Header Ads



ஆத்திரமாக பேசிய மங்கள, கூட்டத்தில் இருந்து வெளியேறினார்

ராஜபக்ச அரசாங்கத்திடம் பல்வேறு சிறப்புரிமைகளையும் நிவாரணங்களையும் பெற்று வரும் சிலர் ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுப்படுத்தும் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றிரவு நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாத கணக்கில் சிறிய சிறிய காரணங்களை முன்வைத்து கூட்டணி உருவாக்கப்படுவதை காலம் தாழ்த்தி வருகின்றீர்கள். அரசாங்கம் கையாண்டு வரும் சிலர் கட்சியை பிளவுப்படுத்தி அரசாங்கத்திற்கு சாதகத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் மோசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளதன் காரணமாவே பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்கள் இருக்கும் போதும் இணக்கத்தை ஏற்படுத்த தடையாக இருக்கின்றது என மங்கள சமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தடையேற்படுத்த முயற்சித்த போது, “ நீங்களும் இந்த சூழ்ச்சியாளர்களில் ஒருவர் தான்” எனக் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சியாக இருக்க நேரிட்ட கடந்த காலத்தை நினைவூட்டிய மங்கள, இப்படியான சூழ்ச்சிகளில் சிக்கினால், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் பல ஆண்டுகள் எதிர்க்கட்சியில் இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஏனைய விடயங்களை ஒதுக்கி வைத்து விட்டு, கூட்டணியை உருவாக்குவது சம்பந்தமான விடயங்களை பேசுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் இதன் பின்னரும் சிறிய விடயங்கள் பற்றி இரண்டு தரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து மங்கள சமரவீர, செயற்குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளதுடன் இரண்டு தரப்பினரும் தனித் தனியாக போட்டியிட தீர்மானித்துள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மக்களின் கோரிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கீழ் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.