Header Ads



ஜனாஸாவின் போது கீழ்வரும் ஒழுங்குகளை, கடைபிடிக்குமாறு ACJU கட்டாய வேண்டுகோள்


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

முழு உலகமும் பாரிய சோதனைக்குட்பட்டுள்ளதை நாம் அறிவோம். கொரோனா வைரஸ் காரணமாக நாளாந்தம் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தும் பலர் நோய்க்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதனால் பல நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கோடிக்கணக்கானோர் வீடுகளில் முடங்கியுள்ளனர். நமது நாட்டிலும் அன்றாட செயற்பாடுகள் முடங்கியுள்ளன.

குறித்த பயங்கர நோயிலிருந்து நாட்டையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு காத்திரமான  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்கள் நாட்டை உண்மையாக நேசிக்கும் பிரஜைகள்  என்ற வகையில் அரசாங்கத்தின் சட்டதிட்டங்களை மதித்து மஸ்ஜித்களில் ஐங்காலத் தொழுகைகளையும், ஜுமுஆவையும் நிறுத்தியுள்ளனர். ஒன்று கூடல்களையும் தவிர்ந்துள்ளனர். அத்துடன் முஸ்லிம்கள் நாட்டு மக்களையும்,  நாட்டையும் பாதுகாக்க ஒத்தாசையாக இருந்துவருகின்றனர். 

இந்நிலையில், அல்லாஹ்வின் நாட்டப்படி  நாட்டில் மரணம் சம்பவிக்கும்போது, பர்ளு கிபாயாவான ஜனாஸாவின் இறுதிக்கிரிகைகளுக்காக மக்கள் ஒன்று சேரும் நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அதனால் மக்களுக்கு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுவதனால் கீழ்வரும் ஒழுங்குகளைக் கடைபிடிக்குமாறு சகல முஸ்லிம்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பணிவாகவும் கட்டாயமாகவும்  வேண்டிக் கொள்கின்றது.

உடனடியாக பக்கத்திலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு மரணம் சம்பவித்தது தொடர்பில் தகவல் வழங்குதல்.
பொதுமக்களுக்கு ஜனாஸா அறிவித்தலை வழங்கும்போது அதிகமானோர் ஒன்று சேரமுடியாத நிர்ப்பந்தம் நிலவுவதால் வீடுகளில் இருந்தவாறே துஆ செய்யுமாறு வேண்டிக் கொள்ளல்.
ஜனாஸாத் தொழுகைக்கு பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ள  எண்ணிக்கையிலுள்ளோரை மாத்திரம் அழைத்துச் செல்லல்.
ஜனாஸாவின் உறவினர்கள் ஒன்று சேரும் போதும் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுதல்.
ஜனாஸாவைக் குளிப்பாட்டுபவர்களும் கபனிடுபவர்களும், ஜனாஸாவை பின்தொடர்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசங்களை அணிந்துகொள்ளல்.
மஸ்ஜிதுடைய வளாகத்தில் ஜனாஸாத் தொழுகையை நடாத்துதல்.
தொழுகைக்காக ஸப்பில் நிற்கும் போது ஒன்று சேர்ந்து நிற்பதே முறையாகும். எனினும், ஏதேனும் தகுந்த காரணத்திற்காக இடைவெளி விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. எனவே, ஒருவர் மற்றவரிலிருந்து சற்று தள்ளி நின்று தொழுதல்.
கப்ரில் நல்லடக்கம் செய்யும்போது தேவையானவர்கள் மாத்திரம் அருகில் இருப்பதுடன், மற்றவர்கள் சற்று தூரமாக இருத்தல்.
நல்லடக்கம் செய்தவுடன் அனைவரும் ஜனாஸாவிற்கு துஆ செய்துவிட்டு அவசரமாகப் பிரிந்து செல்லல். முஸாபஹா செய்வதைத் தவிர்த்தல்.

இவ்விடயங்களை பேணி நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  அனைவரையும் வேண்டிக் கொள்கின்றது.

குறிப்பு: “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” (ஸ_ரத்ததுல் பகரஹ்-185) என்பது போன்ற அல்குர்ஆன் வசனத்தையும், 'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். (ஸஹீஹுல் புகாரி-39) என்ற நபிமொழியையும், மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் அடிப்படையாக வைத்தே, மேற்கூறிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றது.


அஷ்ஷைக் எம்.எல்.எம் இல்யாஸ்
செயலாளர் - பத்வாக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

1 comment:

  1. 1. For Travellers: Combining prayers , Shortening prayers.
    2. Making Masah (wiping over shocks) For Travellers 3days and Residence
    1 day
    3. When rains heavily calling Adhan (salloo buyoothikum)..

    and many more comforts are given in Islam to make our life easier. But many of do select hard way due to our ignorance.

    ReplyDelete

Powered by Blogger.