March 22, 2020

இது மிக கவலைக்குரிய ஒரு காட்சி

பிரபல கார்ட்டூன் எழுத்தாளர் அவந்த ஆட்டிக்கல என்பவரது காட்டூன் தான் இது.

அஷ்ஷைக் பளீல் நளீமி

இது சொல்லும் செய்திகள் எவை?

1. நவீன விஞ்ஞானமானது (தன்னை முழுமையாக தற்காத்துக் கொண்ட நிலையில்) கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியானவர்களைப் பாதுகாப்பதற்கு முழுமூச்சாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது.

2. மதவாதிகளோ வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதற்குப் பதிலாக ஜெப மாலைகளை எடுத்துக்கொண்டு போய் அவர்களுக்கு கொடுக்கின்றார்கள். இந்த மதவாதிகள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளைக் கூட செய்யாதிருக்கிறார்கள். இந்த மதவாதிகளுடைய தோற்றம் இதனைக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இது மிக கவலைக்குரிய ஒரு காட்சி. இந்த கார்ட்டூனிஸ்ட் சொல்லுவது சிலவேளை அவர் சார்ந்திருக்கிற, அவர் புரிந்திருக்கின்ற மதங்களுக்கு பொருத்தமாக இருக்கலாம்.மனிதவாழ்வு பற்றிய உலகநாகரிகம் பற்றிய அவற்றின் நிலைப்பாடு அப்படியாக இருக்கலாம்.

ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அது எந்த வகையிலும் பொருத்தமான கருத்து அல்ல. காரணம் இஸ்லாம் தொற்றுநோய்கள் இருக்கின்றன என்ற கருத்தை முழுமையாக ஏற்றிருக்கும் அதேநேரத்தில் அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் படியும் வன்மையாக வலியுறுத்துகிறது.

நோய்கள் வராமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இஸ்லாம் தெளிவாக பேசியிருக்கிறது. நோய்கள் என்பன அல்லாஹ்வின் ஏற்பாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் மனித முயற்சிகளுக்கு பின்னால் தான் இறைவனிடத்திலே பொறுப்பச் சாட்டவேண்டும் என்ற கருத்தும் இஸ்லாத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது .

'பரிசுத்தமாக இருப்பவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்" போன்ற குர்ஆனிய வசனங்களும், "சுத்தம் ஈமானின் பாதி", "கொள்ளை நோய் ஓர் ஊரில் இருந்தால் அதற்குள் நுழையாதீர்கள்"போன்ற ஹதீஸ்களும் சுத்தத்தினதும் சுகாதாரப் பழக்க வழக்கங்களதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளதும் அவசியத்தை வலியுறுத்துகின்றன.
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இஸ்லாத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் மோதல் இருந்தது கிடையாது.

அல்லாஹ் "அல்லாஹ்வைப் பயப்படுவார்கள் அறிவாளிகள்" மட்டுமே என்று கூறனான்.அவனது மார்க்கம் எப்படி அறிவையும் ஆராய்ச்சியையும் எதிர்க்க முடியும்?

ஐரோப்பாவின் மத்திய காலப்பிரிவில் மதத்துக்கும் விஞ்ஞானத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால் விஞ்ஞானக் கருத்துக்களை முன்வைத்த விஞ்ஞானிகள் மத அறிஞர்களால் தண்டிக்கப்பட்ட வரலாறு உலகறிந்த உண்மையாகும்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகத்தை அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் ஆட்சி செய்த காலம் ஒன்றிருந்தது. ஹாரூன் ரஷீத், மாமூன் போன்ற கலீபாக்கள் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கினார்கள்.

இப்னு சீனா, இப்னுல் ஹைதம், இப்னு ருஷ்த் போன்ற விஞ்ஞானிகள் முழுக்க முழுக்க குர்ஆன் சுன்னாவின் ஊக்குவிப்பால் உந்தப்பட்டவர்கள்.அவர்கள் எழுதிய பல நூல்கள் தான் 16ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக இருந்தன.

கோர்டோவா,பக்தாத்,டமஸ்கஸ் பல்கலைக் கழகங்கள் தான் நவீன ஐரோப்பாவின் அறிவியல் எழுச்சிக்கு வித்திட்டன என்பதை உலகமே ஏற்றுக்கொள்கிறது.

எனவே இந்த அவன்கலவின் கார்டூன் இஸ்லாத்துக்கு எவ்வகையிலும் பொருத்தமானதல்ல.

ஆனால், முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற சிலர் உலகக் கல்வியைக் கற்பது துன்யாவுடைய கல்வியைக் கற்பது என்றும் நோய் எதிர்ப்பு முயற்சிகளான Vaccination போன்றன கூடாது என்றும் கூறிக்கொண்டிருந்தால், நவீன உலகத்தில் விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கின்ற நல்ல பகுதிகளைக் கூட ஏற்காமல் உதாசீனம் செய்து கொண்டிருந்தால் இஸ்லாமும் இப்படிப்பட்ட ஒரு குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

நவீன விஞ்ஞானத்துக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.நவீன விஞ்ஞானத்தோடு நாஸ்திகமும் சுயநலமும் கலக்கின்ற பொழுது அது நிராகரிக்கப்பட வேண்டும். ஆனால் நவீன விஞ்ஞானத்தோடும் தொழில்நுட்பத்தோடு அல்லாஹ் பற்றிய பயமும் சமூக உணர்வும் மனித நேயமும் கலக்கின்ற பொழுது அந்த விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இபாதத் ஆகவும் கட்டாயக் கடமையாகவும் மாறுகின்றன.

எனவே தக்வா எனும் இறை பக்தியின் பின்புலத்தில் அமைந்த விஞ்ஞான முன்னேற்றம் தான் மனித சமுதாயத்தின் எழுச்சிக்கு நிச்சயமாக வழிவகுக்கும். அந்த விஞ்ஞானத்தை இஸ்லாமிய மயப்படுத்தி சமுதாயங்களுக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பை நாம் சுமந்து இருக்கிறோம்.

1 கருத்துரைகள்:

all in one bro in practical

Post a comment