்டிகளைத் தயாரிப்போர் தொற்றுக்குள்ளாகியிருப்பின் அது வாக்களிப்பதற்கு வரும் பொதுமக்களையும் பாதிக்கும். எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டே தேர்தலைப் பிற்போடுமாறு நாம் கோருகின்றோம்.

எனவே விரைவில் ஜனாதிபதி, அமைச்சரவை ஒன்றிணைந்து இதுகுறித்து ஆராயவேண்டும். அதுமாத்திரன்றி எதிரணித்தலைவர், முன்னாள் பிரதமர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவினர், சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெறுவதற்காக பிரதம நீதியரசர் தலைமையிலான குழுவினர் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைந்து வட்டமேசைக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி பொதுத்தேர்தலைப் பிற்போடுவது குறித்து விரைவானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் இது 1984 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தைப் போன்றதோ, தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிரவாதத்தைப் போன்றதோ அல்லது கடந்த வருடம் குண்டுத்தாக்குதலை நடத்திய சஹ்ரான் கும்பலின் பயங்கரவாதத்தைப் போன்றதோ அல்ல. மாறாக இது உலகநாடுகள் அனைத்தையும் உலுக்கிவரும் மிகமோசமான வைரஸ் தொற்றுநோயினால் ஏற்பட்டுள்ள சவாலாகும். அவ்வாறிருக்கையில் உலகநாடுகள் பலவும் தமது நகரங்களையும், நாட்டையும் முழுமையாக மூடுவதாக அறிவித்துக்கொண்டு வருகையில், பொதுத்தேர்தல் நடைபெறும் என்று இலங்கை அறிவிப்பது பொறுப்பற்ற செயலாகவே உள்ளது.  என தெரிவித்தார். 

0 கருத்துரைகள்:

Post a comment