Header Ads



தலைகீழாய் மாறும் வரலாறு: அமெரிக்கர்கள் நுழையக்கூடாதென மெக்சிகோவில் போராட்டம்


சட்டவிரோதமாக மெக்சிகோ வழியாக பிற நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'பிற நாட்டு மக்களை அனுமதிக்கக் கூடாது' என, மெக்சிகோ அரசைக் கடுமையாக கண்டித்தார். மேலும், பிற நாட்டினரின் ஊடுருவலைத் தடுக்க, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில், மிக நீண்ட சுவரை கட்டும் பணியையும் துவக்கினார். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

இந்த நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்நாட்டில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் உறுதிசெய்துள்ளது. உலகிலேயே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அரசின் மெத்தனமே வைரஸ் வேகமாகப் பரவியதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்சிகோ எல்லையில், மெக்சிகோ மக்கள், கடந்த மூன்று நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், 'மெக்சிகோவில் இதுவரை 700க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்கு வந்தால், இங்குள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களை மெக்சிகோவிற்குள் நுழையவிடக்கூடாது என்பதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அமெரிக்காவிலிருந்து மெக்சிகோ வரும் அனைவருக்கும் முறையான மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்' என்றனர்.

மேலும், 'மெக்சிகோ எல்லையை மூடுங்கள்... அமெரிக்கர்களே வீட்டிலேயே இருங்கள்' என்ற பதாகைகளை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அமெரிக்கர்கள் நுழைய முடியாத படி, மெக்சிகோவின் எல்லைகளை மூடும் பணிகள் துவங்கியுள்ளன.

அமெரிக்கா எல்லையை மூடிய நிலை அப்படியே தலைகீழாக மாறி, 'அமெரிக்கர்கள் மெக்சிகோவுக்குள் நுழையக்கூடாது' என, மெக்சிகோ மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது, உலகளவில் அனைத்து நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

1 comment:

Powered by Blogger.