Header Ads



கொரோனா ஏற்பட்டதை, மறைத்தால் 6 மாத சிறைத் தண்டனை

(எம்.எப்.எம்.பஸீர்)

யாரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனை வெளிப்படுத்தாமல் பொது மக்களிடையே நடமாடுவாராயின்,  அந்த நோயை பரப்ப  முயற்சிப்பாராயின் அந் நடவடிக்கைகளும் அந் நிலைமையை அறிந்தும் வேறு ஒருவர் அதனை மறைப்பாறாக இருப்பின் அதுவும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக் குரிய குற்றமாகும் என  சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

அவ்வாறு பொறுப்பற்று செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகையோர் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.

கொரோனா மருத்துவ கண்காணிப்பை நிராகரிப்பதும் அதே தண்டனையை பெறத் தக்க குற்றமாகும். 

இந் நிலையில் அது குறித்து செயற்பட அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் பொலிஸ் தலைமையகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறிய பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, தொற்று நோய் தடுப்பு விவகாரத்தை கையாளவென  பொலிஸ் தலைமையகம் விஷேட  படையணியை அமைத்துள்ளதாகவும் கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகரவுக்கு  0718591864 அல்லது 0112435271 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக வழங்க முடியும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இந் நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று குறித்த தகவல்களை வழங்க மேலதிக விஷேட 5 தொலைபேசி இலக்கங்களை பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 499 பொலிஸ் நிலையங்களிலும் தலா 7 பேர் கொண்ட விஷேட குழு, குறித்த தகவல்கள் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள படையணியின் ஆலோசனைக்கு அமைய செயற்பட  தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவினால்  ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.