Header Ads



வியூகங்களை வகுப்பதில் பஸில் தீவிரம், முஸ்லிம் வேட்பாளர்களை பட்டியலில் இட பிள்ளையான் தரப்பு ஆட்சேபம்

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன முன்னணி தனது பங்காளிக் கட்சிகளுக்கு வேட்புமனுக்களை பகிர்வதில் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு பதுளை ,வன்னி மாவட்டங்களில் தலைமை வேட்பாளர் நியமனத்தை வழங்கினாலும் பொலனறுவைக்கு வழங்குவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது. பொலனறுவை மாவட்ட தலைமை வேட்பாளராக தம்மை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரி விடுத்த கோரிக்கைக்கு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பே இதற்கான காரணமாகும்.இதனால் மைத்ரியை தேசியப்பட்டியலில் நியமிக்க பேசப்பட்டது.ஆனால் தேசியப்பட்டியலில் வர தமக்கு இஷ்டமில்லையென மைத்ரி திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

மறுபுறம் மட்டக்களப்பில் பிள்ளையான் தரப்பினரை தாமரை மொட்டு கட்சி சார்பில் தேர்தலை எதிர்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.அதற்கு பிள்ளையான் தரப்பு முதலில் சம்மதித்தபோதும் பின்னர் முஸ்லிம் வேட்பாளர்களை பட்டியலில் இட ஆட்சேபம் தெரிவித்தது.இதனால் அங்கு தனி அணியாக தனித்து இறங்குவது பற்றி பிள்ளையான் தரப்பு ஆலோசித்து வருகிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வடக்கின் மாவட்டங்களில் போட்டியிட ஆலோசித்து வருகிறது.வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிட தாமரை மொட்டு பெரிதும் ஆர்வம் காட்டாத நிலையில் வெற்றிலை சின்னத்தில் அங்கு களமிறங்க சில அரசியல் பிரமுகர்கள் முயற்சிகளை எடுத்துவருவதாக தெரிகிறது.

மலையகத்தில் நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து ஆசனங்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருந்தபோதும் அவர்களுக்கு நுவரெலியாவில் 3 இடங்களையும் கண்டியில் ஒரு இடத்தையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சில மாவட்டங்களில் இ தொ கா சேவல் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவது குறித்தும் பேசப்படுகிறது.

இதேவேளை தாமரை மொட்டு அரசியல் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் ஒதுக்கீடு தொடர்பிலும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.தேசியப்பட்டியல் தேவையாயின் அது தொடர்பில் எழுத்துமூலம் கோரிக்கை முன்வைக்கும்படி பொதுஜன பெரமுன கட்சித் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது

எவ்வாறாயினும் ஏராளமான காட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி என்பதால் சிற்சில ஏற்பாடுகளை செய்து அனைவரையும் சமாளிக்கும் வகையில் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச வியூகங்களை வகுத்து வருகிறாரென மேலும் அறியமுடிந்தது. SIVARAJA

No comments

Powered by Blogger.