Header Ads



மத வழிபாட்டு தலங்களில் ஒன்றுகூடுவதை, முடிந்தளவு தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்


கொரோனா தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய சகல வழிபாட்டு நிகழ்வின் போது பக்தர்கள் பெருமளவில் கூடுவதை தவிர்த்துக்கொள்வதற்கு முடிந்த வரையில் முயற்சிக்குமாறு அனைத்து மத தலைவர்களிடமும் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று புத்தசாசன, கலாச்சார மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து, பௌத்தம், கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட அனைத்து மத தலைவர்களுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தகளையும் நடத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார நலனை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் முன்னெடுக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு உதவும் வகையில் இந்த நடவடிக்கையை அமைச்சு மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதேபோன்று திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிடுவதை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு நாம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம்.

மறு அறிவித்தல் வரை இது நடைமுறையில் இருக்கும். கொரோனா தொற்று மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் இடம்பெறக்கூடும் என்பதினாலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் 187 திரையரங்குகள் உண்டு, இவற்றில் 170 மாத்திரமே செயற்படுகின்றன. விசேடமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு போன்ற திரையங்குகளில் தமிழ் சினிமாப் படங்கள் திரையிடப்படும் இடங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவர்.

இதேபோன்று ஆங்கில திரைப்படங்கள் வெளியிடப்படும் திரையரங்குகளிலும் இரசிகர்கள் கூடுகின்றனர். மக்கள் பெரும் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்த முன்னேற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.